4.3 வருணனை

கம்பராமாயணக் காப்பியத்தின் உயிர் நாடியே வருணனைத் திறம்தான். கம்பராமாயணக் கவிதைகள் மிகுதியாகப் புனையப்பட்டதற்கு வருணனையே காரணம். நாடு, நகர், ஆறு, மாலை, காலை, காடு என்று பல்வேறு நிலைகளில் இயற்கை வருணனை ஒருபுறமும், நிகழ்ச்சி வருணனை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு காப்பியம் முழுவதும் வருணனைகளால் ஆக்கப்பட்டிருப்பதைப் படித்து அறிய முடியும்.

4.3.1 மருத நில வருணனை

கோசல நாட்டின் வளத்தைக் கம்பர் வருணிக்கிறார். ஐந்து நிலங்களை (மலை, காடு, வயல், பாலை, கடல்) வருணிப்பது புலவர்களின் மரபு. கம்பர் மருத நில (வயல்) வளத்தைக் கற்பனையோடு வருணித்துள்ளார். மருத நிலத்தில் இயல்பாக உள்ளவை எல்லாம் புலவருக்குக் கற்பனையைத் தூண்டுகின்றன. மருத நிலம் அரசனாகக் கம்பரின் கற்பனையில் உருவாகிறது.

அரசனின் அரியணை

தண்டலை மயில்கள் ஆடத்
     தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
     குவளைகண் விழித்து நோக்கத்
தெண்திரை எழினி காட்டத்
     தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
     மருதம்வீற் றிருக்கும் மாதோ

(கம்ப. பால காண்டம், நாட்டுப் படலம், 4.)

(தண்டலை = சோலை; விளக்கம் = விளக்கு; கொண்டல் = மேகம்; முழவு = இசைக்கருவி; ஏங்க = ஒலிக்க; குவளை = மலர்; திரை = அலைகள்; எழினி = திரைச்சீலை; தேம்பிழி = பிழிந்து எடுக்கப்பட்ட தேன்; மகரயாழ் = வீணை; மருதம் = நிலம் / நிலமாகிய அரசன்)

மருத நிலம் செழிப்போடு காணப்படுகிறது. கம்பருக்கு அது அரசன் அரியணையில் வீற்றிருப்பதைப் போலத் தோன்றுகிறது. தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்றி நிற்கின்றன; மேகங்கள் இசைக் கருவிகளை முழக்குகின்றன; மகரயாழ் வாசிப்பது போல வண்டுகள் பாடுகின்றன; நீர் நிலைகளில் எழும் அலைகள் நாடக அரங்கின் திரைச் சீலைகள் போல் காட்சி தருகின்றன; அங்கே மயிலாகிய நாட்டியப் பெண் நடனம் ஆடுகிறாள்; குவளை மலர்கள் ஆகிய விழிகளால் அவையினர் விழித்துப் பார்க்கின்றனர்; இவ்வாறான அரசவையில் மருதமாகிய அரசன் வீற்றிருக்கிறான்.

இவ்வாறாகக் கம்பர் மருத நிலத்தை வருணித்துள்ளார்.

4.3.2 நாட்டு வருணனை

பொதுவாக ஒரு நாட்டின் சிறப்பினைக் குறிப்பிடும்பொழுது அல்லது வருணிக்கும்பொழுது, அங்கு எவையெல்லாம் கிடைக்கின்றன என்று பட்டியலிடுவது மரபு. ஆனால், கம்பர் கோசல நாட்டை வருணிக்கும்பொழுது 'இல்லை இல்லை' என்று சுட்டியே அதன் பெருமையை மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இது கம்பரின் கவிதை உத்தி.

இல்லை இல்லை எதுவுமே இல்லை

கோசல நாட்டில் வறுமை இல்லை; வறியவர்கள் இல்லை, எனவே அங்கு ஈகை என்பதும் இல்லை; பகைவர் இல்லாமையால் அங்கு வலிமை என்ற ஒன்று இல்லை; அந்நாட்டில் பொய் பேசுவோரே இல்லை; எனவே அங்கு உண்மை என்ற ஒன்று இல்லை; அனைவரும் கற்று இருத்தலால் அறியாமை என்று தனியே ஒன்று இல்லை. எவையெல்லாம் இல்லை என்பதைப் படித்து மகிழுங்கள்!

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்
வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்.

(கம்ப. பால காண்டம், நகரப்படலம், 53.)

(வண்மை = ஈகை / வள்ளன்மை; திண்மை = வலிமை; செறுநர் = பகைவர்; வெண்மை = அறிவின்மை; மேவலால் = பொருந்துவதால்)

கம்பர் கற்பனையின் உச்சம் என்று இக்கவிதையைச் சொல்ல வேண்டும். கம்பர் தான் கனவு கண்ட ஒரு நாட்டையே இவ்வாறு வருணித்துள்ளார். இவ்வாறான பாடல்கள் ஏராளமாகக் கம்பராமாயணத்தில் உள்ளன. அவற்றைப் படித்து மகிழலாம்.