5.5 காப்பிய அமைப்பும் கதையும்
வில்லி பாரதத்தில் தன்னிகர் இல்லாத காவியத் தலைவனாக எவரைக் கூறுவது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. பாண்டவர்களே தலைமைக் கதை மாந்தர்கள். அவர்களுள் மூத்தவன் தருமன். காப்பியத்தின் போக்குப்படி தருமனே தலைவனாக வேண்டும். பாண்டவரையும் பாரதக் கதையையும் நிகழ்த்திச் செல்பவன் கண்ணன்; திருமாலின் அவதாரம். இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் கண்ணன் காவியத் தலைவனாக வேண்டும். ஆனால் கதைப் போக்கு கண்ணனை மையப்படுத்தவில்லை. இதனால் தன்னிகர் இல்லாத தலைவன் என்ற காப்பிய இலக்கணம் வில்லி பாரதத்திற்குப் பொருந்தாது என்பார் தா.வே. வீராசாமி. பாண்டவர்களின் முன்னோர் வரலாறு தொடங்கிப் பாண்டவர் - கௌரவர் போர் வரையும் நடந்து செல்லும் கதையை, வில்லிபுத்தூரார் பத்துப் பருவங்களாகப் பிரித்து உள்ளார். பத்துப் பருவங்களில் மொத்தம் 50 சருக்கங்கள் அமைந்து உள்ளன. பத்துப் பருவங்கள் வருமாறு:
ஆதி பருவம் - 8 சருக்கங்கள் (தொடக்கமும் இளமையும்) சபா பருவம் - 2 சருக்கங்கள் (தூது) ஆரணிய பருவம் - 8 சருக்கங்கள் (வனவாசம்)விராட பருவம் - 5 சருக்கங்கள் (மறைந்து வாழ்தல்) உத்தியோக பருவம் - 8 சருக்கங்கள் (போருக்கான ஏற்பாடுகள்)வீட்டும பருவம் - 10 சருக்கங்கள் (போரில் வீடுமனின் தலைமை) துரோண பருவம் - 5 சருக்கங்கள் (துரோணனின் தலைமை)கன்ன பருவம் - 2 சருக்கங்கள் (கர்ணனின் தலைமை) சல்லிய பருவம் - 1 சருக்கம் (சல்லியன் தலைமை)சௌப்திக பருவம் - 1 சருக்கம் (துயில்வோரைக் கொல்லுதல்)
ஆகப் பருவங்கள் 10,
சருக்கங்கள் 50.
பாரதக் கதை பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
மகாபாரதத்தின் முதல் பருவம் ஆதி பருவம் ஆகும்.
இதில் பாண்டவர், கௌரவர் ஆகியோரின் முன்னோர் வரலாறு கூறப்பெற்றுள்ளது.
பாண்டவர் முதலியோர்
பிறப்புச் செய்திகள் இடம்
பெற்றுள்ளன.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்
தொடக்கம் முதலே போட்டியும்
பொறாமையும் இருந்து வந்தன.
இந்த நிலையில் வீடுமன் திருதராட்டிரனோடு கலந்து பேசித்
தருமனுக்கு இளவரசுப் பட்டம்
கட்டினான். இதனால் துரியோதனன் பகை கொண்டான். பாண்டவரை
வாரணாவத நகருக்கு அனுப்பினர்.
அங்கு அவர்கள் அரக்கு
மாளிகையில் தங்கி இருக்கும் போது தீ வைத்துக் கொல்லச் சதி
செய்யப்பட்டது. பாண்டவர்கள்
அதிலிருந்து தப்பித்தனர்.
திரௌபதிக்குச் சுயம்வரம் (திருமணம்)
ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பதை
அறிந்து அங்குச்
சென்றனர்.
சுயம்வரப்
போட்டியில் அருச்சுனன்
வெற்றி பெற்றான். பின்பு
திரௌபதி பாண்டவர் ஐவரையும் திருமணம்
செய்து
கொண்டாள்.
பின்னர்த் திருதராட்டிரன் ஏற்பாட்டின்படி பாண்டவர்கள்
இந்திரப்பிரத்தத்திலும், கௌரவர்கள் அத்தினாபுரியிலும் அரசாண்டு
வந்தனர். தருமன் தன் தம்பியர் மூலம் திக்விசயம் செய்து இராயசூய
வேள்வியைச் செய்து முடித்துச்
சிறப்புடன் விளங்கினான்.
பாண்டவர்களின் சிறப்பினையும் புகழினையும் கண்டு துரியோதனனின்
பொறாமை வளர்ந்தது. துகிலுரிதல்
கௌரவர் தருமனைத் தந்திரமாக அழைத்துச் சூதாடி அவனை வெற்றி கொள்ள நினைத்தனர். துரியோதனன் மாமனான சகுனி தருமனோடு சூதாடினான். தருமன் தன் நாடு, நகரம், சொத்து, சேனை, அரசு முதலிய அனைத்தையும் சூதாட்டத்தில் தோற்றான். இறுதியில் திரௌபதியையும் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றான். துரியோதனன் பாண்டவர்களையும் திரௌபதியையும் அடிமைகளாக ஆக்கினான். திரௌபதியை மாதவிடாய்க் காலத்தில் துச்சாதனனைக் கொண்டு அரசவைக்கு இழுத்துவரச் செய்தான்; சொல்லத் தகாத இழிவுச் சொற்களைக் கூறினான். துச்சாதனனை விட்டு அவள் ஆடையை உரியச் செய்தான். திரௌபதி கண்ணனைச் சரணடைந்து துதித்து நின்றாள்; ஆடை உரிய உரிய வளர்ந்து கொண்டே வந்தது. துச்சாதனன் சோர்ந்து வீழ்ந்தான். திரௌபதியின் கற்பு ஆற்றலைக் கண்டு திருதராட்டிரன் முதலியோர் அஞ்சி நடுநடுங்கினர். பின்பு திருதராட்டிரன் பாண்டவர்களை விடுவித்து நாட்டையும் செல்வத்தையும் கொடுத்து அனுப்பினான். இதனை ஏற்காத துரியோதனன் மீண்டும் சூதின் மூலம் அவற்றைக் கவர்ந்து கொண்டான்.
பின்பு பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழவும் ஓர் ஆண்டு எவரும் அறியாதபடி நாட்டின் உள்ளேயே மறைந்து வாழவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வந்து கேட்டால் நாட்டையும் செல்வத்தையும் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி பாண்டவர்கள் திரௌபதியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டனர். பன்னிரு ஆண்டுகள் உருண்டோடின. பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டில் எவரும் அறியாதபடி அவர்கள் மறைந்து வாழ வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் வனவாச வாழ்க்கை மேற்கோள்ள வேண்டியிருக்கும். இதனால் பாண்டவர்கள் விராட நாட்டில் விராட மன்னன் அரண்மனையில் மாறுவேடம் பூண்டு மறைந்து வாழ்ந்தனர். துரியோதனன், பாண்டவர்களைக் கண்டறிந்து மீண்டும் அவர்களைக் காட்டிற்கு அனுப்பத் திட்டங்கள் தீட்டினான். நான்கு திசைகளிலும் ஒற்றர்களை அனுப்பினான். விராட நாட்டில் பாண்டவர்கள் மறைந்து இருக்கலாம் என்பதை அறிந்து அந்நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டவர்கள் துணையோடு விராடன் வெற்றி பெற்றான். பதின்மூன்றாம் ஆண்டும் முடிந்தது. பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டார்கள்.
பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. போர் மிகக் கடுமையாக நடந்தது. போர் நிகழ்ச்சிகள் மகாபாரதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. போரில் வீடுமன், துரோணர், கர்ணன் முதலிய புகழ் பெற்ற வீரர்கள் மாண்டனர். இறுதியில் துரியோதனன் வீமனால் வீழ்த்தப்பட்டான். கௌரவர்கள் நூறு பேரும் மாண்டனர். துரோணரின் மகன் அசுவத்தாமனால் பாண்டவர் ஐவர் மட்டும் எஞ்சப் போர் முடிவிற்கு வந்தது. நிறைவாகத் தருமன் முதலியோர் அத்தினாபுரத்தில் அரசாண்டனர். வில்லிபுத்தூரார் மகாபாரதத்தை இத்துடன் நிறைவு செய்துள்ளார். ஆனால் மூல மகாபாரதத்தில் கதை இத்துடன் முடிவடையவில்லை. ஸ்திரீ பருவம், சாந்தி பருவம், அசுவமேத பருவம், ஆசிரம வாசிக பருவம், மௌசல பருவம் முதலான பருவங்களில் கதை மேலும் கூறப்பெற்றுள்ளது. பாரதப் போருக்குப் பின்னர் 36 ஆண்டுகள் கழித்துக் கண்ணன் தன் வம்சத்தோடு அழிந்தான் என்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. நிறைவாகப் பாண்டவர்களின் மரணமும், அவர்கள் சுவர்க்கத்திற்குச் சென்ற நிகழ்ச்சியும் கூறப்பெற்றுள்ளன. |