1.5 காப்பியப் பகுப்பும் கதையும்

சேக்கிழார் பெரியபுராணத்தின் புற வடிவு அமைப்பில் அவருக்கு முந்தைய காப்பிய மரபை ஓரளவு பின்பற்றி உள்ளார். காண்டம், இலம்பகம், சருக்கம் முதலியன காப்பியங்களைப் பாகுபடுத்தும் உட்பிரிவுகளின் பெயர்கள் ஆகும். காண்டம் சிலப்பதிகாரத்திலும், இலம்பகம் சீவக சிந்தாமணியிலும் பயின்று உள்ளன. இதே போல் பெரியபுராணக் கதை அமைப்பைச் சேக்கிழார் சருக்கம் என்ற பெயரில் வகைப்படுத்தி உள்ளார்.

1.5.1 காப்பியப் பகுப்பு

பெரியபுராணம் பதின்மூன்று சருக்கங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

இந்தப் பதின்மூன்று சருக்கங்களில் முதல் சருக்கமும், பதின்மூன்றாம் சருக்கமும் சேக்கிழார் தாமே படைத்துக் கொண்டவை. முதல் சருக்கம் கயிலைமலைச் சிறப்பினைக் கூறும் முகமாகத் திருமலைச் சருக்கம் என்று கூறப்பட்டது. பதின்மூன்றாம் சருக்கம் சுந்தரர் வெள்ளை யானை மீது ஏறிக் கயிலாயம் செல்வதை விவரிக்கும் முகமாக வெள்ளானைச் சருக்கம் எனப்பட்டது. ஏனைய பதினொரு சருக்கங்கள், திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதல் சீரையே பெயராகப் பெற்றவை. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் பதினொரு பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் முதல் சீர், அல்லது முதல் ஓரிரு சீர்கள், அல்லது பாடலின் முதல் அடி இவற்றின் பெயரால் பெரியபுராணச் சருக்கங்களின் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியபுராணப் பாடல்கள் பெரும்பாலும் விருத்தப் பாக்களால் ஆனவை. மொத்தப் பாக்களின் எண்ணிக்கை - 4286. இவற்றுள் கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலித்துறை முதலியனவும் அடங்கும்.

இப்புராணத்துள் நாயன்மார் அறுபத்து மூவரின் வரலாறுகள் பாடப்பட்டுள்ளன. இவரல்லாது ஒன்பது தொகையடியார் வரலாறும் கூறப்பட்டுள்ளது. தொகையடியார் என்பது குறிப்பிட்ட அடியார்களின் குழுக்களைக் குறிப்பது. அவர்கள் வருமாறு:

1) தில்லை வாழ் அந்தணர்

2) பொய் அடிமையில்லாத புலவர்

3) பத்தராய்ப் பணிவார்

4) பரமனையே பாடுவார்

5) சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்

6) திருவாரூர்ப் பிறந்தார்

7) முப்போதும் திருமேனி தீண்டுவார்

8) முழுநீறு பூசிய முனிவர்

9) அப்பாலும் அடிச்சார்ந்தார்

1.5.2 அடியார் புராணம்

பெரியபுராணத்துள் இடம்பெற்றுள்ள அடியார்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் குறிப்பாக இங்கே தரப்பட்டுள்ளன.

அதிபத்த நாயனார்

இவர் மீன் பிடிப்பவர். முதலில் கிடைக்கும் மீனைச் சிவனுக்குப் படைப்பவர்; அந்த முறையில், நவரத்தினம் இழைத்த பொன் மீனைச் சிவனுக்குப் படைத்தவர்.



இயற்பகை நாயனார்

இவர் சிவன் அடியார்க்குத் தன் மனைவியையே தானமாகத் தந்தவர்.


கண்ணப்ப நாயனார்

இவர் வேடர். சிவபெருமான் கண்களிலிருந்து குருதி வழிவதைக் கண்டு தம் கண்களைத் தோண்டி எடுத்துச் சிவனுக்கு அளித்தவர்.

"நில்லு கண்ணப்ப"

கழற்சிங்க நாயனார்

சிவ பூசைக்குரிய பூவை மோந்ததற்காகத் தன் மனைவியின் கையை வெட்டியவர்.


சிறுத்தொண்ட நாயனார்

சிவன் அடியார் உணவு உண்பதற்காகத் தன் ஒரே மகனையும் அரிந்து கறி சமைத்தவர்.

திருஞான சம்பந்தர்

உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவர். திருத்தலங்கள் தோறும் சென்று தேவாரம் பாடியவர்.

திருநாவுக்கரசர்

சைவ சமயத்தில் சேர்ந்ததற்காக மன்னன் தந்த பல தண்டனைகளில் இருந்து சிவன் அருளால் தப்பித்தவர். திருக்கோயில்களில் உழவாரத் தொண்டு செய்தவர்; தேவாரம் பாடியவர். அப்பர் என்று போற்றப்பட்டவர்.

திருநாளைப்போவார்

தில்லை நடராசரைத் தரிசிக்க வேண்டித் தீயில் மூழ்கி எழுந்தவர்.  நந்தனார் என்னும் பெயர் பெற்றவர்.


திருநீலகண்ட நாயனார்

மனைவியின் சபதத்தால் அவளைத் தீண்டாது முதுமை வரை இல்லறம் நடத்தி இறைவன் அருளால் இளமை பெற்றவர்.
 

திருமூல நாயனார்

இடையன் உடலில் தாம் புகுந்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரம் எனும் நூலைப் படைத்தவர்.


நமிநந்தியடிகள்

தண்ணீரால் விளக்கு எரித்தவர்.

மங்கையர்க்கு அரசியார்





 

திருஞான சம்பந்தரை வரவழைத்து, பாண்டிய நாட்டைச் சைவ சமய நாடாக்கியவர்.

மூர்க்க நாயனார்

சூதாட்டத்தால் கிடைத்த பொருளைக் கொண்டு சிவன் அடியாரை வழிபட்டவர்.

மெய்ப்பொருள் நாயனார்

வஞ்சனையால் தம்மைக் கொல்லும் சிவ வேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரை விட்டவர்.