6.6 சமய நிலை இந்து சமயத்திலுள்ள இரு பெரும் பிரிவுகளான வைணவம், சைவம் ஆகியவற்றைப் பல்லவர் காலத்தில் முறையே ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்து வந்தனர். அதுபோலவே சோழர்கள் காலத்திலும் இவ்விரு சமயங்களும் தழைத்தோங்கின. அத்துடன் இச்சமயங்களைச் சார்ந்த வேறுபட்ட தத்துவங்களும் தோன்றின. பௌத்தம், சமணம் போன்ற மதங்களும் இவைகளுக்கிடையே பரவியிருந்தன. சிவனே தலையாய கடவுள் என நம்பினோர் சைவர். சைவ சமயம் சோழர் காலத்தில் நன்கு வளர்ச்சியுற்றது. வட இந்திய சைவர்களும், தமிழகத்துச் சைவர்களும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இவர்கள் மது அருந்துவதையும், புலால் உண்ணுவதையும் கைவிட்டனர். சோழர் காலத்தில் சைவ சமயத் தத்துவங்கள் தொகுக்கப்பட்டன. நம்பியாண்டார் நம்பி பன்னிரு திருமுறைகளில் முதல் பதினொரு திருமுறைகளைத் தொகுத்தார். பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. சைவ சித்தாந்தம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தச் சைவ சித்தாந்தம் முறைப்படுத்தி வழங்கப்பட்டது. மெய்கண்டார், அருள் நந்தி, மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் முதலியோர் சைவசித்தாந்த நூல்களை எழுதினர். திருமாலை முழுமுதற் கடவுளாக வணங்கிய வைணவப் பக்தர்கள் இக்காலத்தில் ஆச்சாரியார்கள் எனப்பட்டனர். அவர்களது சமயப் போதனையால் வைணவம் வளர்ச்சியுற்றது. நாதமுனி என்ற வைணவர் சோழர் காலததில் வாழ்ந்தவர் ஆவார். இவரே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் ஆவார். இவரைத் தொடர்ந்து யமுனாச்சாரியார் என்பவர் வைணவ மதத்தைப் பரப்பினார். இராமானுசர் சோழர் காலத்தில் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பினார். ஆனால் இவரைச் சோழ மன்னன் துன்புறுத்தினான் எனத் தெரிகிறது. சோழர் காலத்தில் சைவ-வைணவ சமயங்களின் எழுச்சியின் காரணமாகப் பௌத்த சமயம் அழிந்து கொண்டிருந்தது. ஆயினும் நாகப்பட்டினம் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. அங்குள்ள பௌத்த விகாரத்திற்குக் கிராமம் ஒன்று விடப்பட்டதாக அறிகிறோம். காஞ்சியிலும் பௌத்தர்கள் இருந்தனர். சமண சமயத்தைப் போன்று பௌத்தமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. சோழர் காலத்தில் சமணம் தமிழகம் எங்கும் பரவியிருந்தது. சோழ மன்னர்களும் அதற்கு ஆதரவு அளித்தனர். முதலாம் இராசராசனின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் திருமழபாடி (திருச்சி மாவட்டம்) என்னும் இடத்தில் சமணப் பள்ளி ஒன்றினைக் கட்டினார். வேடல் (வட ஆற்காடு) என்னும் இடத்தில் சமண மடம் ஒன்று இருந்தது. சேந்தலை, திருமலை (வட ஆற்காடு), காஞ்சி ஆகிய இடங்களில் சமணப் பள்ளிகள் இருந்தன. சமணப் பள்ளிகள் இருந்த தலங்கள் வரிவிலக்குப் பெற்றன. சமணத் துறவிகள் சமயத் தொண்டு ஆற்றியவாறே தமிழ்த் தொண்டும் ஆற்றினர். |