6.2 சங்க கால ஆட்சி முறை

பொதுவாகச் சங்க காலத்தில் நற்குணங்கள் நிறைந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஒரு சிலர் கொடுங்கோலாட்சியும் செய்து வந்தனர். மன்னர்கள் மக்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்டனர் என்பதும் புரிகிறது. ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை மன்னர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர்.

சங்க காலத்தில் ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தன.

6.2.1 ஊராட்சி

ஊராட்சி பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சோழப் பேரரசு காலத்தில் ஊராட்சி ஓங்கி வளர்ந்து இருந்தது. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் எனப் பலவகை ஊர்கள் இருந்தன. இவ்வூர்களில் ஆட்சி எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைக் காண்போம்.

ஊரின் நடுவில் மக்கள் கூடிப் பேசுவது வழக்கமாக இருந்து வந்தது. இவ்வாறு கூடின கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம், அவை என்னும் பெயர்கள் இருந்ததாகப் பழங்காலத்து இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய இடம் எனவும், அம்பலம், பொதியில் என்னும் இரண்டும் சிறுமாளிகையைக் குறிப்பிடுகின்றன என்றும் அதன் நடுவில் ஒரு பீடம் இருந்ததாகவும் கருதுகின்றனர்.

பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகிறது.

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்

(பட்டினப்பாலை: 247-249)

(அந்தி-இருள் சூழும் மாலை நேரம்; மாட்டிய- கொளுத்திய; நந்தா விளக்கு-அணையாத விளக்கு; வம்பலர்-புதியவர்கள்; கந்து-தூண்).

சில ஊர்களில் பெரிய மரத்தடியில் மன்றம் கூடியது. குறிப்பாக, வேப்ப மரத்தடியில் இது அமைந்திருந்தது எனப் புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.

மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப

(புறநானூறு, 371:7)

இம்மன்றத்தில் முதியோர்கள் கூடினர். அக்கூட்டத்தில் மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்க்கும் பணி நடைபெற்று வந்தது. சில சமயங்களில் ஊர்ப் பொதுக்காரியங்களையும், சமூக நலத் திட்டங்களையும் மன்றத்தார் பொறுப்பேற்று நடத்தி வந்தனர்.

6.2.2 நகராட்சி

சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமை போல் நகரங்களில் பட்டினம், பாக்கம் எனச் சில இருந்தன. இவற்றில் பட்டினம் என்பது கடலோரத்தில் இருந்த நகரத்தைக் குறித்தது. பாக்கம் என்பது பட்டினத்தின் ஒரு பகுதியானது எனலாம்.

சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை புகார் (காவிரிப்பூம்பட்டினம்) கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர், முசிறி, காஞ்சி முதலியவை.

நகரங்கள் வணிகத்தினாலும், தொழில் சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. குறிப்பாக, மதுரையும் காவிரிப்பூம்பட்டினமும் சிறப்புற்று வளர்ந்திருந்தன.

இரவு நேரங்களில் நகரங்கள் பாதுகாக்கப்பட்டன. ஊர்க்காவலர் என்பவர்கள் பாதுகாவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

6.2.3 வருவாய்

நிதியின்றி நிருவாகத்தை நடத்த முடியாது. ஆதலால் நாட்டிற்கான வருமானம் பல வழிகளில் திரட்டப்பட்டது. நிலவரி அரசின் முக்கிய வருவாய் ஆகும். விளைச்சலில் ஆறில் ஒரு பாகம் அரசுக்கு வரியாக வசூலிக்கப்பட்டது. இவ்வருவாய்களுடன் சிற்றரசர்கள் செலுத்திய திறையும் அரசாங்கத்தின் வருவாயில் முக்கிய இடம் வகித்தது. மன்னன் போர் புரிந்து ஒரு நாட்டை வென்றால் பெரும்பாலும் அந்நாட்டிலிருந்து செல்வங்களைக் கைப்பற்றுவது வழக்கம். இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்வங்களும் அரசிற்கு வருவாய் ஆகும். குற்றம் புரிந்தோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வரி வசூலிக்கப்பட்டது. இது போன்ற வரிகளை மக்கள் பொருளாகவோ அல்லது பணமாகவோ அரசுக்குச் செலுத்தலாம்.

வரி வசூலிப்பதற்கு என்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாரியத்தில் வரி வசூலித்த அதிகாரி வாரியர் என்று அழைக்கப்பட்டார். வரி பற்றிய கணக்குகளைப் பராமரித்தவர் ஆயக் கணக்கர் எனப்பட்டார்.  வரிவசூலிப்பது போல் வரிவிலக்கும் சங்க கால அரசியலில் இருந்ததாகத் தெரிகிறது. கோயில் கட்டுதல், நீர்ப்பாசனத்திற்காகக் கால்வாய்கள் மற்றும் குளங்கள் வெட்டுதல், பிற பொதுப்பணிகள் வழங்குதல் போன்ற செலவுகளுக்கு அரசின் வருவாயிலிருந்து செலவு செய்தனர்.

6.2.4 நாணயங்கள்

அரசாங்கத்தால் நாணயங்கள் அச்சிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. நாணயங்கள் தயாரிப்பதற்கு என்று பொற்கொல்லர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு அரசரும் ஒரு அடையாளத்தை அவர்கள் நாட்டு நாணயத்தில் பொறித்துக் கொண்டனர். இதற்குச் சான்றாகச் சேர நாட்டு நாணயத்தில் வில்லும், சோழ நாட்டு நாணயத்தில் புலியும், பாண்டிய நாட்டு நாணயத்தில் மீனும் பொறிக்கப்பட்டிருந்தன.

பொன் என்பது தங்க நாணயமாகும். தாமரை மொட்டுப் போன்ற நாணயம் காசு என்று கூறப்பட்டது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
சங்க காலத்தில் தமிழகம் எத்தனை பேரரசுகளால் ஆளப்பட்டது? அவை யாவை?
2.
சங்க காலத்தில் மன்னன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
3.
அரசவைக்கு மற்றொரு பெயர் யாது?
4.
போர் முரசு எவ்வாறு செய்யப்பட்டது?
5.
சோழ மன்னர்கள் எந்தக் கொடியைக் கொண்டிருந்தனர்?
6.
சேரர் அணிந்த மாலை யாது?
7.
ஒற்றர்கள் தங்களுக்குள் எவ்வாறு செய்தியைப் பரிமாறிக் கொண்டார்கள்?
8.
மன்னனின் படையில் யார் அதிகமாகக் காணப்பட்டனர்?
9.
ஊர் நடுவில் மக்கள் கூட்டிய கூட்டத்திற்கு என்ன பெயர்?
10.
கடலோரத்தில் இருந்த நகரத்தை எவ்வாறு சுட்டினர்?