4.4 கற்பனை

கம்பராமாயண வருணனைகளுக்கு அடிப்படை கற்பனையே. கம்பர் கவிதையில் சுவை மெருகை ஊட்டுவதில் கற்பனை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. காவிய இன்பமே கற்பனையில்தான் பிறக்கிறது. கம்பராமாயணம் காலந்தோறும் நின்று நிலவுவதற்குக் கம்பர், கற்பனையைச் சொன்ன விதமும் ஒரு காரணம். கம்பர் கற்பனைகள் ஒரு சிலவற்றை இப்பகுதியில் பார்ப்போம்.

4.4.1 அம்பின் செயல்

இராமனுக்கும் இராவணனுக்கும் போர் நடைபெறுகிறது. இறுதியில் இராம பாணம் (இராமனது அம்பு) இராவணன் மார்பைத் துளைத்துச் செல்கின்றது. இராவணன் மரணத்தைத் தழுவுகிறான். கணவன் மாண்டதைக் கண்டு மண்டோதரி புலம்புகிறாள். அம்பு இராவணனின் உடலைச் சல்லடைக் கண்களாக ஓர் இடம் விடாமல் துளைத்துச் சென்றுள்ளது. இதனைக் கம்பர் பாடும் அழகே தனி.

எங்குள்ளது எங்குள்ளது எனத் தேடும் அம்பு

வெள்எருக்கம் சடைமுடியான் வெற்புஎடுத்த
     திருமேனி மேலும் கீழும்
எள்இருக்கும் இடன்இன்றி உயிர்இருக்கும்
     இடம்நாடி இழைத்த வாறோ
கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
     மனச்சிறையில் கரந்த காதல்
உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
     தடவியதோ ஒருவன் வாளி

(கம்ப. யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம், 237.)

(வெள் எருக்கம் = செடி வகை / சிவபெருமான் அணியும் மலர்; வெள்எருக்கம் சடைமுடியான் = சிவபெருமான்; வெற்பு = மலை / கயிலாயமலை; எள் = மிகச்சிறிய வித்து; நாடி = தேடி; வாளி = அம்பு; இழைத்தவாறோ = செய்தவிதமோ; கள் = தேன்; கரந்த = மறைத்த; தடவியதோ = தேடியதோ)

இராவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடக்கிறான். இராமனின் அம்பு இராவணன் உடல் முழுவதும் துளைத்துள்ளதை மண்டோதரி பார்க்கிறாள். சிவபெருமான் உறையும் மலையைக் கைகளால் எடுத்த வலிமை உடையது அவனது திருமேனி. அத்திருமேனியில் எள் இருக்கக் கூட இடம் இல்லாமல் அம்பு துளைத்து உள்ளது. அம்பு இராவணன் உடலில் புகுந்து அவன் உயிர் இருக்கும் இடத்தை மட்டும் தேடவில்லை. இராவணன் சீதையை மனச் சிறையில் வைத்து மறைத்த காதலைத் தேடித் தேடி அம்பு துளைத்து உள்ளதாம். சானகியைப் பற்றிய நினைவைக் கூட அம்பு விட்டு வைக்கவில்லையாம். கம்பர் கற்பனை, கவிதைச் சுவையின் உச்சத்திற்கே படிப்பவரைக் கொண்டு செல்கிறது. இராமன் அம்பு இராவணன் உடல் முழுவதும் துளைத்ததைக் கம்பர் சீதையின் நினைவு எங்குள்ளது? எங்குள்ளது? என்று தேடித் தேடிச் சென்றதாகப் புனைந்துள்ளார்.

4.4.2 அனுமன் கண்ட காட்சி

இலங்கைக்குச் சென்ற அனுமன் சீதையைக் காண்கிறான். இராமனின் கணையாழியைச் சீதையிடம் (மோதிரம்) கொடுக்கிறான். சீதையிடம் இருந்து சூளாமாணியைப் (ஓர் அணி) பெற்றுத் திரும்புகிறான். மீண்ட அனுமன் பிரிவுத்துயரால் வாடும் இராமனை அடைந்து “கண்டேன் சீதையை” என்று கூறுகிறான். இதனைக் கம்பர் கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்று பாடுவார்.

களிநடம் புரியக் கண்டேன்

அடுத்த பாட்டில் ‘நங்கையைக் காணவில்லை’ என்று கூறுவான். பின் எதனைத் தான் கண்டான் அனுமன்? கம்பரின் கற்பனை இதற்கு மறுமொழி தருகிறது.

இதோ பாடல்:

விற்பெருந் தடந்தோள் வீர
     வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆய
     நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பு என்பது ஒன்றும்
     இரும்பொறை என்பது ஒன்றும்
கற்புஎனும் பெயரது ஒன்றும்
     களிநடம் புரியக் கண்டேன்

(கம்ப. சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், 29.)

(தடம் = அகன்ற; வீங்கு = மிக்க; வெற்பு = மலை; தவத்தள் = தவத்தை உடையவள்; ஆய = ஆகிய; இற்பிறப்பு = உயர் குடிப்பிறப்பு; இரும்பொறை = பொறுமை; களிநடம் = களிப்பால் ஆடும் கூத்து)

“வில்லினையும் பெரிய தோளினையும் உடைய வீரனே! நீர் மிக்க, கடல் சூழ்ந்த இலங்கை மலையில் தவத்தை உடையவள் ஆகிய சீதையை நான் காணவில்லை. மாறாக உயர்ந்த குடிப்பிறப்பு என்னும் பண்பும், சிறந்த பொறுமை என்னும் பண்பும், கற்பு என்னும் திண்மையும் ஒருங்கு கூடி மகிழ்ச்சியால் கூத்தாடிக் கொண்டிருந்ததைத்தான் கண்டேன்” என்று அனுமன் கூறுவதாக இப்பாடல் புனையப்பட்டுள்ளது. சீதையைக் காணவில்லை. ஆனால் மானுட குலத்தின் உயர்ந்த பண்புகளை அவ்விடத்தில் கண்டேன் என்று கூறுவது கம்பரின் உயர்ந்த கற்பனையைக் காட்டுகின்றது.

இவ்வாறு கற்பனை வளம் நிறைந்த எண்ணற்ற பாடல்கள் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளன. அவற்றைப் படித்து மகிழுங்கள்.