3.2 சமுதாய நிலை

பல்லவர் ஆட்சியில் பிராமணர்களுக்கும், சமஸ்கிருத மொழிக்கும் ஆதரவு கிடைத்தது. பெரும்பாலும் வட இந்தியாவிலிருந்த பிராமணர் பல்லவப் பேரரசில் குடியேறினர். இவர்களை வேதியர் என்றும் கூறுவர். மேலும் பல்லவ மன்னர்கள் வட இந்திய சமுதாயத்தைப் பின்பற்றி வருணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சமுதாயத்தை அமைக்க முயன்றனர். இதன் காரணமாகச் சாதிக் கோட்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவரச் சட்டங்கள் வகுக்கப்பட்டன. சாதி முறைகளுக்கு மன்னர்களின் ஆதரவு கிட்டிய காரணத்தால் அது (சாதி) இன்னும் வலுப்பெற்றது. இது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதாக இருந்ததால் புதியதொரு சமுதாயம் தலைதூக்கியது.

3.2.1 சாதிப்பிரிவு

ஒவ்வொரு சாதிக்கும் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பல்லவ மன்னர்கள் செயல்படுத்தினர்.

  • பிராமணர்கள்
  • சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிராமணர்கள் வகித்தனர். இவர்கள் மண்ணுலகத் தெய்வங்கள் எனக் கருதப்பட்டனர். அரச பதவி வகிப்பதிலும், அறப்பணி செய்வதிலும் அவர்களுக்குத் தனி உரிமை இருந்தது. அவர்கள் பெற்றிருந்த நிலங்கள் வரிவிலக்குப் பெற்றிருந்தன. அவர்களுக்குக் கல்விச் சலுகைகள் வழங்கப்பட்டன. பெரும்பாலான பிராமணர்கள் வேதங்களைக் கற்பதிலும், சமய வாழ்விலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கிடையில் பல உட்பிரிவுகளும் இருந்தன.

  • சத்திரியர்கள்
  • பழங்கால வட இந்திய சமுதாயத்தை ஒத்த சாதியின் அடிப்படையில் அமைந்த சமுதாயம் பல்லவர்கள் காலத்தில் தோன்றியது என ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணர்களுக்கு அடுத்த இடத்தைச் சத்திரியர்கள் வகித்தனர். நாட்டின் பாதுகாப்பு சத்திரியர்களிடம் இருந்த காரணத்தால் அவர்களுக்கு மதிப்பு இருந்தது. பெரும்பாலும் பிராமணர்கள் பற்றியும், சத்திரியர்கள் பற்றியும் மட்டுமே பட்டயங்கள் கூறுகின்றன. இருப்பினும் கிராமங்களில் நிலச்சுவான்தார்கள் மதிக்கப்பட்டனர்.

  • பிற சாதியினர்
  • பிராமணர்களையும், சத்திரியர்களையும் தவிர்த்துப் பிற சாதியினர் யாவரும் மிகவும் தாழ்வான இடத்தையே பெற்றிருந்தனர். தாழ்த்தப்பட்ட குடிமக்கள் ஒதுக்கப்பட்ட சேரிகளில் குடியேறினர். அவர்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். செங்கல்லால் கட்டிய ஓடு வேய்ந்த வீடுகளில் தங்குவதற்கு அவர்கள் வரி கொடுத்தல் வேண்டும். இத்துடன் சாதாரண மக்களை அடிமைப்படுத்தும் வழக்கமும் இருந்தது.

    3.2.2 தொழிலில் ஏற்றத்தாழ்வுகள்

    சாதிகள் அடிப்படையில் மட்டுமின்றிச் செய்யும் தொழிலின் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவின. சில தொழில்களைச் செய்தோர் சமுதாயத்தில் மதிப்புக் குறைந்தவர்களாகக் கருதப்பட்டனர். சான்றாகக் கள் இறக்கும் தொழிலைச் செய்யும் ஈழவர்கள், பிராமணர் குடியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல் கூடாது என்ற நிலை இருந்தது.

    3.2.3 வரியில் பாகுபாடு

    வரிவசூலிப்பதிலும் அரசாங்கமானது மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என இரண்டாகப் பிரித்தது. பிராமணர்களுக்கு வரிவிலக்கும், சலுகைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் பிற சாதியினர் வரிச்சுமையால் துன்பமுற்றனர் எனத் தெரிகிறது. சாதாரணக் குடிமக்கள் அரசிற்கு வரி செலுத்துவதுடன் அரசு அலுவலர்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் கொடுத்து உதவுதலும் வேண்டும். இதனால் சாதாரண மக்கள் இழிநிலையை அடைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.