5.0 பாட முன்னுரை

பிற்காலச் சோழர்கள் தமிழகத்தில் நன்கு ஆட்சி புரிந்தனர். இவர்கள் தங்களது நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதற்காக அருகில் உள்ள பல்லவர், பாண்டியர், சேரர் முதலானவர்களோடு போர் புரிந்து வெற்றி கொண்டனர். மேலும் இவர்கள் மேலைச் சாளுக்கியர், இராஷ்டிரகூடர், கங்கர் போன்றவர்களுடனும் போர் புரிந்தனர். கடல் கடந்து சென்று இலங்கை, மாலத்தீவுகள், கடாரம் (சுமத்ரா) போன்ற நாடுகளுடனும் போர் செய்து வெற்றி கண்டனர்.

பிற்காலச் சோழ மன்னர்கள் விசயாலயன் பரம்பரை, முதலாம் குலோத்துங்கன் பரம்பரை என்னும் இருவேறு பரம்பரைகளின் வழிவந்து ஆட்சி செய்தார்கள்.

பிற்காலச் சோழர்கள் அயல்நாட்டு வாணிபத்தைப் பெருக்கினர். இதற்காகச் சீனாவுக்குத் தூதுக் குழுவை அனுப்பிவைத்தனர்.

பிற்காலச் சோழ மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தனர். இருப்பினும் பிற சமயங்களைச் சார்ந்தவர்களைக் கடிந்து கொள்ளவில்லை. இரண்டாம் குலோத்துங்கன் என்ற ஒருவன் மட்டுமே வைணவ சமயத்தாரிடம் பகைமை பாராட்டினான்.

இவற்றையெல்லாம் பற்றி இப்பாடத்தில் விரிவாகவும், விளக்கமாகவும் காண இருக்கிறோம்.