5.2 பெயரெச்சம் - விளக்கம்

பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சச்சொல் பெயரெச்சம் எனப்படும். அது வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, பெயரெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் அமையும். பெயரெச்சம் காலமும் செயலும் காட்டும்.

(எ.கா) படித்த பாடம்.
கொடுத்த பணம்

5.2.1 பெயரெச்ச வடிவங்கள்

பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்று வடிவங்களில் அமையும். இவ்வடிவங்களை ‘வாய்பாடுகள்’ என்பர்.

‘செய்த’ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும். ‘செய்கின்ற’ வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்’ வாய்பாடு எதிர்காலம் காட்டும்.

(எ.கா) செய்த - படித்த சிறுவன்
செய்கின்ற - படிக்கின்ற சிறுவன்
செய்யும் - படிக்கும் சிறுவன்

இவற்றுள் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு, தொல்காப்பியர் காலத்தில் நிகழ்காலத்தைக் குறிப்பதாக இருந்துள்ளது. நன்னூலார் காலம் முதற்கொண்டு எதிர்காலத்தைக் குறிக்கத் தொடங்கியது.

5.2.2 பெயரெச்சம் காலம் காட்டும் முறை

1. ‘செய்த’ என்னும் பெயரெச்ச வடிவம், த், ட், ற், இன் என்னும் இடைநிலைகளால் இறந்த காலத்தை உணர்த்தும்.

(எ.கா) த் - படித்த பாடம்
ட் - கண் காட்சி
ற் - தின் கரும்பு
இன் - போயின போக்கு

2. ‘செய்கின்ற’ என்னும் பெயரெச்ச வடிவம், ‘கிறு’, ‘கின்று’, ‘ஆநின்று’ என்னும் இடைநிலைகளால் நிகழ்காலத்தைக் காட்டும். இவற்றுள் ‘ஆநின்று’ இடைநிலை இன்றைய வழக்கில் இல்லை.

(எ.கா) கிறு - உண்கிற சிறுவன்
கின்று - உண்கின்ற சிறுவன்
ஆநின்று - உண்ணாநின்ற சிறுவன்

3.‘செய்யும்’ என்னும் பெயரெச்ச வடிவம், ‘உம்’ என்னும் விகுதியால் எதிர்காலத்தை உணர்த்தும்.

(எ.கா) படிக்கும் சிறுவன்
பாடும் சிறுமி

5.2.3 பெயரெச்சம் கொண்டுமுடியும் பெயர்கள்

பெயரெச்சம், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய அறுவகைப் பெயர்களுள் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு முடியும்.

(எ.கா)   
(1) செய்பவன் - உண்ட சாத்தன், பாடும் புலவன்
(2) கருவி - உண்ட தட்டு, வெட்டும் வாள்
(3) நிலம் - உண்ட அறை, வாழும் இல்
(4) செயல் - உண்ட ஊண், வாழும் வாழ்க்கை
(5) காலம் - உண்ட நாள், துயிலும் காலம்
(6) செயப்படுபொருள் - உண்ட சோறு, கற்கும் நூல்

(ஊண் = உணவு; இங்கு உண்ட செயல் எனப் பொருள் தரும்.)

5.2.4 பெயரெச்சம் மூவிடங்களிலும் இடம்பெறுதல்

பெயரெச்சம், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் இரு திணை, ஐம்பாலுக்கும் பொதுவாக வரும்.

(எ.கா)
தன்மை ஒருமை- உண்ட நான்
தன்மைப் பன்மை - உண்ட நாம் (நாங்கள்)
முன்னிலை ஒருமை- உண்ட நீ
முன்னிலைப் பன்மை- உண்ட நீவிர் (நீங்கள்)
படர்க்கை ஆண்பால்- உண்ட செல்வன்
பெண்பால் - உண்ட செல்வி
பலர்பால் - உண்ட மக்கள்
ஒன்றன்பால் - உண்ட பசு
பலவின்பால் - உண்ட பசுக்கள்