4.4 படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று

இதுவரை உயர்திணை வினைமுற்றுகள் பற்றிப் பார்த்தோம். இனி, அஃறிணையில் உள்ள ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டுக்கும் உரிய வினைமுற்றுகள் குறித்துக் காண்போம்.

அஃறிணை ஒன்றன் பாலுக்கு உரிய வினைமுற்று விகுதிகள் மூன்று. அவை து, று, டு என்பன. இவை தெரிநிலை வினைமுற்றுகளில் வருவதைப் பற்றி முதலில் காண்போம்.

4.4.1 தெரிநிலை வினைமுற்று

இக்காலத்தில் ஒன்றன்பாலுக்குரிய தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் பெரும்பாலும் ‘து’ விகுதி பயன்படுகிறது.

நிகழ்காலத்தில் இது வருவதற்குச் சான்றுகள்:

ஓடுகிறது, மேய்கிறது, நிற்கிறது போன்றவை.

இறந்தகாலத்தில் ‘து’ விகுதி வருவதற்குச் சான்றுகள்:

ஓடியது, மேய்ந்தது முதலியன.

எதிர்காலத்தில் ‘து’ விகுதி வருவதற்குச் சான்றுகள்:

ஓடுவது, நடப்பது

ஆகியன. எனினும் எதிர்காலப் பொருளில் இச்சொற்களின் பயன்பாடு இன்று குறைவாகவே உள்ளது.

று, டு ஆகியனவும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளே. இவற்றுள் ‘டு’ குறிப்பு வினைமுற்றிலேயே பயன்படுகிறது. ‘று’ எனும் விகுதியும் குறிப்பு வினைமுற்றில் வருகிறது. தெரிநிலை வினைமுற்றில் இது இறந்த காலத்தில் மட்டும் வருகிறது. அதற்குச் சான்று:

போயிற்று, தாவிற்று என (போனது, தாவியது எனும் பொருளில்) வரும்.

4.4.2 குறிப்பு வினைமுற்று

‘கோட்டது’ என்னும் சொல் கொம்பு உடையது எனும் பொருளில் வரும். 'தழையது' என்பதும் தழை உடையது எனும் பொருளில் வரும். காலத்தைத் தெளிவாக உணர்த்தாமையால் இவை குறிப்பு வினைமுற்றுகள். ‘து’ விகுதி இவ்வாறு வருவது போன்று று, டு விகுதிகளும் குறிப்பு வினைமுற்றில் வரும்.

எடுத்துக்காட்டு:
‘று’ விகுதி - பிழையிற்று (பிழை உடையது)
‘டு’ விகுதி - பொருட்டு (பொருளை உடையது)

இச்சொல்லாட்சிகளும் இக்காலத்தில் குறைவாகவே பயன்படுத்தப் படுகின்றன.