4.6 மூவகைச் சொல் |
||||||||||
மூவகைப் பெயர்கள் என்பன, உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என்னும் படர்க்கை இடத்திற்கு உரிய பெயர்கள் ஆகும். (எ-டு)
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகி இருதிணையிலும் பயன்படுத்தப்படும் பெயர் விரவுப் பெயர் ஆகும். மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் இலட்சுமி என்னும் பெயரை உயர்திணையில் பெண்ணுக்கும் பெயராகச் சூட்டுகிறார்கள். அஃறிணையில் மாட்டுக்கும் பெயராகச் சூட்டுகிறார்கள். எனவே அப்பெயர் விரவுப் பெயராயிற்று. இம்மூவகைப் பெயர்களோடு சுட்டுப் பெயர் சார்ந்தால், அச்சுட்டுப் பெயர் அம்மூவகைப் பெயர்க்கும் பின்னால் வரும். வினை நிகழ்ச்சி ஏதும் இல்லை என்றால், அப்பெயர்க்கு முன்னும் பின்னும் வரும். இது செய்யுள் வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரண்டில் பேச்சு வழக்குக்கு உரிய மரபு. (எ-டு) மாதவி ஆடினாள். அவளைப் பாராட்டினர். முதல் தொடரில் மாதவி என்பது உயர்திணை இயற்பெயர். அவள் என்னும் சுட்டுப் பெயர் இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்று அவளை என வந்தது. அவள் என்னும் சுட்டுப் பெயரை முதலில் பயன்படுத்தினால் அச்சுட்டுப் பெயர் யாரைக் குறிக்கிறது என்னும் ஐயம் ஏற்படும். அதனால் இயற்பெயரை முதலில் சொல்லி அவ்வியற்பெயரைக் குறிக்கும் சுட்டுப் பெயரை அடுத்துக் கூறுதல் மரபு. இம்முறை செய்யுளுக்குப் பொருந்தாது என்பதை நினைவில் கொள்க.
|