1.1 களப்பிரர் வரலாற்றுச் சான்றுகள் சங்க கால வரலாற்றை அறிய அக்காலத்தில் தோன்றிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் இலக்கிய நூல்கள் பெரிதும் துணைபுரிகின்றன. சங்க காலத்தைப் போலவே களப்பிரர் காலத்திலும் நல்ல பல இலக்கிய நூல்கள் தோன்றின. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூல்கள், திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவர் பாடிய திருவந்தாதி நூல்கள் மற்றும் முத்தொள்ளாயிரம் ஆகியவை களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். இந்நூல்களில் களப்பிரரைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்னும் பௌத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும். ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய கல்லாடம், பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன. மேலும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலிலும் களப்பிரர் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. |