6.4 இலக்கிய வளர்ச்சி

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலமான நானூறு ஆண்டுகள் தமிழக வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றிக் கூறப்படுகிறது. போர்கள், நாடுகளை வென்று கைப்பற்றல், கோயில் பணி என்றிருந்த காலத்தில் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் ஏற்றம் பெற்றன. பிற்காலச் சோழ மன்னர்கள் அளித்த பேராதரவின் காரணமாகத் தமிழில் இறவாப் புகழ் பெற்ற எண்ணிலாத இலக்கியப் படைப்புகள் தோன்றின.

பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள் என வகைப்படுத்திக் காணலாம்.

6.4.1 பெருங்காப்பியங்களும், சிறுகாப்பியங்களும்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றுள் சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய மூன்று பெருங்காப்பியங்களும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியவை ஆகும். சீவக சிந்தாமணியும், வளையாபதியும் சமண சமயம் சார்ந்த காப்பியங்கள். சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார். இவர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. இந்நூலிற்கு மணநூல் என்ற வேறொரு பெயரும் உண்டு. இந்நூலில் மொத்தம் 3145 செய்யுள்கள் உள்ளன. இவையாவும் விருத்தப்பா என்னும் பாவகையில் அமைந்தன. இவர் பயன்படுத்திய இப்பாவகையைக் கொண்டே கம்பர், சேக்கிழார் போன்றோர் தமது காப்பியங்களைப் படைத்தனர்.

குண்டலகேசி பௌத்த சமயம் சார்ந்த பெருங்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் நாதகுத்தனார்.

பெரிய புராணம் சைவசமயம் சார்ந்த பெருங்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் சேக்கிழார்.

கம்பராமாணம் வைணவ சமயம் சார்ந்த பெருங்காப்பியம். இதனை இயற்றியவர் கம்பர்.

சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியவை ஆகும். மேலும் இவை எல்லாமே சமணப் புலவர்களால் எழுதப்பட்டவை ஆகும். இவற்றுள் சிறந்தது சூளாமணி. இதனை இயற்றியவர் தோலாமொழித் தேவர்.

நளவெண்பா, திருவிளையாடற் புராணம் ஆகிய காப்பிய நூல்களும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றின.

6.4.2 சிற்றிலக்கியங்கள்

உலா, பிள்ளைத்தமிழ், பரணி, கோவை போன்ற சிற்றிலக்கிய வகைகளில் பல நூல்கள் தோன்றின. ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி, பொய்யாமொழிப் புலவர் பாடிய தஞ்சைவாணன் கோவை ஆகியவை பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் ஆகும்.

6.4.3 இலக்கண நூல்கள்

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன தமிழில் ஐந்திலக்கணம் எனப்படும். பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய நன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் எழுத்தும் சொல்லும் பற்றியவை. இவற்றுள் நன்னூல் புகழ் பெற்றது. இதனை எழுதியவர் பவணந்தி முனிவர்.

நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்ட நம்பியகப் பொருள் அகப்பொருள் சார்ந்த இலக்கண நூல் ஆகும். இந்நூலில் இடம் பெற்றுள்ள அகப்பொருள் துறைகளுக்குத் தஞ்சைவாணன் கோவைப் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டன.

யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் ஆகிய இரு நூல்கள் யாப்பிலக்கணம் பற்றியவை ஆகும். இவற்றை இயற்றியவர் அமிர்தசாகரர் ஆவார்.

புத்தமித்திரர் என்பவர் எழுதிய வீரசோழியம் என்னும் இலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணங்களையும் பற்றியதாகும்.

தமிழ் மொழியில் சொற்களைப் பொருள் அடிப்படையில் தொகுத்தளிக்கும் நூல்கள் நிகண்டு எனப்படும். திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகியன நிகண்டு நூல்களில் குறிப்பிடத்தக்கன.

6.4.4 உரை நூல்கள்

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற பழைய இலக்கண, இலக்கியங்களுக்கு முதன்முதலில் உரை நூல்கள் வெளிவந்தது பிற்காலச் சோழர் காலத்திலேயே ஆகும்.

இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், நச்சினார்க்கினியர் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர்.

சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு முழுமைக்கும், எட்டுத்தொகையில் ஒன்றான கலித்தொகைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதினார். மேலும் இவர் சீவக சிந்தாமணி முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் என்பவர் அரியதோர் உரை வரைந்துள்ளார். சிலப்பதிகாரக் கருவூலத்தைத் திறக்கும் திறவுகோல் இவரது உரையாகும்.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், மணக்குடவர் ஆகியோர் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.

மேலே கூறப்பட்ட நூல்களேயன்றிச் சோழர் காலத்தில் கற்களில் பொறிக்கப்பட்ட மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. இராசராசேசுவர நாடகம், இராசராச விசயம் முதலிய நாடக நூல்கள் இயற்றப்பட்டன. ஆனால் அவை நமக்குக் கிடைக்காமல் போயின.