1.5 இயற்கைசார் தொழில்கள்
நாட்டில் மக்கள் வாழ்வதற்குத் தொழில் மிகவும்
இன்றியமையாதது. ஒரு தொழிலானது அந்நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தட்பவெப்ப
நிலைக்கும் ஏற்றாற் போல் அமைகின்றது. தமிழகத்தில் மழையை நம்பி நீர்ப் பாசனத்தைப்
பெருக்கி விவசாயம் செய்கின்றனர். தமிழகத்தைச் சுற்றிக் கடல் இருப்பதால் மீன்பிடி
தொழிலும், முத்துக்குளித்தல் மற்றும் உப்பளத் தொழிலும் (உப்பு விளைக்கும்
தொழில்) பண்டைக்காலம் முதல் இந்நாள் வரை நடைபெற்று வருகின்றன.
மேற்கு
மலைத் தொடரில் ஆனைமலைகள் சிறப்பானவை. இத்தொடர் முழுவதிலும் காடுகள் அடர்ந்து
செழித்து வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உயரமான,
தேக்கு மரங்கள் இருந்ததால் அந்நாளில் தச்சுவேலை நடைபெற்று வந்தது.
மரம் கொல் தச்சன்
கை வல் சிறா அர்
(புறநானூறு,
206:11)
எண் தேர் செய்யும்
தச்சன்
(புறநானூறு,
87:3)
அடர்ந்த
காடுகளில் வன விலங்குகளும் சாதுவான விலங்குகளும் காணப்பட்டதால் வேட்டைத் தொழிலும்
நடைபெற்று வந்தது. வேளாண் தொழிலுக்கும்,
வேட்டையாடுதலுக்கும்,
தச்சுவேலைகளுக்கும் உலோகத்திலான கருவிகள் தேவைப்பட்டதால் உலோகத் தொழிலும் நடைபெற்று
வந்தது. நிறைந்த புல்வெளி காணப்பட்டதால் கால்நடை வளர்ப்பும் மிகுதியாக நடைபெற்று
வந்தது.
1.5.1
வேளாண்மை
பழங்காலம் முதல் உழவே தமிழகத்தின் முக்கியத்
தொழில் ஆகும்.
நாட்டின் பொருளாதாரத்திலும் இது முக்கிய இடம் வகிக்கின்றது. அக்டோபர், நவம்பர்
மாதங்களில் வீசும் வடகிழக்குப் பருவக்காற்றுத் தமிழகத்திற்கு ஓரளவிற்கு மழையை
அளிக்கின்றது. இதனால் இக்காலங்களில் நீர்நிலைகள் நிரம்பும் சூழ்நிலை உருவாகிறது.
இந்நீரைக் கொண்டு மக்கள் வேளாண்மை செய்கின்றனர்.
பழந்தமிழகத்தில் நெல்,
சோளம்,
கம்பு,
கேழ்வரகு,
வரகு,
தினை முதலிய தானியங்கள் பயிரிடப்பட்டன. தென்னையும்,
கரும்பும்,
பயிரிடப்பட்டன. மிளகு,
ஏலம்,
இஞ்சி,
இலவங்கம் முதலிய மலை விளை பொருட்கள் பழந்தமிழகத்தின் சிறந்த ஏற்றுமதிப் பொருள்களாக
இருந்தன.
1.5.2 மீன் பிடித்தல்,
முத்துக்குளித்தல், உப்பு விளைத்தல் 
தமிழகத்தைச் சுற்றி மூன்று பக்கமும் கடல்கள்
சூழ்ந்துள்ளதால் மீன்பிடி தொழிலும், முத்து எடுத்தல் தொழிலும், உப்புத் தொழிலும்
சிறப்புற்று விளங்குகின்றன. முத்துக்குளித்தல் பற்றிப் பழங்கால இலக்கியங்களில்
சான்றுகள் பல காணப்படுகின்றன.
|