2.0 பாட முன்னுரை உலக வரலாற்றில் தமிழக வரலாறானது மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்திருந்தது தெரிய வருகிறது. தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள் தொல்பொருள் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், அயல் நாட்டவர் சான்றுகள் என மூன்று தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. தொல்பொருள் சான்றுகள் என்னும் தலைப்பின் கீழ் கல்வெட்டுகள், பட்டயங்கள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள் ஆகியவை விளக்கப்படுகின்றன. இலக்கியச் சான்றுகள் என்னும் தலைப்பின் கீழ் தமிழ் இலக்கியச் சான்றுகள், பிறமொழி இலக்கியச் சான்றுகள் விளக்கப்படுகின்றன. அயல் நாட்டவர் சான்றுகள் என்னும் தலைப்பின் கீழ் அயல்நாட்டார் குறிப்புகள், ஐரோப்பியர் கால ஆட்சித்துறை ஆவணங்கள் விளக்கப்படுகின்றன. தமிழ் இலக்கியச் சான்றுகள் என்று கூறும்போது அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருக்குறள், பெரிய புராணம், தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கலிங்கத்துப் பரணி, மூவருலா போன்ற இலக்கிய நூல்களும், தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்களும் தமிழக வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிகின்றன. மேலும் மகாபாரதம், இராமாயணம் ஆகிய வடமொழிக் காப்பியங்களில் காணப்படும் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகளும் துணைபுரிகின்றன. அயல் நாட்டவர் குறிப்புகளைப் பொருத்தவரையில் தாலமி, பிளினி, ஸ்திராபோ, மெகஸ்தனீஸ், யுவான் சுவாங் போன்ற அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்வதற்குத் துணைபுரிகின்றன. கி.பி 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டியதிலிருந்து அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை அவர்களால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் தமிழக வரலாற்றின் பெரும்பகுதியைக் கூறுகின்றன. |