4.3
காப்பியச் சிறப்பு
|
காப்பிய
அமைப்பு, கதை, கதை மாந்தர் என்பவற்றிற்கும்
அப்பாற்பட்ட நிலையில், பல சிறப்புக் கூறுகள் பூங்கொடிக்
காப்பியத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக, ஆசிரியர் முடியரசன்,
தமிழ் மொழியின் சிறப்பு, தமிழிசையின் பெருமை, தமிழின்
தனித்தன்மை ஆகியவற்றையும் சிறப்பாக இக்காப்பியத்தில்
குறிப்பிட்டுள்ளார். காப்பியமே ஒரு வகையில் மேற்குறிப்பிட்ட
சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும்
வகையில்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடலாம்.
|
4.3.1 தமிழின் சிறப்பு
|
தமிழ்மொழிக்கு
மந்திர வலிமை உண்டு. முதலை உண்ட
பாலனை மீட்டுத் தந்தது தமிழ், திருமறைக்காட்டில் அடைத்த
கதவைத் திறக்கச் செய்தது தமிழ், கணிகண்ணன் முன் செல்லத்
திருமழிசை ஆழ்வார் பின்செல்லத் திருமால் திருமகளோடு
பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு அவருக்குப் பின்னால்
ஓடச்செய்தது தமிழ். இத்துணைப் பெருமையையும், தமிழுக்குச்
சொன்னவர்களே இன்று அதை மறந்து தமிழ்மொழிக்கு
மந்திரவலிமை உண்டா என்று கேட்பது வஞ்சகம் அன்றோ?
|
சிவனும்
தமிழும் |
தமிழைக்
கடவுளரும் விரும்பிச் சுவைத்தனர். சிவபெருமான்
தன்னுருவை மறைத்து, மீன்கொடியை ஏந்தி, வேப்ப
மாலையைச் சூடி, சவுந்தர பாண்டியனாக வந்து மதுரையை
ஆண்டான். மலைமகள் உமையாள் தடாதகைப் பிராட்டியாக
மதுரையில் அவதரித்தாள். மயில்வேல்
முருகன்
உக்கிரகுமாரனாக உருவெடுத்தான். இவ்வாறு சிவனும்
உமையும் மயில்வேலனும் தென்னாட்டு மொழியாம் தீந்தமிழின்
சுவையை உண்பதற்காக முறையே சவுந்தர பாண்டியனாகவும்,
தடாதகைப் பிராட்டியாகவும் உக்கிரகுமாரனாகவும் உருத்தாங்கி
வந்தனர். அதுமட்டுமா? கைலாயத்திலிருந்த சிவன் தென்திசை
நோக்கி வந்து ஆடியதும் தமிழ்ச் சுவையை நுகர்வதற்காகத்தானே! மேலும் சிவன் தமிழ்ப் புலவர்களின் கூட்டத்தில்
தானும் ஒரு புலவனாக அமர்ந்து, தமிழை ஆய்ந்து
சுவைத்தான். திருவாசகத்தைத் திருவாதவூரர் ஆன
மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லச் சிவன் தன் கைப்பட
ஏட்டில் எழுதி நாட்டிற்கு அளித்தான். சுந்தரரைத் தமிழில்
பாடுமாறு இறைவன் வேண்டுகோள் விடுத்தான்.
இறைவன்
விரும்பும் சிறப்புடையது தமிழ்மொழி என்பதைக்
கவிஞர் முடியரசன் எத்துணை அழகாகக் கூறுகிறார்.
கவனியுங்கள்.
|
கடகரி உரியன் கடும்புலி
அதளன்
சடையினை மறைத்து மணிமுடி தரித்து
விடைக்கொடி விடுத்து வேம்பலர் முடித்துத்
தொடுகழல் மாறன் வடிவொடு வந்ததூஉம்
மடவரல் மனையாள் மலைமகள் உமையாள்
தடாதகைப் பெயரினைத் தாங்கி வந்ததூஉம்
மயில்மேல் அமர்வோன் அயில்வேல் உடையோன்
எயில்சூழ் மதுரை எழில்நகர் அதனுள்
உக்கிர குமரன் உருவொடு வந்ததூஉம்
தெக்கண மொழியாம் தீந்தமிழ்ச் சுவையைக்
கூட்டுண எழுந்த வேட்கையால் என்றே
பாட்டினில் குருபரர் பாடி வைத்தனர்; .....
வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென்று
எழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம்....
|
(சொற்போர் நிகழ்த்திய காதை, 188 - 215) |
(கடகரி
= மதயானை; உரியன் = உடையவன்; கடும்புலி =
கொடியபுலி; அதளன் = தோலாடை அணிந்தவன்;
விடைக்கொடி = எருதுக்கொடி; வேம்பு +
அலர் =
வேப்பம்பூ; மடவரல் = பெண்; எயில் = மதில்; கூட்டுண
=
கூடிஉண்ண; கடுக்கவின் கண்டன் = நஞ்சுண்ட அழகிய
கண்டத்தை உடையவன், சிவன்.)
|
இவையெல்லாம்
இறைவனுக்குத் தமிழின்பால் உள்ள
விருப்பத்தை விளக்கும். பூங்கொடி கடவுள் விரும்பும்
மொழி தமிழ்மொழி என்பதற்குப் பல சான்றுகளைத் தந்து நிறுவினாள். |
4.3.2 தமிழிசை
|
உள்ளத்தை
உருக்கி இன்ப உணர்ச்சியை அள்ளித்தரும்
இசையில் மொழிவேற்றுமை புகுத்துவது இழிவாகும். குழலும்
யாழும் தரும் இசையில் மொழி உண்டா? அந்த இசையில்
பழியேதும் உண்டா? தமிழில் இசைவளம் உண்டா?
இசையுணர்வு உடையோர் எந்த மொழியாக இருந்தாலும்
விருப்புடன் அதனை ஏற்கின்றனர். எனவே மொழிவெறி
இசையில் புகவேண்டாம் என வம்புகள் மொழிந்தனர் சிலர்.
இசையில் மொழிவெறி
புகுத்துதல் இழிவெனக் கூறுவோர்
கருத்தைப் பூங்கொடி மறுத்துரைத்தாள். குயில், காகம் முதலிய
பறவைகள் தம் குரலால் ஒலிக்கின்றனவே ஒழிய இரவல்
குரலில் அவை பாடுவதில்லை. பகுத்தறிவுடைய மக்களே
நமக்குள்ள மொழியில் பாடாது பயிற்சிக்குரிய மொழியால்
பிதற்றுகின்றோம். பொருள் உணர்ந்து பாடும்போதுதான் ஊனும்
உயிரும் நெஞ்சுடன் குழைந்து உருகிப் பேரின்பம் தருகிறது.
குழல் தரும் இசையில் மொழியில்லையே என்றால், அந்த
இசையே போதுமே. அதற்குமேல் வாய்ப்பாட்டு எதற்கு?
வேறோரு மொழியில் பாடுவோர் கூட்டமும் தேவையா? குழல்,
யாழ் முதலிய இசைக்கருவிகள் தரும் இசையே போதுமானது.
இவ்வாறு பூங்கொடி கூறுவது வாய்மொழி இசை தாய்மொழி
இசையாக அமைதல் வேண்டும் என்பதற்காகவேயாம்.
பூங்கொடிக்
காப்பியத்தில் இடம் பெற்றுள்ள இசைத்தமிழ்
என்ற பகுதியில் இசைத்தமிழ் பற்றிய செய்திகளையும் தமிழிசை
இயக்கம் பற்றிய செய்திகளையும் காணலாம்.
மேலும்,
காப்பியத் தலைவி பூங்கொடி நாவலூர்
அமுதத்தைச் சந்தித்தது அவள் வாழ்க்கையின் ஒரு
மைல்கல்லாகும். பூங்கொடி தமிழிசை வளர்ச்சியில் ஈடுபட அது ஒரு தூண்டுகோலாக
அமைந்தது.
|
இசை ஆர்வம்
|
தமிழில்
உள்ள சிதைந்தும் குறைந்தும் கிடக்கும் இலக்கியச்
செல்வங்களை எல்லாம் ஓரிடத்துக் கொணர்ந்து நூலகம்
அமைத்துக் காத்தது நாவலூர் அமுதத்தின் சீரிய பணியாகும்.
கலைமகள் நூலகத்தில் வழக்கம்போல் ஏடுகளைத் தேடும்
பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் இரு சுவடிகளைக்
கண்டார் அச்சுவடிகள் இரண்டும் தமிழ் இசையும் கூத்தும்
பற்றியவையாகும். அச்சுவடிகளைக் கலைமகள் நூலகத்திலிருந்து
விலைகொடுத்துப் பெற்றார். அச்சுவடிகளைப் பூங்கொடியின்பால்
ஒப்படைத்து, அவற்றின் வரலாற்றினையும் நுட்பத்தினையும்
மலையுறையடிகளிடம் கேட்டுத் தெளியுமாறு ஆற்றுப்படுத்தினார்.
|
இசைப்பயிற்சி
|
தமிழிசையை
நன்கு அறிந்த தன் அன்னை
அருண்மொழியிடமே தமிழிசையின் நுட்பங்களை அறியப்
பூங்கொடி விரும்பினாள். ஆனால் அருண்மொழி கொடுமுடி
என்னும் ஊரில் வாழும் ஏழிசைச் செல்வியாம் எழிலியிடம்
இசைத்தமிழ்ச் சுவடியின் நுட்பங்களை
அறியும்படி
ஆற்றுப்படுத்தினாள். பூங்கொடி எழிலியிடம் இசையின்
இலக்கண நுணுக்கம், பாடல்திறன், பாடும் முறை
முதலியவற்றை அறிந்து இசையரங்கு ஏறினாள்.
|
பூங்கொடி
தமிழிசையோடு யாப்பிலக்கணமும் பாவகையும்
பா இனமும் எழிலியிடமே பயின்று, கவிதை இயற்றவும்
இசைத்துறைப் பாடல்கள் புனையவும் கற்றுத் தேர்ந்தாள்.
|
தமிழிசை வளர்ச்சி
|
மலையுறையடிகள்
தமிழிசை வளர்ச்சி கருதி, தமிழிசைப்
பள்ளி நிறுவி, மாணவர்களைப் பயிற்றுவித்து, திசைதொறும்
தமிழிசையைப் பரப்ப எண்ணினார். பகுத்தறிவுப் பாடல்களைப்
புனைந்து மாணவர்களைக் கற்கச் செய்து தம் கொள்கைகளைப்
பரவச் செய்ய வேண்டும் என்னும் தம் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
|
தமிழிசைப்
பள்ளி தொடங்கப்பெற்று, தமிழிசையின்
நுட்பங்களை மாணவர்கட்குக் கற்பித்து வருங்கால், தமிழிசை
பயில்வதில் வேட்கை கொண்ட சண்டிலியையும் தன்
மாணவியாகப் பூங்கொடி ஏற்றாள்.
|
பெருநிலக்கிழார் இசை ஆர்வம்
|
வேங்கை
நகரில் வாழும் பெருநிலக்கிழார் இசை ஆர்வம்
உடையவர். அவர் மாளிகையில் எப்போதும் தமிழிசை
ஒலித்தவண்ணம் இருக்கும்.
|
பண்ணும்
இசையும் பயில்வோர் ஒலியும்
தண்ணுமைக் கருவி தந்திடும்
முழக்கும்
தெரிதரு யாழில் விரிதரும்
இசையும்
முறிதரு கருவிகள் மோதுநல்
லொலியும்
காய்வேய்ங் குழலின் கனிந்தநல் லிசையும்
ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும்
கற்பார் மிடற்றுக் கருவியும்
கலந்து
பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம்
மாடமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது.
|
(பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை, 80 - 88)
|
(பண்
= இராகம்; தண்ணுமைக் கருவி = மத்தளம்; முறிதரு
கருவிகள் = வெண்கலத்தால் ஆன இசைக் கருவிகள்;
வேய்ங்குழல்
= புல்லாங்குழல்; மிடற்றுக் கருவி = கண்டக்
கருவி; மறுகு = வீதி)
|
பெருநிலக்கிழார்
பூங்கொடியின் இசைத்திறனைக்
கேள்வியுற்று, தன் மாளிகைக்கு அழைப்பித்து, அவள்
வழங்கிய இசைத்தேனை நுகர்ந்து
இன்புற்றார்.
இளம்பருவத்தில் இறந்த தன் மகளே மீளவும் உயிர்பெற்று
எழுந்தது போலப் பூங்கொடியைக் கண்டு அகமகிழ்ந்தார்.
|
தமிழிசை இயக்கம்
|
தமிழ்நாட்டில்
தமிழிசை நலிவுற்றிருந்தது. அந்நிலையை
மாற்றித் தமிழ்நாட்டில் தமிழிசை மலர்ச்சியுற வேண்டும்
என்பதை இக்காப்பியம் வற்புறுத்துகிறது.
|
தமிழிசையின் தொன்மை
|
தமிழிசை
மிகவும் தொன்மையானது. யாழும் குழலும்
தமிழர்தம் இசைக்கருவிகளே. பாணனும் பாடினியும் தமிழிசை
பாடி மகிழ்வித்தனர். அவர் பாடிய பண்ணும் இசையும்
தமிழ்மொழிக்குரியன. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் என வகைப்படுத்தப்பட்ட ஐந்திணைக்கும் பண்ணும்
யாழும் வகுக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் காணப்படும்
கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவவரி ஆகியவை
அக்காலத் தமிழிசைக்குச் சான்றாக உள்ளன.
பண் சுமந்த
பாடல்களாகத் தேவார, திருவாசகப் பாடல்களும் நாலாயிரத்
திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் திகழ்கின்றன.
|
தமிழிசைச் சிறப்பு
|
தமிழிசைக்குச்
சிறப்புகள் பல உண்டு. மனம், மொழி, மெய்
என்னும் முக்கோணங்களையும் தன்வயமாக்கும் திறன்
தமிழிசைக்கு உண்டு. விலங்கும் அரவும் கூடத் தமிழிசை
கேட்டு மயங்கும்.
|
கவிஞர்
தமிழிசையின் சிறப்பைக் கூறுவதற்கு அப்பர்
தேவாரத்தைப் பயன்படுத்துகிறார்.
|
மாசில்
வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும்
|
(இசைப்பணி புரிந்த காதை, 240 - 242) |
போன்று அஃது உளத்திற்கு உவகை
ஊட்டுவது.
|
(மாசில்
= குற்றமில்லாத; மதியம் = மதி; திங்கள் = நிலவு;
மூசு = மொய்த்தல்)
|
தமிழிசையின் நிலை
|
தமிழ் இசைச்செல்வம்
உடைய மொழியாயினும் அது பிற்காலத்தில் புறந்தள்ளப்பட்டது. அயல்மொழி இசை ஆட்சி
பெற்றது. தமிழிசைக்குத் தடைகள் அமைக்கப்பட்டன.
கூவும் குயிலும்
காகமும் தம் குரலால் பாடுகின்றன. அவை
இரவல் குரலால் பாடுவதில்லை. இசைக்கு மொழியில்லை
என்றால் கருவி இசையே போதுமானது; மிடற்றிசை
வேண்டாமே! என்று பூங்கொடி இசைக்கு மொழி வேண்டும்
என்பதைத் தெளிவுபடுத்தினாள்.
இவ்வாறு தமிழிசை
குறித்த செய்திகளைப் பூங்கொடிக் காப்பியம் தெளிவுபடுத்துகிறது. |
4.3.3 தமிழின் தனித்தன்மை
|
பூங்கொடிக்
காப்பியம் தமிழகச் சூழலை மையமாகக்
கொண்டு படைக்கப்பட்ட காப்பியமாகும். தாய்மொழி தமிழை
ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாக, அனைத்துத்
துறைகளிலும் ஆளும் மொழியாக ஆக்க வேண்டும்
என்னும் குறிக்கோளோடு இக்காப்பியம் படைக்கப்பட்டுள்ளது.
பிறமொழிகளைப் பேசும் சூழல் தமிழகத்தில் இருப்பினும்,
தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் என்பது
தமிழ்வல்லோர் கருத்தாகும். அதற்கேற்பப் பூங்கொடிக்
காப்பியத்தில் வரும் மாந்தர்களின் பெயர்களும் ஊர்களின்
பெயர்களும் தூய தமிழாக அமைந்துள்ளன.
காப்பிய
மாந்தர்கள் பூங்கொடி, அருண்மொழி, அல்லி,
தாமரைக்கண்ணி, வஞ்சி, தேன்மொழி, எழிலி, பொன்னி,
ஏலங்குழலி, நாவலூர் அமுதம் முதலிய பெண்பாற் பெயர்கள்
தூய தமிழ்ப் பெயர்களாகும்.
மலையுறையடிகள்,
பெருநிலக்கிழார், கோனூர் வள்ளல்,
மயில்வாகனர், கோமகன், திருமகன், தங்கத்தேவன் முதலிய
ஆண்பாற் பெயர்களும் தூய தமிழ்ப் பெயர்களாக உள்ளன.
மணிநகர்,
கடல்நகர், கூடல்நகர், வேங்கைநகர், கோனூர்,
நெல்லூர், நாவலூர், மயில் நகர் ஆகிய ஊர்ப் பெயர்களும்
தனித்தமிழ்ப் பெயர்களாக உள்ளன. |