1.1 காப்பியம்

ஒரு சமுதாயம் ஒரு குறித்த காலத்தில் எவ்வகை இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்குமோ, எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம் அக்காலத்தில் உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, விட்டு விலகாத தொடர்புண்டு என்பர் எஸ்.வையாபுரிப் பிள்ளை. அதன்படி, காப்பியங்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அக்காலத் தேவைக்கேற்பத் தோன்றியுள்ளன.

காப்பியம் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி "நால்வகை உறுதிப் பொருள்களையும் கூறுவதாய்க் கதை பற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள்" என்று பொருள் கூறுகிறது. காப்பியம் என்பது உயர்ந்த குறிக்கோள் உடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தொடர்நிலைச் செய்யுள் எனலாம். காப்பியம் என்னும் சொல் சீவக சிந்தாமணியில் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது. இதனைக் ‘காப்பியக் கவிகள்’ (சீவக.சிந். - 1585) என்னும் சொல்வழி உணரலாம்.

1.1.1 காப்பிய இலக்கணம்

தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் காப்பியத்திற்குரிய இலக்கணம் எதையும் வரையறுக்கவில்லை. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் என்னும் நூலே காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கிக் ‘கற்றோர் புனையும் பெற்றியது என்ப’ என முடிவுறும் நூற்பாவில் அந்நூல் காப்பிய இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறது. அந்நூற்பா வருமாறு:

பெருங்காப்பிய நிலை பேசுங்காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று
ஏற்புடைத்தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்.....

இந்நூற்பா உணர்த்தும் காப்பிய இலக்கணப் பொருளாவது:

(1)

வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகியவற்றில் ஒன்றினைப் பெற்று வரும்.

(2)

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் கொண்டதாகக் திகழும்.

(3)

தன்னேரில்லாத தலைவனை உடையது.

(4)

மலை, கடல், நாடு, நகர், பருவம், இருசுடர் ஆகியவற்றை உள்ளடக்கி வரும்.

(5)

நன்மணம் புரிதல், பொன்முடி கவித்தல், புனல் விளையாட்டு, சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுதல் வேண்டும்.

(6)

மந்திரம், தூது, செலவு, போர், வெற்றி ஆகியவற்றைப் பெற்று வரும்.

(7)

சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் பெறும்.

(8)

இலக்கிய நயமும் பாவமும் பெற்று விளங்கும்.

(9)

கற்றோரால் இயற்றப் பெறுவதாக அமையும்.

1.1.2 காப்பியக் காலம்

காப்பியக் காலம் எனத் தமிழில் எக்காலத்தையும் அறுதியிட்டுக் கூறவியலாது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் தொடங்கி, கால இடைவெளி விட்டுக் காப்பியங்கள் தோற்றம் பெறுவதைக் காப்பியங்களின் கால வரலாறு உணர்த்துகின்றது. ஒரே சீராக அன்றி, நெருங்கியும் இடைவிட்டும் இருபதாம் நூற்றாண்டு வரை காப்பிய இழை காணப்பெறுகின்றதெனக் கூறுவர்.

1.1.3 காப்பிய வகைகள்

தமிழில், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், வளர்ச்சிக் காப்பியம், கலைக் காப்பியம் எனக் காப்பியம் பல வகைப்படும்.

பெருங்காப்பியம்

பெருங்காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணங்களோடு கவிஞர்களால் இயற்றப்பெறுவது. ஐம்பெருங் காப்பியங்கள் எனப் போற்றப்பெறுவன சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியனவாம்.

சிறு காப்பியம்

சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் பெருங்காப்பிய இலக்கணத்தில் ஏதேனும் சில குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப்பெறுவது ஆகும்.

பிற்காலத்தில் இக்காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுளின் வகையைச் சார்ந்தது என்றும், தொடர்நிலைச் செய்யுளிலும் பொருள் தொடர்நிலையைச் சார்ந்தது என்றும் அறிஞர்கள் கருதினர்.

உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவை சிறுகாப்பியங்களாகும்.

வளர்ச்சிக் காப்பியம்

இக்காலத்தில் இலக்கியத் திறனாய்வாளர்கள் காப்பியங்களை இருவகைப் பிரிவுகளாகப் பாகுபடுத்தியுள்ளனர். ஒன்று வளர்ச்சிக் காப்பியம், இரண்டு கலைக் காப்பியம்.

வளர்ச்சிக் காப்பியம் (வளர்நிலைக் காப்பியம்) என்பது பழங்கதை நிகழ்ச்சிகள் வாய்மொழியாகப் பரவிப் பல கிளைக் கதைகளைத் தன்னுள் கொண்டு உருப்பெறுவது; ஓர் இனம் அல்லது மக்கள் கூட்டத்தால் உருவாக்கம் பெற்ற கவிஞரால் இலக்கிய வடிவமாகப் படைக்கப்பெறுவது.

பிற முதன்மையான காப்பியங்கள்

பெருங்காப்பிய இலக்கணத்தோடு பொருந்திய கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றனவும், வில்லிபுத்தூரார் பாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முதன்மையான காப்பியங்களுள் அடங்கும். இவற்றைத் தவிர வேறு சில காப்பியங்களும் தமிழில் காணப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டில் இரட்சணிய யாத்திரிகம், பாரதசக்தி மகா காவியம், இராவண காவியம், பூங்கொடி போன்ற காப்பியங்களும் மிகச் சிறந்த காப்பியங்களாகத் திகழ்கின்றன. சான்றாக,

மகாபாரதம், இராமாயணம், ஹோமரின் இலியதம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.

கலைக் காப்பியம்

கலைக் காப்பியம் என்பது கவிஞர் தம் கற்பனையில் விளைவது. கற்பனைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களையும் அவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகளையும் கொண்டு இலக்கிய வடிவமாக வடிவெடுப்பது. இதற்குச் சான்றாக, 20ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற காவியங்களான பாரத சக்தி மகா காவியம், இராவண காவியம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.