6.0 பாடமுன்னுரை

தலைசிறந்த ஓர் ஆட்சிமுறைக்கு எடுத்துக்காட்டாகப் பிற்காலச் சோழர் ஆட்சி அமைந்திருந்தது. ஆட்சி சீரிய முறையில் சிறப்பாக அமைவதற்காகப் பிற்காலச் சோழ மன்னர்கள் நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்தனர். தந்தைக்குப் பின் மூத்தமகன் என்ற அரசமுறையைப் பின்பற்றினர். நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்கு அதிகாரிகள் பலரை நியமித்தனர். நடுநிலையாக மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பொருட்டுச் சிற்றூர்களில் நீதிமன்றங்களை நிறுவினர். இவர்களது ஆட்சிக் காலத்தில் ஊராட்சி முறை வலிமை பொருந்தியதாக விளங்கியது. ஊராட்சி நிருவாகம் செய்ய உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற்காலச் சோழப் பேரரசர்கள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தவும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் வலிமை வாய்ந்த தரைப்படை மற்றும் கப்பற்படையை வைத்திருந்தனர். நாட்டினைத் திறம்பட நிருவகிப்பதற்காகப் பல வகையான வரிகளை விதித்து வசூலித்தனர். இவற்றை எல்லாம் விரிவாக இப்பாடத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் சோழப் பேரரசின் சமுதாய நிலை, பொருளாதார நிலை, இலக்கிய வளர்ச்சி, கலை வளர்ச்சி, சமய நிலை ஆகியவை பற்றிய செய்திகளையும், அப்பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளலாம்.