1.4. களப்பிரர் வீழ்ச்சி களப்பிரர்கள் தமிழ் நாட்டில் பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் ஆண்டு வந்த காலத்தில், தொண்டை மண்டலத்தைப் பல்லவர்கள் ஆண்டு வந்தனர். இப்பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-550) என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் பப்பதேவன், சிம்மவர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் ஆகிய சிலருடைய வரலாறு மட்டும் ஓரளவு அறியப்படுகிறது. முற்காலப் பல்லவர்களுக்கும், களப்பிரர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்றனவா என்பதை அறிய முடியவில்லை. கி.பி. 575இல் கடுங்கோன் என்ற பாண்டியன், பேராற்றல் படைத்த பெருவீரர்களுடன் வந்து, அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு வந்த களப்பிர அரசனைப் போரில் வென்று, தன் நாட்டைக் கைப்பற்றி, மதுரையில் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். இதனை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகிறது. ஏறத்தாழ இதே காலத்தில் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன் (கி.பி 575-615) களப்பிரர்களை வென்று, அவர்களின் ஆட்சியின்கீழ் இருந்த சோழ நாட்டினைக் கைப்பற்றிப் பல்லவர் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் என்று வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் கூறுகின்றன. பாண்டியராலும், பல்லவராலும் வீழ்ச்சியடைந்த களப்பிரர் கி.பி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்களாக முத்தரையர் என்ற பெயரில் தஞ்சாவூர், செந்தலை, கொடும்பாளுர் என்ற ஊர்களில் இருந்து ஆட்சி புரியலானார்கள். இம்முத்தரையர் சிலபோது பல்லவர்களுக்கும், சிலபோது பாண்டியர்களுக்கும் போர்த்துணைவர்களாக இருந்து வந்தனர்.
|