1.3 உள்நாட்டுப் போரும் மாலிக்காபூர் படையெடுப்பும்

முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியனுக்குச் சடையவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். குலசேகரபாண்டியனின் பட்டத்தரசிக்குப் பிறந்தவன் சுந்தரபாண்டியன் ஆவான்; காமக்கிழத்திக்குப் பிறந்தவன் வீரபாண்டியன் ஆவான்.

குலசேகரபாண்டியன் தனக்குப் பின் முடிசூடுவதற்கு உரிமை படைத்த சுந்தரபாண்டியனைப் புறக்கணித்துவிட்டு, வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். இதனால் சினம் கொண்ட சுந்தரபாண்டியன் கி.பி.1310இல் தன் தந்தையைக் கொன்று தானே மதுரை அரியணையில் ஏறிக்கொண்டான். இளவரசனாய் இருந்துவந்த வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் மீது போர் தொடுத்தான். அப்போது நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் தோல்வியுற்று மதுரையைக் கைவிட்டு வடக்கு நோக்கி ஓடினான்.

இச்சமயத்தில் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி என்பவனுடைய படைத்தலைவன் மாலிக்காபூர் என்பவன் ஒரு பெரும்படையுடன் தமிழகத்தில் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அணுகித் தனக்குப் படைத்துணை அளிக்கும்படி வேண்டினான். சுந்தரபாண்டியனோடு வந்த மாலிகாபூர் மதுரையைத் தாக்கினான். மாலிக்காபூரின் பெரும்படையை எதிர்த்து வெல்லமுடியாது என எண்ணிய வீரபாண்டியன் மதுரையை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கும் ஓடி ஓடி ஒளிந்து கொண்டு, கொரில்லா போர் முறையைப் பின்பற்றி, மாலிக்காபூருக்குத் தொல்லை கொடுத்தான்.

வீரபாண்டியன் தன் முன்னோர் போசளரிடமிருந்து கைப்பற்றி ஆண்ட கண்ணனூர்க் கொப்பம் சென்றான். அங்கிருந்த பாண்டியப் படையில் 20,000 முஸ்லீம்கள் இருந்தனர். இவர்கள் வீரபாண்டியனைத் தேடி வந்த மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். எனவே வீரபாண்டியன் தில்லை (சிதம்பரம்) சென்று, அங்கே ஒளிந்து கொண்டான். மாலிக்காபூர் தில்லை வந்தடைந்தான். அங்கே உள்ள பொன்னம்பலத்தை அடியுடன் பெயர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். எனினும் வீரபாண்டியன் அவனிடம் அகப்பட்டான் இல்லை. பின்பு மாலிக்காபூர் மதுரை நோக்கித் திரும்பும் வழியில் ஆங்காங்குத் தன் கண்ணில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கினான். திருவரங்கத்தில் உள்ள திருவரங்கநாதர் கோயிலை இடித்துப் பாழாக்கினான். அடுத்து மதுரையின்மேல் பெருந்தாக்குதல் தொடுத்தான்.

மாலிக்காபூர் தாக்குதலை முன்னரே அறிந்த சுந்தரபாண்டியன் அரண்மனைப் பொக்கிசத்தை எடுத்துக்கொண்டு மதுரையை விட்டு ஓடிவிட்டான். இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த மாலிக்காபூர் வெகுண்டு சொக்கநாதர் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்தினான். இதை அறிந்த சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியன் என்பவன் பாண்டிய வீரர்களைத் திரட்டிக்கொண்டு மாலிக்காபூரைத் தாக்கினான். அத்தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் மாலிக்காபூர் புறமுதுகிட்டு ஓடினான். மதுரையை விட்டு இராமேசுவரம் சென்று அங்குள்ள கோயிலைச் சூறையாடியும், மக்களைப் படுகொலை செய்தும், அவர்கள் உடைமைகளைக் கவர்ந்தும் பெருஞ்சேதம் விளைத்தான். அங்கு ஒரு மசூதி கட்டினான். பின்பு அவன் தென்னிந்தியப் படையெடுப்பின்போது கைப்பற்றிய 512 யானைகள், 5000 குதிரைகள் ஆகியவற்றுடனும், 500 மணங்கு எடையுள்ள தங்க அணிகலன்கள், விலை மதிப்பற்ற வைரங்கள், முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றுடனும் டெல்லி திரும்பினான்.

மாலிக்காபூர் படையெடுப்பினால் பாண்டிய நாடு தீப்பற்றி எரிந்தது; அங்குள்ள கோயில்கள் இடிந்து வீழ்ந்து பாழாயின; மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் பறிபோயின. ஆயினும் பாண்டியர் தளர்ச்சி அடையவில்லை. எனவே பாண்டியரை அடக்கி அடிமை கொள்ளாமலேயே மாலிக்காபூர் டெல்லி நோக்கிப் பயணமாக நேர்ந்தது. அவனுக்குப் பிறகு பாண்டிய நாட்டில் முஸ்லீம்களின் தலையீடும் சிறிது காலம் இல்லாமல் இருந்தது. மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆண்டுவரத் தொடங்கினார். ஆனால் வெவ்வேறிடங்களில் இருந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார்கள். சுந்தரபாண்டியன் கி.பி.1320 வரையிலும், வீரபாண்டியன் கி.பி 1324 வரையிலும் அரசாண்டனர் என்பதை அவர்களுடைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
முற்காலப் பாண்டியர் ஆட்சி யாருடைய ஆட்சியோடு முடிவுற்றது?
2.
முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் மீது படையெடுத்துச் சென்ற சோழ மன்னன் யார்?
3.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் தோல்வியுற்ற சோழ மன்னன் யார்?
4.
மூன்றாம் இராசராசனைச் சேந்தமங்கலம் என்ற ஊரில் சிறை வைத்தவன் யார்?
5.
மூன்றாம் இராசராசனைச் சிறைமீட்ட போசள மன்னன் யார்?
6.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு உதவி செய்த போசள மன்னன் யார்?
7.
சோழ நாட்டில் போசளர் கைப்பற்றி ஆண்ட பகுதியின் தலைநகர் யாது?
8.
பிற்காலப் பாண்டிய மன்னருள் புகழில் மிகவும் ஓங்கியவன் யார்?
9.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெற்றி கொண்ட காகதீய நாட்டு அரசன் யார்?
10.
கொல்லம் கொண்ட பாண்டியன் என்று அழைக்கப்படுபவன் யார்?
11.
முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் தன் புதல்வர் இருவரில் யாரிடம் ஆட்சியை ஒப்படைத்தான்?
12.
தந்தையைக் கொன்று பாண்டியநாட்டு அரியணை ஏறியவன் யார்?
13.
அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் யார்?