2.4 உவமைத் தொகை
 

உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.

போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.

(எ-டு.)  பவளவாய்

இது பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம் என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபு; வாய் என்பது உவமேயம். (உவமானம் - உவமையாகும் பொருள்; உவமேயம் - உவமிக்கப்படும் பொருள்.)

இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும். (மெய் - வடிவம்; உரு - வண்ணம்.)

(எ-டு.)
புலி மனிதன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயனுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருவுவமைத் தொகை

இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.

உவம உருபிலது உவமத் தொகையே       (நன்னூல் - 366)