3.4 பல்லவர் கலைத்தொண்டு தென் இந்தியக் கலை வளர்ச்சியில் பல்லவர் ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கின்றது. கலை வளர்ச்சி அடைவதற்கு அக்காலத்தில் சாதகமான பல சூழ்நிலைகள் காணப்பட்டன. பல்லவ மன்னர்கள் இந்து சமயத்தைப் (சைவ,வைணவ சமயங்களை) பின்பற்றினர். அதன் பணிக்காகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக அவர்கள் கோயில்களைக் கட்டத் தொடங்கினர். பல்லவர் ஆண்ட பகுதிகளில் ஏராளமான கற்கள் கிடைத்தன. இதன் காரணமாகக் கட்டடக்கலை ஓங்கி வளர ஆரம்பித்தது. இதனுடன் கட்டடக் கலை வல்லுநர்களும், சிற்பிகளும் பல்லவ நாட்டில் இருந்தனர். கலையில் ஆர்வம் காட்டியதால் பல்லவ நாடு கலைக்கூடமாக மாறியது. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், பரமேசுவரவர்மன் ஆகிய மன்னர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்பதை அவர்கள் அமைத்த கோயில்கள் எடுத்து இயம்புகின்றன. ஒவ்வொருவரும் எழுப்பிய கோயில்களில் சில தனித்தன்மைகளைக் காணமுடிகிறது. பொதுவாகப் பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன: 1. குடைவரைக் கோயில்கள் (Cave temples)
மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் மலைச் சரிவுகளில் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் அடியிலும், உச்சியிலும் சதுர வடிவமான பட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் தாமரை மலர்கள் செதுக்கப்பட்டுள்ளன. நரசிம்மவர்மன் அமைத்த மண்டபங்களில் உள்ள தூண்களின் கீழ்ப் பகுதியில் திறந்த வாயையுடைய சிங்கத்தின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் போதிகைகள் அதாவது தாங்குகின்ற கட்டைகள் உருண்டு காடிகள் வெட்டப்பட்டுள்ளன. பரமேசுவரவர்மன் காலத்தில் கட்டுமானக் கோயில்கள் தோன்றின. பல்லவ மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் பெரும்பாலும் பெருமாள், சிவன் கோயில்களாகும். குடைவரைக் கோயில் என்பது குகைக்கோயில் ஆகும். அதாவது மலையின் நடுப்பகுதியை வெட்டிக் குடைந்து, மேல் பகுதியைத் தூண்கள் தாங்கும் வண்ணம் படைத்துக் கோயில் அமைப்பது வழக்கம். இவ்வாறு அமைக்கப்படும் கோயில்களில் செங்கல், மரம், உலோகம், சாந்து போன்றவைகள் பயன்படுத்த மாட்டார்கள். இதற்கான சான்று மண்டகப்பட்டுக் கல்வெட்டில் உள்ளது. மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைத் தழுவினான். பின்பு சிவபக்தனாக மாறிச் சைவ சமயத்தில் ஆழ்ந்திருந்தான். அவன் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் குடைந்தவை சிவன் கோயில்கள் ஆகும்; மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடைந்தவை பெருமாள் கோயில்கள் ஆகும். மண்டகப்பட்டில் உள்ள மும்மூர்த்தி கோயிலும், சித்தன்னவாசலில் உள்ள சமணர் கோயிலும் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும். மகேந்திரவர்மனைப் போன்றே அவனது மைந்தனான நரசிம்மவர்மனும் கலை ஆர்வம் கொண்டவன். ஆதலால் நரசிம்மவர்மன் காலத்திலும் குகைக்கோயில்கள் பல தோன்றின. நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமாள் குகைக் கோயில், திருச்சிராப்பள்ளி மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள குகைக்கோயில், திருவெள்ளறை (இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது) மலையின் அடியில் உள்ள குகைக்கோயில், குடுமியாமலையில் உள்ள குகைக்கோயில், திருமயத்தில் உள்ள வைணவக் குகைக்கோயில் ஆகியவை நரசிம்மவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும். மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரத்தில் காணப்படும் மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மூன்று குகைக்கோயில்களும் நரசிம்மவர்மன் அமைத்தவை ஆகும். ஒரே கல்லில் கோயிலை உருவாக்கும் வழக்கம் பல்லவர் காலத்தில் இருந்தது. இக்கோயில்களும் ஒருவகையில் குடைந்து தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். மகாபலிபுரத்தில் உள்ள தருமராசன் தேர், பீமசேனன் தேர், திரௌபதி தேர், சகாதேவன் தேர் ஆகியவை பாண்டவர்களைக் குறிக்கும் வண்ணம் எழுப்பப்பட்ட ஒற்றைக்கல் கோயில்கள் ஆகும். இவற்றிற்குத் தேர்கள் என்ற பெயர் இருப்பினும் கோயில்களே ஆகும். இக்கோயில்களை அமைத்தவன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவான். இராசசிம்மன் காலத்தில் நிலவிய அமைதியும், பொருளாதார வளமும் கட்டுமானக் கோயில்களைக் கட்டக் காரணமாக அமைந்தன. துவக்கத்தில் கட்டுமானக் கோயில்கள் சிறியதாக இருந்தன. காலம் செல்லச்செல்ல இம்மாதிரியான கோயில்கள் பெரியதாகக் கட்டப்பட்டன. இராசசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், பனைமலைச் சிவன் கோயில் ஆகியவை கட்டுமானக் கோயில் வகையைச் சார்ந்ததாகும். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டுமானக் கோயில் கலை உச்ச நிலையை அடைந்தது. காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோயில், முத்தீச்சுவரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில் ஆகியவை நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டன. அவைபோல திருத்தணியில் வீரட்டானேஸ்வரர் கோயிலும், கூரத்தில் கேசவப்பெருமாள் கோயிலும், திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலும் இவன் காலத்தில் கட்டப்பட்டனவாகும். பல்லவ மன்னர்கள் தாம் எழுப்பிய கோயில்களில் பல சிற்பங்களை அமைத்து அழகுபடுத்தினர். அச்சிற்பங்கள் அக்காலச் சிற்பக்கலை வளர்ச்சியினைக் காட்டுகின்றன. சான்றாகத் திருச்சிராப்பள்ளி மலைக் கோயில் சுவரில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கங்காதரனைக் குறிக்கும் சிற்பம் கங்கை அணிந்த சிவபெருமானே நம் எதிரில் நிற்பது போலக் காட்சி தருகின்றதைக் காணலாம். மகாபலிபுரத்தை ஒரு சிற்பக் கலைக்கூடம் எனக் கூறலாம். அங்குள்ள வராக மண்டபம், மகிடாசுர மண்டபம் ஆகிய குகைக்கோயில்களில் உள்ள சுவர்களிலும், தூண்களிலும் காணப்படும் சிற்பங்கள் கண்ணைக் கவர்வனவாக உள்ளன. பஞ்சபாண்டவர் தேர்களில் அழகான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர் தேர்களை ஒட்டி அமைந்திருக்கும் யானை, நந்தி ஆகியவற்றின் சிற்பங்கள் வேலைப்பாடு மிக்கவை. மேலும் மகாபலிபுரத்தில் உள்ள கற்பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் புராணக் கதைகளை விளக்கி நிற்கின்றன. கோவர்த்தன மலையைக் கண்ணன் குடையாக ஏந்தி நிற்கும் காட்சி, ஒருவன் பால் கறக்கும்போது பசு தன் கன்றை நாவால் நக்கும் காட்சி, அருச்சுனன் தவம் செய்யும் காட்சி ஆகியவை பற்றிய சிற்பங்கள் பல்லவர் காலச் சிற்பிகளின் கற்பனைத் திறத்தையும், கைவண்ணத்தையும் காட்டுகின்றன.
பல்லவர் காலம் ஓவியக் கலையிலும் சிறப்புப் பெற்று விளங்கியது. பல்லவ மன்னர்கள் எழுப்பிய கோயில்களின் கூரைகளிலும், தூண்களிலும் ஓவியங்கள் வரைந்து அழகு செய்தனர். அவை இன்னும் உயிர் ஓவியங்களாக மிளிர்கின்றன. சித்தன்னவாசல் குகைக்கோயில் ஓவியம் பல்லவர் கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்குப் பெரிதும் போற்றப்படுவது அரசன், அரசி ஆகியோரின் ஓவியங்களும், நடனமாதர் ஓவியங்களும், தாமரைக் குளக் காட்சியும் ஆகும். பல்லவர் காலத்து நடனக் கலையின் நுட்பத்தினையும், பெண்களின் அணிகலன்களையும் பற்றிய தகவல்களை இவ்வோவியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இசையும் நடனமும் ஒன்றோடொன்று தொடர்புடைய கலைகளாகும். இவ்விரு கலைகளையும் பல்லவ மன்னர்கள் போற்றி வளர்த்தனர். மகேந்திரவர்மன் இசை ஆர்வம் படைத்திருந்தான். அவன் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில் இசை, நடனம் ஆகியவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இம்மன்னன் வீணை வாசிப்பதில் வல்லவனாக விளங்கினான் என்பது தெரிகிறது. இராசசிம்மன் என்னும் பல்லவ மன்னன் இசைப்புலமை பெற்றிருந்தான். இவனுக்கு வீணா நாரதன் என்ற சிறப்பு பெயர் உண்டு. இதன்மூலம் இவன் இசையில் வல்லமை படைத்தவன் என்பது தெரிகிறது. அதோடு இம்மன்னன் கைலாசநாதர் கோயிலில் யாழ் வாசிப்பது போன்ற சிற்பங்களைச் செதுக்கச் செய்தான். இசையும் நடனமும் சமயத்துடன் தொடர்புடையவை ஆகும். கோயில்களில் இசைவாணர் பலர் தங்கி இருந்தனர். இவர்களேயன்றி, அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் முதலியோரும் ஆலயங்களில் தங்கியிருந்து இசை, நடனம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். கைலாசநாதர் கோயில், குடுமியாமலைக் கோயில், மாமண்டூர்க் கோயில் ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர் காலத்து இசை வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றன. பல்லவ மன்னர்கள் இசையுடன் நடனக் கலைக்கும் ஆதரவு நல்கினர். குறிப்பாக மகேந்திரவர்மன், இராசசிம்மன் ஆகியோர் காலத்தில் நடனக்கலை மேல்நிலை அடைந்திருந்தது. சித்தன்னவாசல் ஓவியம் நடனக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வைகுண்டப் பெருமாள் கோயில் ஓவியம், அரசர் அவையில் கூத்து நடைபெற்றது என்பதை உணர்த்துகிறது. கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானின் நடனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நடன மாதர் நிரந்தரமாகத் தங்கி இருந்து அங்குக் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கும், மக்களுக்கும் கண்ணுக்கினிய நடனங்களை ஆடிக் காட்டினர். இவைகளின் மூலம் பல்லவப் பேரரசில் இசையும் நடனமும் புகழ் பெற்று விளங்கின என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. |