4.1 படர்க்கை ஆண்பால் வினைமுற்று
படர்க்கை வினைமுற்றுகள் பால்காட்டும் விகுதிகளைப் பெற்றிருக்கும். உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிலும் ஐந்து பால் பாகுபாடுகள் உள்ளன என்பதைப் பெயர்ச் சொல் பற்றிய பாடத்தில் படித்திருப்பது நினைவிருக்கலாம். அவற்றுக்குரிய பால்காட்டும் விகுதிகளைப் படர்க்கை வினைமுற்றுகள் பெற்றிருக்கும்.
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் ஆகிய ஐந்து பால்களுள் முதலில் ஆண்பால் உணர்த்தும் வினைமுற்றுகளுக்கு உரிய விகுதிகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
4.1.1 தெரிநிலை வினைமுற்று
‘படர்க்கை’ எனும் சொல் பேசப்படுபவரைக் குறிக்கும் சொல் என்பது முன்னர்க் கூறப்பட்டது. பேசப்படுபவர் ஆணாக இருந்தால்,
அவன் | | சொன்னான் |
அவன் | | சென்றான் |
என்பன போன்று பேசுவோம். இவற்றுள் ‘சொன்னான்’ ‘சென்றான்’ என்பன வினைமுற்றுச் சொற்கள். இவை, சொல்லுதல், செல்லுதல் என்னும் வினைகளைச் செய்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன. அவ்வினை செய்தவன் உயர்திணை, ஆண்பால், ஒருவன் என்பதை அச்சொல்லின் கடைசியில் உள்ள ‘ஆன்’ என்னும் விகுதியே உணர்த்துகிறது. தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் காலம் காட்டுவனவாகும். காலம் மூவகைப்படும். இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என அவற்றைக் குறிக்கிறோம்.
இறந்த காலம் என்பது ஒரு செயல் நடந்து முடிந்தமையைக் குறிக்கும். இதற்கு எடுத்துக்காட்டு ‘வந்தான்’ என்பது. நிகழ் காலம் என்பது செயல் நடந்து கொண்டிருப்பதைக் குறிக்கும். இதற்கு எடுத்துக்காட்டு ‘நடக்கிறான்’ என்னும் சொல். எதிர்காலம் என்பது செயல் நிகழ இருப்பதைக் குறிக்கும். ‘நடப்பான்’ என்பது இதற்குச் சான்று. வினைச் சொற்கள் காலம் காட்டுவதைப் பற்றிப் பின்னர் (a02126 என்னும் பாடத்தில்) விரிவாகப் படிப்பீர்கள். இவ்வாறு காலம் காட்டும் வினைச் சொற்களுக்குத் தெரிநிலை வினை என்று பெயர்.
நடந்தான், நடக்கிறான், நடப்பான் என்பன போன்ற சொற்களில் இறுதியில் உள்ள ஆன் என்பது ஆண்பால் வினைமுற்று விகுதி.
குறிப்பாகக் காலம் உணர்த்தும் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் இறுதியில் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் விகுதி இடம் பெற்றிருக்கும்.
ஒரு செய்தி இங்கு நினைவிற்கு உரியது. பெயர்ச்சொற்கள் பலவற்றிலும் அன், ஆன் போன்ற விகுதிகள் இடம் பெறல் உண்டு. இதனைப் பெயர்ச்சொற்கள் பற்றிய பாடத்தில் படித்திருப்பீர்கள். ஒரு விகுதி, பெயர் விகுதியா, வினைமுற்று விகுதியா என்பதை இடமறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். ‘ஆன்’ என்னும் விகுதி ஒன்றுதான் என்றாலும், அது வருகிற இடம் நோக்கி இருவேறு பெயரைப் பெறுகிறது என்பது நினைவில் கொள்ள வேண்டும்.
தெரிநிலை வினைமுற்றுகள் மூன்று காலத்திற்கும் கீழ்வருமாறு அமையும்.
இறந்த காலம் | - | படித்தான் |
(ஆன்) |
நிகழ் காலம் | - | படிக்கிறான் |
(ஆன்) |
எதிர் காலம் | - | படிப்பான் |
(ஆன்) |
இவை அனைத்திலும் ஆண்பால் விகுதியாக ஆன் வந்திருப்பது போல் ‘அன்’ விகுதியும் ஆண்பால் குறிக்க வருவதுண்டு.
எடுத்துக்காட்டுகள்:
இறந்த காலம் | - |
படித்தனன் | (அன்) |
நிகழ் காலம் | - |
படிக்கின்றனன் | (அன்) |
எதிர் காலம் | - |
படிப்பன் | (அன்) |
தெரிநிலை வினைமுற்றில் இவ்வாறு,
அன், ஆன் விகுதிகள் படர்க்கை ஆண்பால் ஒருமை விகுதிகளாக வருவதைப் போல் குறிப்பு வினைமுற்றிலும் வரும். அதனை இனிக் காண்போம்.
4.1.2 குறிப்பு வினைமுற்று
குறிப்பு வினைமுற்று என்பது காலத்தைக் குறிப்பாக உணர்த்தும். இதில் காலம் உணர்த்தும் இடைநிலைகள் இடம் பெறா. வினைமுற்றில் கால இடைநிலைகள் வருவது பற்றி இத் தொகுப்பின் ஆறாவது பாடத்தில் படிக்க உள்ளீர்கள். இங்கு நாம் வெளிப்படையாகக் காலம் உணர்த்தாத வினைமுற்றுகளாகிய குறிப்பு வினைமுற்றுகள் பற்றியே பார்க்க உள்ளோம். படர்க்கை ஆண்பால் குறிப்பு வினைமுற்றில் அன், ஆன் என்பனவே விகுதிகளாக வரும்.
• பெயரும் குறிப்பு வினைமுற்றும்
‘உழவன் வந்தான்’ எனும் தொடரில் உள்ள உழவன் என்னும்
சொல் பெயர் அல்லது எழுவாய்.
‘அவன் உழவன்’ எனும் தொடரில் உள்ள உழவன் எனும்
சொல் குறிப்பு வினைமுற்று. எனவே, ஒரு சொல்
தொடரில் வரும் இடம் நோக்கியே, அது பெயர் (அல்லது) குறிப்பு வினைமுற்று என்று முடிவு செய்ய வேண்டும்.
அவன் |
தச்சன் |
 |
அன் |
அவன் |
எழுத்தாளன் |
அவன் |
மலையன் |
அவன் |
அருளாளன் |
என்னும் தொடர்களில் எல்லாம் குறிப்பு வினைமுற்று விகுதியாக ‘அன்’ வந்துள்ளது. இது போல் ‘ஆன்’ விகுதியும் வரும். இதற்கு எடுத்துக்காட்டு:
அவன் |
புதூரான் |
 |
- ஆன் |
அவன் |
வெளியூரான் |
அவன் |
சடைமுடியான் |
அவன் |
தூரிகையான் |
இத்தொடர்களில் கடைசியில் உள்ள சொற்கள் யாவும் குறிப்பு வினைமுற்றுகளாகும். இவற்றுள் ஆன் விகுதி வந்துள்ளதைக் காண்க.
இதுவரை படர்க்கை ஆண்பால் வினைமுற்றுச் சொற்களில் ‘அன்’ என்பதும், ‘ஆன்’ என்பதும் விகுதிகளாக வரும் என அறிந்தோம். ஒரு விகுதி, பெயரின் ஈற்றில் (ஈறு = கடைசி) வந்தால் அது பெயர் விகுதி எனப்படும். வினைமுற்றுச் சொற்களின் ஈற்றில் வந்தால் அதற்கு வினைமுற்று விகுதி என்று பெயர். இவற்றை நன்கு நினைவிற் பதித்தல் வேண்டும்.
|