வினாவின் எழுவாயாக வரும்பெயர்களின் திணை, பால்
ஆகியனவும் வினாப் பயனிலைகளில் வரும் திணை, பால்
ஆகியனவும் மாறி வருதல் வழுவாகும்.
(எ.டு.)
திணைவழு வினாக்கள்:
அங்கே கிடப்பது கட்டையா? மனிதனா?
பால்வழு வினாக்கள்:
அங்கே வருகிறவன் ஆணா? பெண்ணா?
மேலே கூறிய முதல் எடுத்துக்காட்டில் ‘கிடப்பது’ என்னும்
அஃறிணைப் பெயர் எழுவாய்க்கு, வினாப் பயனிலையாக வருவன
‘கட்டை’ என்னும் அஃறிணைப் பெயரும் ‘மனிதன்’
என்னும்
உயர்திணைப் பெயருமாகும்.
இரண்டாவது பிரிவு எடுத்துக்காட்டில் ‘வருகிறவன்’
என்னும்
ஆண்பால் பெயர் எழுவாய்க்கு வினாப் பயனிலையாக வருவன
‘ஆண்’ என்னும் ஆண்பால் பெயரும் ‘பெண்’ என்னும் பெண்பால்
பெயருமாகும்.
இவ்வாறு வினாத் தொடரின் எழுவாய்க்கு உரிய திணை, பால்
ஆகியவற்றிற்கு மாறாக வினாப் பயனிலைகள் வருமானால் அது
வினா வழுவாகும்.
இதேபோல் ஒரு வினாத் தொடரில் முதலும் சினையும்
கலந்து (மயங்கி) வருதல் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.
(எ.டு.) என்னைக் கண்டது கண்ணோ? கவிஞனோ?
இத்தொடரில் கவிஞன் என்பது முதல்
குறித்த பெயராகும்.
கண் என்பது அம்முதலின் சினையாகும். இவ்விரண்டையும்
ஒரு வினாத் தொடரில் சேர்த்து வினவுவது வழுவாகும்.
வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல்
(நன்னூல் : 387)
|