2.5 தொகுப்புரை

இப்பாடத்தின் வாயிலாகப் பல்லவர்கள் யார் என்பது பற்றியும், பல்லவ அரசர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகள் பற்றியும் படித்து நன்கு அறிந்திருப்பீர்கள்.

பல்லவர்கள் தமிழகத்தை ஆண்டு இருந்தாலும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொள்ளவில்லை என்பது பற்றியும் அறிந்து கொண்டீர்கள்.

பல்லவர்கள் தங்கள் அரசியலைப் பற்றிப் பட்டயங்கள், கல்வெட்டுகள் மூலம் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டீர்கள்.

பல்லவ மன்னர்கள் தங்களின் பட்டயங்களை வெளியிடும்போது பிராகிருதம், சமஸ்கிருதம். கிரந்தத் தமிழ் என்னும் மொழிகளைப் பயன்படுத்தினர் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். இதன் காரணமாகப் பல்லவ மன்னர்களை, வரலாற்று ஆசிரியர்கள் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூவகையாகப் பிரித்து விவரித்தனர் என்பதையும் விளங்கிக் கொண்டீர்கள்.

இப்பல்லவ மன்னர்களுள் சிறந்து விளங்கியவர்கள் யார் என்பது பற்றியும் படித்துப் புரிந்து கொண்டீர்கள். மேலும் பல்லவ மன்னர்கள் தமது அரசாட்சியை விரிவுபடுத்த எண்ணி அண்டை நாட்டாருடன் போர் புரிந்தனர் என்றெல்லாம் படித்துணர்ந்தீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பல்லவர் பட்டயங்கள் எத்தனை மொழிகளில் வெளியிடப்பட்டன? அவை யாவை?
2.
பல்லவ மன்னர்கள் முதலில் வெளியிட்ட பட்டயம் எந்த மொழியில் இருந்தது?
3.
சாதவாகனருக்குப் பின்பு காஞ்சியில் ஆட்சியைப் பிடித்தவர்கள் யார்?
4.
முற்காலப் பல்லவர்களில் சிறந்து விளங்கியவன் யார்?
5.
சமுத்திரகுப்தன் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பல்லவ மன்னன் யார்?
6.
இடைக்காலப் பல்லவ மன்னருள் முதல்வன் யார்?
7.
மகாபல்லவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றனர்?
8.
விசித்திர சித்தன் என்று புகழப்பட்டவன் யார்?
9.
வாதாபி கொண்டான் என்று சிறப்பிக்கப்படுபவன் யார்?
10.
பல்லவர் யார்யாருடன் போர் புரிந்தனர்? இருவரைக் குறிப்பிடுக.