4.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் முற்காலப் பாண்டியர் யார் என்பது பற்றியும், அவர்கள் எப்போது தமிழகத்தில் தங்களது ஆட்சியை நிலைநாட்டினர் என்பது பற்றியும் படித்துணர்ந்தீர்கள்.

முற்காலப் பாண்டியர் தங்களது ஆட்சியைத் தமிழகத்தில் விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணிப் பல்லவர்களுடன் அவ்வப்போது எதிர்த்து நின்றனர் என்பதைப் படித்து உணர்ந்திருப்பீர்கள்.

மாறவர்மன் அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் சோழருடன் போர் புரிந்து அதில் வெற்றியடைந்து அதன்பின் சோழ இளவரசியை மணம் புரிந்து கொண்டு இருநாடுகளுக்கு இடையே நட்புறவை நிலைநாட்டியது பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

மாறவர்மன் அரிகேசரி எல்லாப் பாண்டிய மன்னர்களையும் போல் சைவ சமயத்தைச் சார்ந்திராமல் சமண சமயத்தைச் சார்ந்திருந்ததும், பின் அவனது மனைவியால் சைவத்திற்கு மாற்றப்பட்டதும் பற்றிப் படித்துணர்ந்தீர்கள்.

பாண்டிய மன்னர்கள் அறப்பணிகளைச் செய்தது. கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக அளித்தது போன்ற செய்திகளைப் படித்திருப்பீர்கள்.

முற்காலப் பாண்டிய மன்னர்களுக்கான வரலாற்றுச் சான்றுகளை வேள்விக்குடிச் செப்பேடு அதிகமாகத் தந்திருப்பது பற்றிப் படித்துணர்ந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
முற்காலப் பாண்டியர் யார் யாருடன் போர் புரிந்தனர்? இரு சான்றுகள் தருக.
2.
மாறவர்மன் அரிகேசரி பல்லவர்களை எங்கு வென்றான்?
3.
காவிரியாற்றுக்கு வடக்கே இரண்டாம் வரகுண பாண்டியன் கைப்பற்றிய நகர் எது?
4.
விழிஞம் என்னும் இடத்தில் சேரமன்னனை வென்ற பாண்டிய மன்னன் யார்?
5.
திருஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைத்தவர் யார்?
6.
பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஆழ்வார் யார்?
7.
வைணவ நெறியைப் பின்பற்றிய பாண்டியன் யார்?
8.
வேள்விக்குடிச் செப்பேட்டை நெடுஞ்சடையன் பராந்தகன் எதற்காக வெளியிட்டான்?