1.3 பிற்காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு பொதுவாக மலைகள், ஆறுகள், காடுகள், போன்றவை ஒருபகுதியை இன்னொரு பகுதியிலிருந்து பிரித்து விடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இரு கடற்கரை ஓரங்களிலும் அமைந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒன்றாய் இணைகின்றன. இவ்விரு தொடர்களுக்கு இடையே சமவெளி ஒன்று அமைந்துள்ளது. மேற்குத் தொடருக்கு மேற்கிலும், கிழக்குத் தொடருக்குக் கிழக்கிலும் சமவெளிகள் உள்ளன. இவையேயன்றிப் பல குன்றுகளை அடுத்தும் சமவெளிகள் உள்ளன. இச்சமவெளிகளில் வாழ்ந்த மக்கள் ஆங்காங்குத் தனித்தனி நாட்டு மக்களாகவே வாழ்ந்து வந்தனர். பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பழந்தமிழகம் பிரிந்து கிடந்ததை நாம் அறிவோம். இதன் காரணத்தால் அவரவருக்கு எனத் தனியான வட்டார மொழி, பண்பாடு, கலாச்சாரம் வேறுபட்டுக் காணப்பட்டது. இன்றைய கேரளம் சங்க காலத் தமிழகத்தில் இருந்த சேர நாடே ஆகும். சங்க காலத்தில் சேர நாட்டில் வழங்கிய தமிழ் காலப்போக்கில் சிறிது சிறிதாக மாறுபட்டுக் கேரளத்தில் ‘மலையாளம்’ என்ற தனி மொழியாக வழங்கலாயிற்று, இன்றும் வழங்கிவருகிறது. ஆக, கேரளநாடு தற்காலத்தில் தமிழகத்தோடு இல்லை. ஆகவே தமிழ்நாடு முற்காலத்தில் இருந்ததைவிடத் தற்காலத்தில் எல்லை சுருங்கியதாக இருக்கிறது.
|