6.6 கால மயக்கம்

ஒரு காலத்திற்கு உரிய சொல் வரவேண்டிய இடத்தில், வேறு ஒரு காலத்திற்கு உரிய சொல் வருதல், கால மயக்கம் எனப்படும். (மயங்குதல் - கலந்து வருதல்)

கால மயக்கத்தை இறந்தகாலத்தில் மயங்குவன, நிகழ்காலத்தில் மயங்குவன, எதிர்காலத்தில் மயங்குவன என மூவகைப்படுத்தலாம்.

6.6.1 இறந்தகாலத்தில் மயங்குவன

விரைவு, இயற்கை, தெளிவு ஆகியவற்றின் காரணமாகவும், வழக்கு நிலையிலும் ஏனைய காலங்கள் இறந்தகாலத்தில் மயங்கிவரும்.

• விரைவுப்பொருள்

எதிர்காலத்திலும் நிகழ்காலத்திலும் வரவேண்டிய சொற்களை விரைவுப்பொருள் கருதி, இறந்தகாலச் சொல்லால் குறிப்பிடுவது உண்டு.

உணவு உண்டு கொண்டிருப்பவன், தன் வருகையை எதிர்நோக்கி அருகில் காத்திருக்கும் நண்பனிடம் ‘உண்டேன்; வந்தேன்’ என்கின்றான். ‘உண்கின்றேன்; வருவேன்’ என்று சொல்ல வேண்டியவன் விரைவு கருதி இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உணவு உண்ணத் தொடங்காத ஒருவனும் இவ்வாறான சூழலில் ‘உண்டேன்; வந்தேன்‘ என்கின்றான். ‘உண்பேன்; வருவேன்‘ எனச் சொல்ல வேண்டியவன் விரைவுப் பொருள் காரணமாக மாற்றி உரைப்பது ஏற்கப்படுகின்றது.

• உலக வழக்கு

எதிர்காலச் சொல், உலக வழக்கில் இறந்தகாலச் சொல்லால் சுட்டப்படுவது உண்டு.

‘நாளை அவன் வந்தால் நீ என்செய்வாய்’ என்பது இதற்கான சான்றாகும். வருவனேல் என எதிர்காலச் சொல்லில் வர வேண்டியது, ‘வந்தால்‘ என இறந்தகாலச் சொல்லாக இடம்பெற்றுள்ளது.

6.6.2 நிகழ்காலத்தில் மயங்குவன

முக்காலத்திற்கும் உரிய பொருளின் தன்மை, மிகுதி, இயற்கை, தெளிவு, உலகவழக்கு ஆகிய நிலைகளில் ஏனைய காலச் சொற்கள் நிகழ்காலத்தில் வரும்.

• முக்கால வினைச்சொல்

செயல்நிகழும் காலத்தின் அடிப்படையில் பொருள்களின் இயக்கத்தை மூன்று காலங்களுள் ஒன்றில் அமைத்துக் கூறுகின்றோம். ஆனால், மூன்று காலத்திற்குமான செயல்களையுடைய பொருள்களின் நிலையை எக்காலத்தில் வைத்துக் கூறுவது?

மலை இருக்கின்ற தன்மை மூன்று காலத்திற்கும் உரியது. மலை இருந்தது, மலை இருக்கின்றது, மலை இருக்கும் என மூன்று காலத்திலும் அமையும். அதன் நிலையை ஒரு வாய்பாட்டால் சொல்ல வேண்டுமானால் என்ன செய்வது?

நிகழ்காலச் சொல்லில் அமைத்துக் கூறினால், அது ஏனைய காலங்களையும் உள்ளடக்கி நிற்பதாக அமையும்,

முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே       (நன்.383)
(ஒத்தியல் - ஒத்து அமைகின்ற; செப்புவர் - கூறுவர்)
(எ.கா) மலை இருக்கின்றது
ஆறு ஓடுகின்றது

6.6.3 எதிர்காலத்தில் மயங்குவன

இறந்தகாலச் சொல் உலக வழக்கில் எதிர்காலச் சொல்லாக மயங்கிவரும்.

‘நான் சிறுவயதில் இம்மரத்தடியில் அமர்ந்து படிப்பேன்’- இங்கு, ‘படித்தேன்‘ என இறந்தகாலத்தில் வரவேண்டியது, ‘படிப்பேன்’ என எதிர்காலச் சொல்லாக மயங்கி வந்தது.