6.1 சங்க கால அரசியல் சங்க காலத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பேரரசர்கள் இருந்தனர். இம்மூவருக்குள்ளே ஆதிக்கப் போட்டிகளும், போர்களும் அடிக்கடி நடைபெற்று வந்தன. மூவேந்தர்களுள் வலிமை பெற்றவன் அவ்வப்போது பிற வேந்தர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தினான். கரிகால் சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் அவனது ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சேரன் செங்குட்டுவன் காலத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் அம்மன்னனிடம் இருந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் பிற தமிழ் வேந்தர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தினான். மூவேந்தர்களே மட்டுமின்றிச் சில குறுநில மன்னர்களும் மலைகள் போன்ற இடத்தைப் பெற்று ஆட்சி செலுத்தி வந்தனர். சங்க காலத் தமிழகத்தில் மன்னனின் முடியாட்சி நிலவியது. மன்னனைக் கோ, வேந்தன், கோன், இறைவன் எனப் பல பெயர்கள் இட்டு அழைப்பது உண்டு. அரியணை உரிமை பொதுவாக மன்னனின் மூத்த மகனுக்குக் கிடைத்தது. வாரிசு உரிமை என்பது சொத்து உரிமை போன்றே காணப்பட்டது. பெண்களுக்கு வாரிசு உரிமை இல்லை. மன்னன் அரசாட்சி செய்து கொண்டிருக்கும்போது வாரிசு இன்றி இறந்தால் மக்கள் யானையின் உதவியுடன் மன்னனைத் தேர்ந்தெடுத்தனர். மன்னனுக்கு அவை (அரசவை) இருந்தது. அவ்வவையில் அரசுப் பணிகள் செய்யப்பட்டன. மன்னனே அவைக்குத் தலைவனாக இருந்தான். அவையில் அரசனோடு அரசியும் வீற்றிருக்கும் வழக்கம் இருந்தது. இவர்களோடு அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், புலவர்களும், மன்னனின் நண்பர்களும் கலந்து உரையாடினர். வேந்தர்களுக்கு அவையிருப்பது போலக் குறுநில மன்னர்களுக்கும் அவை இருந்தது. பாரியின் அவையில் கபிலரும், அதிகமான் அவையில் ஔவையாரும், செங்குட்டுவன் அவையில் பரணரும் அமர்ந்திருந்தனர். அவையில் இலக்கியங்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. அரசனுக்கு ஆலோசனை வழங்கி நல்லாட்சியை ஏற்படுத்துவதே அவை உறுப்பினர்களின் முக்கியப் பணியாகும். அவையோர் மன்னன் அறம் தவறிச் செயல்பட்டபோது அவனுக்கு அறவுரை கூறி அவனை நல்வழிப்படுத்தினர். அறன் அறிந்து ஆன்றுஅமைந்த
சொல்லான் எஞ்ஞான்றும் (திருக்குறள்,635) இக்குறள், அரசன் அமைச்சர்களைத் தேர்ச்சித் துணையாகக் கொண்டான் என்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நீதி வழங்குவதே அவையில் நடைபெற்ற முக்கியப் பணியாகும். அவ்வப்போது மன்னன் ஆணைகளைப் பிறப்பித்தான். அவ்வாணைகள் முரசு கொட்டி மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. பொதுவாக அரசவை காலையில் கூடுவது வழக்கம். அதற்கு நாளவை என்றும் நாளிருக்கை என்றும் பெயர்கள் வழங்கி வந்தன. நாளவை என்பதற்கு நாளோலக்கம் (the durbar of a king) என்று பொருள். செம்மல் நாளவை அண்ணாந்து
புகுதல் (புறநானூறு, 54:4-3) (சேரனது தலைமை உடைய அவைக்களத்தின்கண் செம்மாந்து சென்று புகுதல் எம்மைப் போன்ற வாழ்க்கையை உடைய இரவலர்க்கு எளிது. எம்மன-எம் அன்ன, எம்மைப் போன்ற.) அரசவையில் இசை முழங்கிக் கொண்டிருக்கும். இதற்குச் சான்று மலைபடுகடாமில் காணப்படுகிறது. இசை பெறு திருவின்
வேத்தவை ஏற்ப (மலைபடுகடாம்: 39-40) (இசையை எக்காலமும் கேட்கின்ற செல்வத்தினை உடைய அரசனுடைய அவை) ஆட்சியை மேற்கொண்டிருக்கும் மன்னனை அரச பதவியிலிருந்து நீக்க இயலாது. இருப்பினும் மன்னனே தானாக முன்வந்து மனம் நொந்து அரச பதவியை விட்டு விலகலாம். இதற்கான சான்றுகள் சங்க காலத்தில் கிடைக்கப்பெறுகின்றன. கரிகால் சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்போரில் சேரன் பெருஞ்சேரலாதன் முதுகில் காயமுற்றான். இந்த இகழ்ச்சியினைத் தாங்க முடியாமல் அச்சேர மன்னன் தன்னை மாய்த்துக் கொண்டான் என்பதனை இலக்கியம் வாயிலாக அறிய முடிகிறது. சேரன் கணைக்கால் இரும்பொறையைக் கழுமலம் என்னுமிடத்தில் சோழன் செங்கணான் தோற்கடித்தான். பின்பு சேரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது சிறைக்காவலன் இரும்பொறையை மதிக்காததால், அவன் நீரும் உணவும் உண்ணாமல் இருந்து உயிர் துறந்தான். இதுபோன்ற சம்பவங்களிலிருந்து மன்னர்கள் தாங்களாகவே அரச பதவியை விட்டுப் போகின்றனர் என்பது தெரிகிறது. அரண்மனையில் பல பெண்களைக் கொண்ட அந்தப்புரம் இருந்தது. இளவரசர்கள் அரசுப் பிரதிநிதிகளாகச் செயலாற்றினர். அரசருக்கான செலவுகள் பொதுநிதியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டன. அரசு வருவாய் பணமாகவும், பொருளாகவும் பெறப்பட்டது. மன்னர் அரச முடியையும், அடையாளங்களையும் கொண்டிருந்தனர். குறுநில மன்னர்களுக்கு அத்தகைய அரச முடியும் அடையாளங்களும் இல்லை. போர் முரசு அரசரின் அதிகாரத்திற்கு அடையாளமாக
விளங்கியது. சங்ககால மன்னர்கள் வாளையும் பெற்றிருந்தனர். போர் முரசு போல் மன்னர் வாளையும் போற்றி வணங்கி வந்தனர். அதனை நீரில் நீராட்டி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். சங்க காலத்தில் மன்னர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளச் சின்னமாகக் கொடியைக் கொண்டிருந்தனர். சேரர் வில்கொடியையும், சோழர் புலிக்கொடியையும், பாண்டியர் மீன்கொடியையும் கொண்டிருந்தனர். போரின்போது பகைவரின் கொடியை அழிப்பது வீரர்களின் நோக்கமாக இருந்து வந்தது. கோட்டையில் கொடி பறக்கவிடப்பட்டது. பேரரசுகளின் தலைநகரிலும், அகன்ற தெருக்களிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டன. குறுநில மன்னர்கள் தனிக் கொடியைப் பெற்றிருந்தனர். அவர்கள் பேரரசருக்குக் கப்பம் கட்டி ஆட்சி செலுத்துபவர் என அறியலாம். கைப்பற்றப்பட்ட நாடு, வெற்றி பெற்ற நாட்டின் அடையாளச் சின்னத்தையும் கொடியில் பதித்துப் பறக்க விட வேண்டுமென்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது. சங்க கால மன்னர்கள் பல்வேறுபட்ட மாலைகளைப் பெற்றிருந்தனர். போர்க்களத்தில் பல்வேறு மன்னர்களின் படையைப் பிரித்து அறியும் பொருட்டு வேறுபட்ட மாலைகள் அணியப்பட்டன. சிற்றரசர்களும் மாலை அணிந்து கொண்டனர். சான்றாக ஆய் அண்டிரன் சுரபுன்னை மாலையையும், சேரர் பனம்பூ மாலையையும், சோழர் ஆத்திப்பூ மாலையையும் பாண்டியர் வேப்பம்பூ மாலையையும் அணிந்திருந்தனர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் மரம் இருந்தது. அம்மரம் தெய்வத் தன்மை பெற்றிருந்ததாக எண்ணப்பட்டது. காவல் மரம் வெட்டப்பட்டால் அந்நகரம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுவதற்கு அமைச்சர்கள் இருந்தனர். தவறான ஆலோசனை கூறி அதனால் தீமை விளையுமாயின் ஆலோசனை வழங்கிய அமைச்சர்கள் ஏளனம் செய்யப்பட்டனர். அரசுப் பதவியில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு மன்னன் பட்டங்கள் வழங்கிச் சிறப்புச் செய்தான். சான்றாக எட்டி, காவிதி, ஏனாதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. சங்க கால மன்னர்கள் தூதுவர்களை நியமித்திருந்தனர். தூது செல்லுதல் அவர்களது பணியாகும். பொதுவாகத் தூதுவர்கள் நடுவராக இருந்து வந்தனர். ஔவையார் அதிகமான் நெடுமான் அஞ்சியின் தூதுவராகத் தொண்டைமான் அவைக்குச் சென்றார். பெரும்புலவரான கோவூர்கிழார் தூதுவராகச் செயல்பட்டு, நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைத் தவிர்த்து அவர்கள் இருவருக்கும் இடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டார். சங்க கால மன்னர்கள் தூதுவர்களைப் போல் ஒற்றர்களையும் நியமனம் செய்தனர். ஒற்றர் முறை நிரந்தரமான அமைப்பாக இருந்து வந்தது. இவ்வொற்றர்கள் பல்வேறு வகைப்பட்ட சத்தங்களை எழுப்பித் தங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒற்றர்கள் உள்நாட்டு மக்களையும், அயல் நாட்டினரையும் உளவு பார்த்து வந்தனர். மேலும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், அரச குடும்பத்தினர், பகைவர்கள் ஆகியோர்களை உளவு பார்த்து வந்தனர். இவர்கள் மாறுவேடங்களில் இருந்து வந்தனர். ஒற்றர்கள் கூறுவது மற்ற ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. ஓர் ஒற்றர் கூறுவதை உண்மையானது என்று முடிவு செய்யாமல், ஒற்றர்களுக்கு ஒற்றராகச் செயல்படும் மற்றோர் ஒற்றரின் கருத்தைக் கேட்டு உறுதி செய்யப்பட்டது. மூன்றாவது ஒற்றரையும் கேட்டுச் செய்திகள் சேகரிக்கப்பட்டன. ஒற்றர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் தனியாகச் செயல்பட்டனர். ஒற்றர் தவறாகச் செயல்பட்டால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சங்க கால மன்னர்கள் எப்போதும் தம்முடைய அண்டை நாடுகளைக் கைப்பற்றும் எண்ணத்துடனே இருந்து வந்தனர். இதற்காகப் போர்க்கருவிகள், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை போன்றவைகளை நிரந்தரமாக வைத்திருந்தனர். இப்படைகளில் வீரம் பொருந்திய மறவர், மள்ளர், எயினர், மழவர், வல்லம்பர், பரதவர் போன்றோர் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சங்ககால மன்னர்கள் பல இடங்களை வெற்றி கொண்டுள்ளார்கள். சான்றாக, கரிகால் சோழன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரைக் கூறலாம். இவர்களுள் கரிகால் சோழன் வட இந்தியா மட்டும் அல்லாமல் இலங்கைக்கும் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டான். |