1.1 பிற்காலப் பாண்டியர் – ஓர் விளக்கம் சங்க காலத்திற்குப் பின்பு பாண்டிய நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களை வரலாற்றாசிரியர்கள் முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் என இருவகையாகப் பிரித்துக் காண்கின்றனர். கி.பி. 575இல் கடுங்கோன் என்ற பாண்டியன் நிறுவிய அரசை, அவனை முதலாகக் கொண்டு மொத்தம் பதினான்கு மன்னர்கள் கி.பி. 966 வரை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். இவர்களை முற்காலப் பாண்டியர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முற்காலப் பாண்டியரைப் பற்றி ஏற்கெனவே ஒரு பாடத்தில் விரிவாகப் பார்த்துள்ளோம். முற்காலப் பாண்டியர் ஆட்சி வீரபாண்டியன் என்பவன் ஆட்சியோடு முடிவுற்றது. கி.பி 966இல் சேவூர் என்னும் இடத்தில் நடந்த போரில் வீரபாண்டியன் சுந்தரசோழனின் மூத்த மகனாகிய ஆதித்த கரிகாலன் என்பவனால் கொல்லப்பட்டான். வீரபாண்டியனுக்குப் பின்பு கி.பி. 966 முதல் 1190 வரை இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டில் சோழரின் ஆதிக்கம் நிலைபெற்றிருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாகவே விளங்கினர். எனவே அவர்களது வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உரிய கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் கிடைக்கவில்லை. கி.பி. 1190இல் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து வந்த பாண்டிய மன்னர்கள் சோழர்களை வென்று, அவர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டதோடு, அவர்களுடைய சோழ நாட்டையும் கைப்பற்றி ஆண்டனர். இப்பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அறிவதற்கு உரிய கல்வெட்டுகள் பாண்டிய நாடு முழுவதும் நிறையக் கிடைத்துள்ளன. இவர்களைத்தான் வரலாற்றாசிரியர்கள் பிற்காலப் பாண்டியர் எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் பாண்டிய நாட்டைக் கி.பி. 1190 முதல் 1310 வரை 120 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர். |