2.3 காப்பியச் சிறப்பு |
||
கவியோகி சுத்தானந்தரின் ஆன்மிகப் பயணமாகப் பாரதசக்தி மகாகாவியம் விளங்குகிறது. ஆன்மிக வளம் மிகுந்த நாடு பாரதம் என்பதைச் சுட்ட சுத்தானந்தர் பல சமயச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் ஆன்மிக அனுபவங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பக்த இராமதாசர், குருநானக், ஜரதுஷ்டிரர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், கௌதம புத்தர், மகாவீரர், ஏசு பெருமான், நபிகள் நாயகம், கபீர்தாசர், வேத முனிவர்கள், தயானந்தர், ஆதி சங்கரர், மெய்கண்டார், அப்பர், மாணிக்கவாசகர், வள்ளலார், அரவிந்தர், சிவானந்தர் ஆகியோர் வரலாறுகள் காப்பிய நோக்கத்திற்கு ஏற்ப இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அப்பெருமக்கள் உரைத்த சமய உண்மைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. அவையாவன : வைதிகம், பௌத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம், சீக்கியம், சைவ சித்தாந்தம், வைணவம் என்பன. |
||
வரலாற்று நாயகர்கள் பிம்பிசாரன், அசோகன், வீர சிவாஜி, தேஜ் பகதூர், குரு கோவிந்தசிங், பிரதாப் சிங், திருமாவளவன், செங்குட்டுவன், இளஞ்செழியன், மாஜினி, கரிபால்டி, இலெனின் ஆகியோரின் வரலாற்று நிகழ்வுகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. அண்ணல் காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டமும் அவர் வரலாறும் சிறப்பிடம் பெறுகின்றன. |
||
|
|
|
வீர சிவாஜி |
கரிபால்டி |
இலெனின் |
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
||
இந்திய இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம், தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி ஆகியனவும் காப்பிய ஓட்டத்தில் கவிதையாக்கப்பட்டுள்ளன. புராண நாயகன் கண்ணன் வரலாறும் அவன் குருச்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு அறிவுறுத்திய பகவத் கீதையும் இந்நூலுள் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகக் காப்பியங்களில் ஒன்றாகிய சொர்க்க நீக்கம் (Paradise Lost) என்பதில் உள்ள சாத்தானின் வீழ்ச்சி, உலக மகாகவி ஓமரின் (Homer) இலியாத்தில்(Iliad) உள்ள திராயப் போர் நிகழ்ச்சி (Battle of Troy) ஆகியவையும் பேசப்பட்டுள்ளன. |
||
நன்மையின் சார்பில் சுத்தன், சத்தியன், சித்திமான், போகன், சாந்தர், பாரத முனி, கௌரி, சுந்தரி, சக்தி ஆகிய காவிய மாந்தர்கள் உள்ளனர். தீமையின் பக்கலில் மாவலி, மோகி, கலியன், தூமகேது, துன்மதி முதலியோர் உள்ளனர். நன்மைக்கும் தீமைக்கும் நல்லவர்க்கும் தீயவர்க்கும் இடையே நிகழும் போராட்டத்தில் நன்மை வெற்றி பெறுகிறது. தீமை-தீயவர் நல்லவர்களாகத் திருந்துகின்றனர். கவிஞனின் நோக்கம் தீயவரை அழிப்பதன்று; தீமையை அழிப்பதே எனக் கருதலாம். இதற்கு உறுதுணையாக அமைவது ஆன்மிக ஆற்றல் ஆகும். இந்த ஆன்மிக ஆற்றலைத்தான் பாரத சக்தியாகக் கவிஞர் படைத்துக் காட்டுகிறார். |
||
அறிவியல் வளர்ச்சிக் கருவிகளான மின்னாற்றல், வானொலி, அணுக்குண்டு, பீரங்கி, துப்பாக்கி, விமானம் முதலியன இக்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இதனால் இக்காப்பியம் ஆன்மிகச் சாதனை குறித்துப் பேசினாலும் இருபதாம் நூற்றாண்டிற்கு உரியதாக விளங்குகிறது. |
||
சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார் காலம் வரையில் சமய வேற்றுமைகள், சாதி வேற்றுமைகள், சாத்திரக் குப்பைகள் மக்களிடையே ஒற்றுமை நிலவத் தடையாக இருந்தன. வள்ளலார் உலக மக்களெல்லாம் வேற்றுமை உணர்வின்றித் தம் சங்கத்தில் சேர்ந்து பயன்பெற அழைத்தார். கவியோகி சுத்தானந்தரும் சமயோக சமாஜம் என்னும் அமைப்பின்வழி உலக மக்கள் வேற்றுமைகள் இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார். சமயோக சமாஜத்திற்கு, அதன் இலட்சியத்திற்குக் காப்பிய வடிவம் தந்த பெருமை கவியோகிக்கு உரியது. இவ்வகையிலும் இக்காப்பியம் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது. |
||
பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மேலும் ஒரு சிறப்பு இக்காப்பியத்திற்கு உண்டு. இக்காப்பியம் கம்பனின் இராமகாதை போன்று அடி அளவால் மிகப் பெரியது. 50000 அடிகளால் ஆனது. |