4.2 கம்பரின் கவித்திறன்

ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழ்வதற்குக் காரணம் அதன் கவிதைப் பண்பு என்று கூறுவர். இலக்கியத்தின் பாடு பொருளும் நோக்கமும் காரணங்கள்தாம். என்றாலும் இவற்றையும் தாண்டிக் கவிதைப் பண்புகள் தலைமைக் காரணங்கள் ஆகின்றன. கம்பராமாயணம் காலம் கடந்து வாழ்வதற்குக் கதை மட்டுமே காரணம் அன்று. அக்கதையைச் சொன்ன விதமும் காரணம் ஆகும். கவிதைப் பண்பு சிறக்க அமைவதற்குத் தேர்ந்த சொல்லாட்சி ஒரு காரணம். இனிய ஓசை நயம் இன்னொரு காரணம். வளமான கற்பனை பிறிதொரு காரணம். கற்பனை விரியும் வருணனைகள், உவமைகள், உணர்ச்சிகள் கவிதையைச் சிறக்கச் செய்யும். செய்யுளுக்கு உரிய அணிநலன்கள் கவிதைக்கு மெருகு சேர்க்கும். இவை யாவும் கம்பரின் கவிதையில் உண்டு. எனவே தான் கம்பர் கவித்திறன் கற்றவரால் பாராட்டப் பெறுகிறது. கம்பரின் கவிப்பண்பை விளக்குவதே இப்பகுதியின் நோக்கம்.

4.2.1 சொல்லாட்சி

கவி புனையும் கம்பரிடம் தமிழ்ச் சொற்கள் ஓடி வந்து எம்மையும் கவிதையில் சேர்த்து விடு, சேர்த்து விடு என்று கெஞ்சுமாம். இவ்வாறு ஒரு நாட்டுப்புற வழக்கு உண்டு. கம்பரின் கவிதையில் சொற்சேர்க்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இடத்திற்கும், சூழலுக்கும், காலத்திற்கும் தக்கவாறு சொற்கள் கவிதையில் அமைந்த விதம் படித்து இன்பம் அடைவதற்கு உரியது.

'கைவண்ணம்' என்னும் சொல்

கம்பர் வண்ணம் என்ற சொல்லை வேறுவேறு பொருள்களில் கையாண்டு ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். இச்சொல்லை வைத்தே பாதி இராமாயணக் கதையைக் கூறி முடித்து விடுவதாக அறிஞர்கள் கூறுவர். அப்பாடல் வருமாறு:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
     இனிஇந்த உலகுக் கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்றோர்

     துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
     மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
     கால்வண்ணம் இங்குக் கண்டேன்

(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = உய்யும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்; மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் = கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)

இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகை உயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம்  (திறமை) என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம்.

மையோ மரகதமோ (இராமனின் அழகு)

கம்பரே சொற்கள் கிடைக்காமல் தடுமாறிய இடம் உண்டு. இவ்வாறு சொன்னால் நம்ப முடிகிறதா? இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். கவிதையால் வடிக்க இயலாத அழகு இராமனின் அழகு. இராமனின் அழகுக்குப் பல உவமைகளை வரிசையாகக் கூறுகிறார். என்றாலும் அந்த அழகை வார்த்தைக்குள் கொண்டு வரமுடியவில்லை. இறுதியில் ‘ஐயோ’ என்று கம்பர் மனம் தளருகிறார்.

பாடல் இதோ:

வெய்யோன்ஒளி தன்மேனியின்
     விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாளொடும்

     இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி
     கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர்
     அழியாஅழகு உடையான்.

(கம்ப. அயோத்தியா காண்டம், கங்கைப் படலம், 1.)

(வெய்யோன் = சூரியன்; சோதி = ஒளி; பொய்யோ எனும் இடையாள் = இருக்கிறதோ இல்லையோ என்று ஐயப்படுவதற்குரிய மிகச் சிறிய இடையை உடைய சீதை; இளையான் = இலக்குவன்; மை = கண்ணில் பூசும் அஞ்சனமாகிய மை; மரகதம் = பச்சைக் கல்; முகில் = மேகம்; வடிவு = உருவம்)

கைகேயி சூழ்ச்சியாலும் வரத்தாலும் இராமன் வனவாசம் (காட்டு வாழ்க்கை) மேற்கொள்கிறான். அயோத்தியை விட்டு நீங்கிக் கானகத்திடையே செல்லும் இராமனின் பேரழகைக் கம்பர் இப்பாடலில் வருணிக்கிறார். சூரியன் ஒளி இராமனின் உடல் ஒளியினால் மறைகிறது. அப்படிப்பட்ட சோதியை உடைய உடம்பினைக் கொண்டவன் இராமன். இவன் சீதையோடும் இலக்குவனோடும் காட்டின் இடையே நடந்து செல்கிறான். அவன் உடம்பின் அழகு புலவரைக் கவர்கிறது. இராமன் அழகினை மை என்று கூறலாமா என்று நினைக்கிறார் புலவர். இல்லை இல்லை அது மரகதக் கல்லுக்குத்தான் உவமை ஆகும் என்று எண்ணுகிறார். மீண்டும் ஐயம் ஏற்படுகிறது. மையும் இல்லை மரகதக் கல்லும் இல்லை, கடல் போன்ற நீல நிறத்தினை உடையவன் என்கிறார். அதிலும் நிறைவடையாது மழை முகில் போன்ற நிறத்தை உடைய அழகன் என நினைக்கிறார். எந்த உவமையிலும் அவன் அழகைக் கூற முடியவில்லை. மனம் சோர்ந்து ஐயோ இவன் உருவம்தான் அழியாத அழகுடையதாக இருக்கிறது என்று கூறுகிறார். கம்பர் இராமன் அழகை வருணிக்கும் சொல்லாட்சி படித்து இன்புறத்தக்கது.

4.2.2 ஓசை நயம்

குறிப்பிட்ட சில எழுத்துகளைப் பயன்படுத்தும்போது, ஓசை நயம் தோன்றுகிறது. சான்றாக, மெல்லின எழுத்துகள் மிகுந்து வரும் கவிதை மெல்லிய ஓசையைத் தரும்; மென்மையான சூழலை விளக்க இத்தகு எழுத்துகள் அமைந்த சொற்களை மிகுதியும் பயன்படுத்துவர். அதே போல் போர் முதலிய நிகழ்ச்சிகளை வருணிக்க வல்லெழுத்துகள் மிகுதியாக உள்ள சொற்களைப் பயன்படுத்துவர். வல்லெழுத்து வல்லோசை மிகுந்து, போரின் கடுமையை வெளிப்படுத்தும். இவ்வாறு சூழலுக்குத் தக்கவாறு ஓசை நயம் தோன்றக் கவி பாடுவதில் கம்பர் வல்லவர்.


வஞ்சியென நஞ்சமென வந்த வஞ்சமகள் (சூர்ப்பணகையின் நடையழகு)

அழகிய உருவம் அமைந்த தோற்றத்துடன் சூர்ப்பணகை வருகிறாள். அரக்கி உருவத்தை மறைத்து வஞ்சனை உள்ளத்தோடு வருகிறாள். மிக அழகிய உருவம்; அதே நேரத்தில் வஞ்சக உள்ளம்; இதனைக் கம்பர் தமக்கே உரிய கவித்திறத்துடன் புனைந்துள்ளார்.

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்

(கம்ப. ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப்படலம், 31.)

(பஞ்சி = செம்பஞ்சுக் குழம்பு, கை சிவக்கப் பூசப்படும் ஒரு கலவை; ஒளிர் = ஒளிவிடும்; விஞ்சு = மிக்க; குளிர் = குளிர்ச்சி; பல்லவம் = தளிர் / கொழுந்து; செஞ்செவிய = மிகவும் சிவந்த; கஞ்சம் = தாமரை; அம்சொல் = அழகிய / இனிய சொல்; மஞ்ஞை = மயில்; வஞ்சி = பெண் / கொடி; நஞ்சம் = விடம்; வஞ்சம் = வஞ்சனை)

சூர்ப்பணகை நடந்து வருகிறாள்; மின்னல் கொடி போல வருகிறாள்; அன்னம் போல நடந்து வருகிறாள்; இனிமையான சொல்லைப் பேசும் மயில் போல அசைந்து அசைந்து ஒயிலாக நடந்து வருகிறாள்; சிவந்த தாமரை போன்ற பாதங்களை உடைய அவள் நடந்து வருவது போன்ற ஒரு கற்பனையை நம் கண் முன் இப்பாடல் அடிகளே உணர்த்தி விடுகின்றன. மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்! கற்பனையில் உங்கள் முன்னால் ஓர் அழகிய பெண் ஒயிலாக அசைந்து நடந்து வருவது போன்ற ஒரு பாவனை தோன்றுவதை உணர்வீர்கள்.

இவ்வாறு கம்பர் பல்வேறு பாடல்களை ஓசை நயம் தோன்றப் படைத்துள்ளதைப் படித்து மகிழ முடியும்.

உறங்குவாய் உறங்குவாய் (கும்பகர்ணனின் தூக்கம்)

ஓசை நயத்தைப் படித்து இன்புற இன்னும் ஒரு பாடலை எடுத்துக் கூறலாம். யுத்தகாண்டத்தில் முதல் நாள் போரில் இராவணன் தோற்றுத் திரும்புகிறான். தன் தம்பி கும்பகர்ணனைப் போருக்கு அனுப்ப எண்ணுகிறான். எனவே தன் படைவீரர்களுக்குக் கும்பகர்ணனை அழைத்து வருமாறு ஆணையிடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கும்பகர்ணனைப் படை வீரர்கள் எழுப்புகின்றனர். அவர்கள் கும்பகர்ணனை எழுப்பும் நிகழ்ச்சியைச் சுவை மிக்கதாகக் கம்பர் புனைந்துள்ளார். கும்பகர்ணனைக் கையாலும் தடியாலும் உலக்கையாலும் இடித்து இடித்து எழுப்புகின்றனர்.

இதோ அந்தப் பாடலைப் படியுங்கள்.

உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

(கம்ப. யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம், 45.)

(கறங்கு = காற்றாடி; கால தூதர் = எம தூதர்)

உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்களுடைய மாய வாழ்க்கை இன்றோடு வீழ்ச்சி அடையத் தொடங்குகிறது; இதனை எழுந்து நீ பார்ப்பாயாக; காற்றாடி போல வில் பிடித்த எம தூதர்களின் கையில் நிரந்தரமாகக் கிடந்து இனி உறங்குவாயாக என்பதே இப்பாடலின் பொருள் ஆகும். இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். கைகளாலும் கம்புகளாலும் உலக்கையாலும் குத்திக் குத்திக் கும்பகர்ணனை எழுப்பும் அந்த நிகழ்ச்சியை, இப்பாடலின் ஓசை நயம் பாவனையாக வெளிப்படுத்துவதை உணர முடியும். உலக்கையால் குத்துவது போன்று ஓசை அமைந்துள்ளதை உணர முடியும்.

இவ்வாறான பாடல்கள் பல கம்பராமாயணத்தில் அமைந்துள்ளன. படித்து இன்புறுங்கள்.