4.0 பாட முன்னுரை இப்பாடம் பண்டைய தமிழர்கள் அயல் நாட்டாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது. அப்பண்டைய தமிழர்கள் வாணிபத் தொடர்பினை அயலகத்தாருடன் மேற்கொண்டதோடு தூதுவர்களையும் அயல் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர் என்பது பற்றியும் விளக்க முற்படுகிறது. மேலை நாட்டாருக்கு என்னென்ன பொருள்களை ஏற்றுமதி செய்தனர் என்றும், என்னென்ன பொருள்களை இறக்குமதி செய்தனர் என்றும் இப்பாடம் விளக்குகிறது. மேல் நாட்டாருடன் மட்டுமன்றிக் கீழை நாட்டாருடனும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர் என்றும், தமிழகத்தின் வடபகுதியில் உள்ள வடஇந்தியருடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் விளக்குகிறது. இத்தகைய தொடர்பால் என்னென்ன மாற்றங்கள் சமயம், மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கின்றன என்பது பற்றி எல்லாம் மிகவும் விரிவாக விளக்குகிறது. |