5.4 ஏனியட் - கதைமாந்தர்கள்

ஏனியட் கதை மாந்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஏனியாஸ், டிடோ, டர்னஸ் ஆகியோராவார்.

5.4.1 ஏனியாஸ்

மானிடனான அஞ்சிசேஸுக்கும் வானுலகத்துத் தேவதையான வீனஸுக்கும் பிறந்தவன் ஏனியாஸ். இத்தாலியில் பெரும் வல்லரசு ஒன்றை நிர்மாணிக்கப் பிறந்தவன். இதன் காரணமாகவே ட்ராயின் வீழ்ச்சிக்குப் பிறகு, கடவுளர், ஏனியாஸ் உயிர் தப்ப வழிவகுக்கின்றனர். ஏனியாஸ் ஒரு செயல் வீரன். தன்னலமற்ற மக்கள் தலைவன். நாடற்று அலையும் ட்ரோஜன்கள் மனச் சோர்வு அடையும் தருணங்களில் அவர்களுக்கு உற்சாகமூட்டி வழிநடத்துகிறான். கார்த்தேஜின் அரசி டிடோவைப் பிரிய மனமில்லாதபோதிலும் ட்ரோஜன்களின் எதிர்காலத்தைக் கருதி அவளைத் துறக்கிறான். விதியின் ஆற்றலை நன்கு அறிந்தவன் ஏனியாஸ். விதி தனக்கென இட்ட இலட்சியப் பாதையில் இன்னல்கள் பல இருப்பினும் அவற்றை மனத்திடத்துடன் எதிர்கொள்கிறான். மகனைக் கையில் பிடித்துக் கொண்டும் தந்தையை முதுகில் சுமந்து கொண்டும் ட்ராய் நகரை விட்டுத் தப்பும் ஏனியாஸ் கருணையும் அன்பும் நிறைந்தவனாகச் சித்திரிக்கப்படுகிறான். பாதாள உலகில் புதைக்கப்படாத ஆத்மாக்கள் படும் துன்பத்தைக் காணும் ஏனியாஸ், இத்தாலியப் பெரும் போரில் எதிரிகளும் மரியாதையுடன் புதைக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொள்கிறான். பெரியோர்களின் அறிவுரைக்கும் கடவுளரின் கட்டளைக்கும் எப்போதும் அடிபணிந்தே நடக்கிறான். ஏனியாஸின் போர்த் திறனும் வீரமும் இத்தாலியில் நடக்கும் போரில் வெளிப்படுகின்றன.

ஏனியாஸ்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

5.4.2 டிடோ

கார்த்தேஜின் அரசியான டிடோ, ஏனியடின் முதல் நான்கு காண்டங்களில் இடம் பெறுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு தாய்நாட்டை விட்டு வெளியேறுகிறாள் டிடோ. ஆப்பிரிக்கச் செல்வர்களின் உதவியோடு கார்த்தேஜின் அரசியாகிறாள். பொறுப்பும் கடமையுணர்ச்சியும் நிறைந்த அரசியாகத் திகழ்கிறாள். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெறுகிறாள். பல ஆப்பிரிக்கச் செல்வர்கள் அவளை மணக்க முன் வருகின்றனர். கணவனை மறக்க இயலாத டிடோ அவன் நினைவிலேயே வாழ்ந்துவிட உறுதி கொள்கிறாள். இவ்வாறிருக்க ஏனியாஸின் வருகை அவளை மாற்றுகிறது. டிடோ கடவுளரின் விளையாட்டில் ஒரு கைப்பாவையாகவே இயக்கப்படுகிறாள். ஏனியாஸைக் காக்கும் பொருட்டு வீனஸ், டிடோவை அவன்பால் காதல் கொள்ளச் செய்கிறாள். இதுவே டிடோவின் அழிவிற்கு வழிவகுக்கிறது. ஏனியாஸைப் போலக் கடமைகளுக்காக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவள் டிடோ. விதியின் வலிமையைப் புரிந்து கொள்ளாத டிடோ ஏமாற்றங்களைச் சந்திக்கும் மனப்பக்குவம் இல்லாதவள். ஓர் அரசியாகத் தனக்கிருக்கும் கடமைகளை மறக்கும் டிடோ மக்களின் அவச் சொல்லுக்கு ஆளாகிறாள். ஏனியாஸின் மீது அவள் கொண்ட அன்பு ஆப்பிரிக்கக் கனவான்களைக் கோபமடையச் செய்கிறது. இந்நிலையில் கடமை கருதி, ஏனியாஸ் அவளைப் பிரிய நேரிடுகிறது. அனைத்தையும் இழந்த டிடோ, தன்னை மாய்த்துக் கொள்கிறாள். ஏனியட்டில் டிடோ மற்றும் டர்னஸின் பாத்திரங்கள் ஏனியாஸுக்கு நேர் எதிராகவே படைக்கப்பட்டுள்ளன. டிடோ மற்றும் டர்னஸின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, ஏனியாஸின் விவேகத்திற்கும் கடமையுணர்ச்சிக்கும் மாறாக உள்ளதைக் காண்கிறோம்.

5.4.3 டர்னஸ்

டிடோவைப் போலவே டர்னஸின் பாத்திரமும் ஏனியாஸுக்கு எதிர்மறையாகப் படைக்கப்பட்டுள்ளது. டிடோ உணர்ச்சிகளின் அடிமையென்றால் டர்னஸ் அகந்தையும் கோபமும் வடிவானவன். வீரத்திற்கும் போர்த்திறனுக்கும் பெயர் பெற்றவன். ஒரு தலைவனுக்கான எல்லாக் குணங்களும் இருப்பினும், அவனது கோபமே அவனை வீழ்த்துகிறது. ஏனியாஸுடனான போரில் ஜுனோ அவனைக் கப்பலில் தப்பிச் செல்ல அறிவுறுத்துகிறாள். வீரத்தைப் பெரிதென எண்ணும் டர்னஸ் இதை ஏற்க மறுக்கிறான். இறுதியில் அவன் விரும்பியது போல வீரமரணமே அடைகிறான்.