6.7 சோழர்களின் வீழ்ச்சி

விசயாலயன் என்ற மன்னன் கி.பி. 850இல் நிறுவிய சோழப் பேரரசு முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோர் காலங்களில் பரப்பிலும், பண்பாட்டிலும் மேம்பட்டு விளங்கியது. சுமார் நான்கு நூற்றாண்டு காலம் சோழப் பேரரசு முக்கிய இடம் வகித்தது. அதனுடன் இப்பேரரசு பண்டைத் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்து அதனை உயர்வடையச் செய்தது. நாளடைவில் இப்புகழ் மிக்க பேரரசு சிறிது சிறிதாக நலிந்து தென்னிந்தியாவிலிருந்து மறைந்து விட்டது. இதற்கான காரணங்களை இங்குக் காண்போம்.

6.7.1 பலம் குன்றிய அரசர்கள்

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சோழப் பேரரசு ஈழத்தையும், வேங்கி நாட்டையும் இழந்தது. மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோர் பாண்டிய மன்னரால் தோற்கடிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிகள் யாவும் இங்கே குறிப்பிட்ட சோழ வேந்தர்களின் பலமின்மையைக் காட்டுகின்றன.

6.7.2 அண்டை நாடுகளின் எழுச்சி

பிற்காலச் சோழர்கள் இலங்கையில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு முயன்று கொண்டிருந்தபோது பாண்டியர்கள் எழுச்சியுற்றனர். வடக்கில் மேற்குச் சாளுக்கிய அரசு மறைந்த இடத்தில் யாதவர்களும் காகதீயர்களும் ஆதிக்கம் பெற்றனர். இவர்கள் வடக்கிலிருந்து சோழப் பேரரசை நெருக்க, பாண்டியர்கள் தெற்கிலிருந்து நெருக்கத் தொடங்கினர். இந்நிலையில் சோழப் பேரரசு நிலைப்பது அரிதாயிற்று.

6.7.3 குறுநில மன்னர்களின் எழுச்சி

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு நிலமானிய முறையின் அடிப்படையில் இயங்கி வந்தது எனலாம். குறுநில மன்னர்கள் சோழப் பேரரசர்கள் ஆணைக்கு அடங்கவில்லை. விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்திலிருந்து குறுநில மன்னர்கள் சுயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாகக் காடவராயர்கள், சம்புவராயர்கள், யாதவராயர்கள், செட்டிராயர்கள் ஆகியோரைக் கூறலாம். இவர்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் ஆட்சி செலுத்தியவர்கள் ஆவர். பிற்காலச் சோழர்கள் மையப்படுத்திய நிருவாக முறையைத் தளர்த்தியதால் இக்குறுநில மன்னர்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினர். சிற்றரசர்களின் சுயேச்சை மனப்பான்மை சோழப் பேரரசின் இறைமையினைப் பாதித்தது.

6.7.4 உள்நாட்டுக் கலகங்கள்

சமுதாயத்தில் உயர்ந்த சாதியினர் தாழ்த்தப்பட்டோரை அடக்கி ஆண்டமையால் பாதிக்கப்பட்டோர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதோடு மட்டும் அல்லாமல் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வலங்கைச் சாதியினர் இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற பிராமணர் ஊர் ஒன்றை நெருப்புக்கு இரையாக்கினர். கோயில்களை இடித்தனர். இதுபோன்ற உள்நாட்டுக் கலகங்கள் சோழப் பேரரசின் ஆதிக்கத்தை நலிவடையச் செய்தன.

6.7.5 பொருளாதாரச் சீர் குலைவு

சோழநாட்டில் ஏற்பட்ட பஞ்சங்களும், வெள்ளப் பெருக்கும் அடிக்கடி மக்களை வாட்டின. பஞ்சத்தின் கொடுமையால் மக்கள் தங்களைச் செல்வந்தர்களுக்கு அடிமைகளாக விற்றுக் கொண்டனர். அதே சமயத்தில் சோழப் பேரரசர்கள் புதிய கோயில்களைக் கட்டுவதிலும், பழைய கோயில்களைப் புதுப்பிப்பதிலும், புதிய தலைநகரங்களைக் கட்டுவதிலும், போர்களிலும் ஈடுபட்டிருந்தனர். சோழப் பேரரசர்களின் இச்செயல்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கச் செய்தன.

மேலும் நாட்டு மக்கள் ஏற்கெனவே வழங்க வேண்டிய வரியை வழங்க முடியாத சூழ்நிலையில் அதிகப்படியான வரிகள் மேலும் மேலும் விதிக்கப்பட்டன. இதுபோன்ற பொருளாதாரச் சீர்குலைவால் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பின்னர் அது மறைந்து விட்டது.