4.5 உயிர் அல்லாத பொருள்களின் குணப் பண்புகள் உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள் வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்களும், நறுநாற்றம், துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும், வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும், கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு (காரம்), இனிப்பு என்னும் ஆறு சுவைகளும், வெம்மை (வெப்பம்), தண்மை (குளிர்ச்சி), மென்மை, வன்மை, நொய்மை (நைதல்), திண்மை, இழுமெனல் (வழவழப்பு), சருச்சரை (சொரசொரப்பு) என்னும் எட்டு ஊறுகளும் (தொடு உணர்வுகளும்) உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும். (நன்னூல், 454) |
4.5.1 |
உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற
பொருள்களின் பொதுவான தொழில் பண்புகள்
|
உயிர் உடைய பொருள்களுக்கும் உயிர் அற்ற பொருள்களுக்கும் உரிய பொதுவான தொழில் பண்புகளை இங்கே காண்போம். உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல், 455) ‘தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல் என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும். இசைத்தல் = ஒலித்தல் எடுத்துக்காட்டு: ‘பிள்ளை பிறந்தான்’ - தோன்றல் எனும் தொழில் பண்பு பிள்ளை எனும் உயிர்ப்பொருளுக்கு வளர்தல் போன்ற ஏனைய தொழில் பண்புகளும் பொருந்தி வருவதைக் காணுங்கள். அடுத்து, உயிர் அற்ற பொருள்களுக்கும் மேற்கூறியுள்ள பண்புகள் உள்ளன என்பதைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம். எடுத்துக்காட்டு: பிறை தோன்றிற்று - தோன்றல் எனும் தொழிற்பண்பு உயிர் அல்லாத பல்வேறு பொருள்களுக்கும் மேற்கூறிய பண்புகள் பொருந்தி வருவதை நீங்களே சொல்லிப் பாருங்கள். |