4.4 வட இந்தியருடன் வாணிபத் தொடர்பு ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று அயல் நாடுகளில் தங்கி வாணிபம் செய்து வரவேண்டுமென்றால் அந்நாட்டில் உள்நாட்டு வாணிபம் மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, தமிழ் நாட்டின் உள்நாட்டு வாணிபம் செழித்து ஓங்கியிருந்தது எனலாம். பண்டைய தமிழகத்து வாணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிக் கொண்டு, வண்டிகளிலும், பொதிமாடுகளின் மேலும் தம் பண்டங்களை ஏற்றிச் சென்று ஊர் ஊராக விற்பனை செய்தனர். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சான்று : பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி (பெரும்பாணாற்றுப்படை :65) (எருத்து – எருது; உமணர் – உப்பு வாணிகர்; பதி – ஊர்; நெடு நெறி – நெடிய வழி.) உள்நாட்டு வாணிபத்தைப் பொருத்தவரையில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே காணப்பட்டது. தென் இந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் இடையே கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிபம் நடைபெற்று வந்தது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு ஊரும் ஒருசில பண்டங்களுக்குப் பெயர் பெற்று இருந்தது. மெகஸ்தனிஸ் என்பவர் பாண்டிய நாட்டு முத்துக்களை மிகவும் புகழ்ந்து கூறுகிறார். கௌடில்யர் தாம் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் தாமிரபரணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துக்களைப் பற்றியும், மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடை வகைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். உறையூர், பருத்தி நெசவில் பெயர் பெற்று விளங்கியது. தமிழகத்துப் பொருள்கள் வடநாட்டுக்கு வங்கக் கடல் வழியாகவே பெரும்பாலும் சென்றன. தரை வழியாக நடைபெற்ற வாணிபம் மிகவும் குறைவுதான் எனலாம். |