3.0 பாட முன்னுரை இந்தியா என்று அறியப்படும் தேசத்தின் தென்பகுதியாக உள்ள தமிழகம் என்ற நிலப்பரப்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்பழந்தமிழகம் என்ற நிலப்பரப்பைப் பற்றி நான்கு பெருந்தலைப்புகளின் கீழ்க் காண இருக்கின்றோம். வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் என்ற தலைப்பில் இந்தியாவில்தான் தொல்லுயிர்கள் வளர்ச்சியுற்றன என்பது பற்றிக் காண இருக்கிறோம். பழந்தமிழகப் பின்னணி என்ற தலைப்பில் தமிழகம் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, வேறு ஒரு அயல் இனத்தின் ஆதிக்கம் தன் மீது செலுத்தப்பட்டாலும் இன்றையளவிலும் தன் தனித்தன்மையினின்றும் மாறுபடாமல் காணப்படுகிறது என்பதையும், இலெமூரியாக் கண்டம் எவ்வாறு இருந்து தற்போது எவ்வாறு மாறியது என்பதையும் காணலாம். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலிலும், சிலப்பதிகாரத்திலும் பழந்தமிழகம் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன என்பதனைக் காணலாம். பழந்தமிழகப் புவியியல் கூறுகள் என்னும் தலைப்பில் பழந்தமிழகம் எவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தாளப்பட்டிருந்தது என்பது பற்றிக் காணலாம். நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் என்னும் தலைப்பில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் எனப் பழந்தமிழர் நாகரிகப் பாதையில் நடையிட்டுச் சென்றனர் என்பது பற்றிக் காணலாம். |