1.6. காப்பியப் பங்களிப்பு

பெரியபுராணம் தமிழ் இலக்கிய உலகிற்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் அளித்த பங்களிப்பு அனைவராலும் போற்றுவதற்கு உரியது.

1.6.1. சிலம்பும் பெரியபுராணமும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரியபுராணத்திற்குக் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. சங்க காலத்தை அடுத்த காலத்தில் சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் இளங்கோவடிகளால் படைக்கப்பெற்றது. தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களைத் தலைமையாகக் கொண்டு தமிழ் மணம் கமழ அக்காப்பியம் படைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் அமைந்த தமிழ்க் காப்பியம் ஒன்று, அதன் பிறகு பல நூற்றாண்டுகள் வரை படைக்கப்படவில்லை. சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்கள் தழுவல் காப்பியங்களாகவே அமைந்தன. இதன் பின்னர் 12ஆம் நூற்றாண்டில்தான் பெரியபுராணம் தமிழ்க் காப்பியமாக உருவாக்கப்பட்டது. சிலப்பதிகாரம், பெரியபுராணம் இரண்டுமே காப்பிய இலக்கணங்களுக்கு உட்படாது புதிய ஒரு காப்பிய மரபினை வெளிப்படுத்திய பெருமைக்கு உரியவை.

1.6.2. அடியார்களும் பெரியபுராணமும்

தமிழில் இயற்றப்பட்ட பெரும் பகுதிக் காப்பியங்கள் வட மொழியிலிருந்து தழுவி இயற்றப்பட்டவையே. இவற்றிலிருந்து விதிவிலக்காகத் தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டது பெரியபுராணம். தமிழ்நாட்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பாடுபொருளாகக் கொண்டது. ஏனைய காப்பியங்களும் புராணங்களும் புராண மரபுப்படி கடவுளர் செயல்களையே பெரும் பகுதி விவரிப்பன. பெரியபுராணம் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு முதன்மை கொடுத்தது; ஒருவகையில் அடியார்களின் வரலாறாக இது அமைக்கப்பட்டது.

பல்லவர் காலம் முதல் நானூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகள் துண்டு துண்டாக வழங்கி வந்த அடியார் வரலாற்றை ஒருங்கிணைத்துக் காப்பியமாகப் பாடப்பட்டதே பெரியபுராணம் ஆகும். வாய்மொழியாக மக்களிடம் வழங்கி வந்த நாயன்மார்களின் இந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறும் ஒன்றாகவும் பெரியபுராணம் செயல்பட்டுள்ளது.

1.6.3. சமுதாயமும் பெரியபுராணமும்

தமிழ் இலக்கிய வரலாற்றுக்குச் செய்த பங்களிப்புப் போலத் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பெரியபுராணம் தொண்டாற்றி உள்ளது. மனிதர்களைக் கோயிலுக்குள் கொண்டு சென்ற பெருமை பெரியபுராணத்திற்கு உண்டு. நாயன்மார் அறுபத்து மூவரின் உருவங்களைக் கோயிலில் வைத்து வழிபாடு செய்வதற்குப் பெரியபுராணமே காரணம் ஆயிற்று. வாழ்ந்து மறைந்த சிறந்த மனிதர்களைக் கோயிலிலே வழிபட வைத்தது. சாதியால் பிளவுபட்டு நின்றது சோழர் காலச் சமுதாயம். சமுதாயத்தின் கடைக்கோடியில் தீண்டத்தகாதவராக இருந்தவரையும் கோயிலில் இடம்பெறச் செய்தது.

பெரியபுராணம் அனைத்துச் சாதியினரையும் சிவ வழிபாட்டின் மூலம் ஒருங்கிணைத்தது. சிவனுக்கு முன்னர்ச் சாதி வேறுபாடு இல்லை என்பதை உணர வைத்தது. பசுமாட்டினை உரித்துத் தின்னும் சாதியில் இழிந்தவரே ஆயினும் அவரையும் இறைவனாக எண்ணி ஏனைய மனிதரை வணங்க வைத்தது.

சமுதாயப் படிநிலையில் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் வேடர், புலையர், வண்ணார், குயவர் ஆகியோர். இவர்களுக்கு உயர்ந்த சாதியார்க்கு இணையான மதிப்பை வழங்கியது பெரியபுராணம். சிவன் அடியார்களைச் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக விவரித்தது, இதன் வாயிலாக, சாதி அடிப்படையிலான சமுதாயத்தில் சாதியற்ற சமத்துவ விதை விதைத்தது.

இவ்வாறாக இலக்கிய வரலாற்றிற்கும் சமுதாயத்திற்கும் பல்வேறு நிலைகளில் பெரியபுராணம் பங்களிப்புச் செய்துள்ளதை அறிய முடிகிறது.