4.4 உயிர் உடைய பொருள்களின் பண்புகள்

இப்பகுதியில் உயிர் உடைய பொருள்களின் பண்புகள் விளக்கப்படுகின்றன. அதாவது, உயிர் உடைய பொருள்களின் பொதுவான குணங்களும் அவற்றிற்கு உரிய தொழில் பண்புகளும் (செய்கைகள்) விளக்கப்படுகின்றன.


4.4.1 உயிர் உடைய பொருள்களின் குணப்பண்புகள்

உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் (நூற்பா 452). அவையாவன: அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறைவு, பொறை, (பொறுமை) ஓர்ப்பு (தெளிவு), கடைப்பிடி, மையல் (மயக்கம்), நினைவு, வெறுப்பு, உவப்பு (மகிழ்வு), இரக்கம், நாண், வெகுளி (கோபம்), துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு, எளிமை, எய்த்தல் (சோர்வு), துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல் (பகை), வென்றி (வெற்றி), பொச்சாப்பு (பொல்லாங்கு), ஊக்கம், மறம், மதம் (வெறி), மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும்.


4.4.2 உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள்

உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள் (குணங்கள்) ஐந்து. அவையாவன:

துய்த்தல் (அனுபவித்தல்), துஞ்சல் (தூங்குதல்), தொழுதல், அணிதல், உய்த்தல் (பிழைத்தல்) ஆகிய இக்குணங்கள் ஐந்தும் எல்லா உயிர் உடைய பொருள்களுக்கும் பொதுவானவையாகும். (நன்னூல், 453)

இனி உயிர் அற்ற பொருள்களின் பண்புகளையும் உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களுக்கு உரிய பொதுவான தொழில் பண்புகளையும் பார்ப்போம்.