2.1 இலக்கிய நோக்கில் பெரியபுராணம் |
அறிவும், மன உணர்வும், கற்பனையும் கலந்து செயல்பட்டு இன்பம் தருவன அழகுக் கலைகள் எனப்படும். இலக்கியம் அழகுக் கலைகளுள் தலை சிறந்தது. ஓர் இலக்கியத்தின் சிறப்பை நான்கு வகையாகப் பொருள் கொண்டு அறிய முடியும். அவை புதுமை, பெருமை, பொதுமை, பொருண்மை எனப்படும். இவற்றைப் பற்றி இலக்கியக் கலை எனும் நூல் விரிவாக விளக்கி இருக்கிறது. இந்த நான்கு வகையாலும் பெரியபுராணம் சிறப்புடன் திகழ்வதை உணர முடியும். |
|
புதுமை இருவகைப்படும். பாடுபொருள், உணர்த்தும் முறை என்பன அவை. பெரியபுராணம் பாடுபொருளால் புதுமையானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரியபுராணத்திற்கு முன்பு அடியார் வரலாற்றைக் காப்பியமாக யாரும் பாடவில்லை. உணர்த்தும் முறையிலும் காப்பியம் சிறந்துள்ளது. முன்னைய காப்பிய இலக்கணங்களிலிருந்து மாறுபட்டுப் புதுமரபை உண்டாக்கி உள்ளது. |
|
ஓர் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பரந்துபட்ட மனித இயற்கையைச் சித்திரிப்பதாக இருக்க வேண்டும். உலகக் கண்ணோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள அடியார்களின் வாழ்க்கை இவற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இதுவே இலக்கியத்தின் பெருமை ஆகும். இதனால் பொருண்மை (இலக்கிய உள்ளடக்கம் அல்லது பாடுபொருள்) சிறப்புடையதாகிறது. புதுமை, பொதுமை, பொருண்மை என்ற மூன்றிலும் சிறந்து விளங்கும் காரணத்தால் பெரியபுராணம் உலகப் பொதுமைப் பண்பு உடையதாகச் சிறப்படைந்துள்ளது. இவ்வாறு இலக்கியக் கலையில் சிறந்து விளங்கும் பெரியபுராணத்தின் கலைச் சுவையை இனி வரும் பகுதியில் விரிவாகப் படிப்போம். |