2.4. அணிநலன்கள்

கவிதைக்குப் பொலிவு ஊட்டுவதாகவும், உணர்ச்சிக்கு அடிப்படையாகவும் திகழ்வது கற்பனை. இக்கற்பனையே பல அணிநலன்களுக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. மங்கைக்கு அணிகலன்கள் (நகைகள்) அழகு ஊட்டுவது போல, கவிதைக்கு அணிநலன்கள் அழகு ஊட்டுகின்றன என்பர் அறிஞர். கவிஞர்கள் தம் கருத்துகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அழகாகவும் உரைப்பதற்கு அணிகளே துணை செய்துள்ளன என்று திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். இத்தகு அணிநலன்கள் பலவற்றைச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் அமைத்துள்ளதைப் படித்து மகிழ முடியும். ஒரு சில அணிகளை இங்கே காண்போம்.

2.4.1 சொல் பின்வரு நிலையணி

ஒரு முறை வந்த சொல் வேறு வேறான பொருளில் மீண்டும் மீண்டும் வருவது சொல் பின்வரு நிலையணி எனப்படும். இந்த அணிக்குத் தக்க எடுத்துக்காட்டாகத் தடுத்தாட் கொண்ட புராணத்தில் வரும் பேர்பரவை எனத் தொடங்கும் பாடலைக் (148) கூறலாம். இப்பாடலில் உள்ள பரவை என்ற சொல் மீண்டும் மீண்டும் வேறு வேறு பொருளில் வந்ததை முன்பே கண்டோம்.

(காண்க: சொல்லாட்சி - சொல்லும் பொருளும்)

2.4.2 சொல் பொருள் பின்வரு நிலையணி

செய்யுளில் ஓரிடத்தில் வந்த சொல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வந்து கருத்தை விளக்குவது சொற்பொருள் பின்வரு நிலையணி எனப்படும். இதற்குப் பரவையாரின் இளமை அழகை வருணிக்கும் சேக்கிழாரின் பாடலைச் சான்றாகக் கூறலாம்.

மான்இளம் பிணையோ தெய்வ
     வளர்இள முகையோ வாசத்
தேன்இளம் பதமோ வேலைத்
     திரைஇளம் பவள வல்லிக்
கான்இளம் கொடியோ திங்கள்
     கதிர்இளம் கொழுந்தோ காமன்
தான்இளம் பருவம் கற்கும்
     தனிஇளம் தனுவோ என்ன

               (பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 134)

(பிணை = பெண்மான்; முகை = மொட்டு; வேலை = கடல்;  திரை = அலை; தனு = வில்)

பரவையார் தெய்வாம்சம் மிக்க இளமையோடு காட்சி தருகின்றார். அவரின் இளமை எவற்றை நினைவூட்டுகிறது என்பதைச் சேக்கிழார் கற்பனை செய்து பார்க்கிறார். இளைய பெண் மான் நினைவிற்கு வருகிறது.  இளைய அரும்பு மணம் கமழ்கிறது; தேனின் இளம் சாறு இனிக்கிறது; காட்டில் உள்ள இளம்கொடி காற்றில் அசைந்து ஆடுகிறது;  திங்களின் இளம் பிறை காட்சிக்கு இனிமையாகிறது.

இளமையும் அழகும்

மான் பிணையின் இளமையும், முகையின் இளமையும், தேனின் இளமையும், கொடியின் இளமையும், பிறையின் இளமையும் அழகு செய்கின்றன. இவையாவும் பரவையார் அழகுக்கு ஒப்பாகின்றன. இத்தகு இளமை காமன் வில் பயிலும் இளமை ஆகின்றது. இவ்வாறு இளமை என்ற பொருள் தரும் இளம் என்ற சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வந்து பாடலுக்கு அழகு சேர்ப்பதை உணர முடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

ஞானசம்பந்தர் பிறந்த ஊரில் உள்ள மரங்கள் என்ன செய்தன?

விடை

2.

பரவை என்ற சொல்லின் பொருள்களைப் பட்டியலிடுக.

விடை

3.

எவ்வெவற்றின் இளமை எல்லாம் பரவையார் இளமைக்கு ஒப்பாகும்?

விடை

4.

சேரர் தலைநகரில் எழும் ஒலிகளுள் மூன்றினைச் சுட்டுக.

விடை