2.1 தமிழகத்தின் நிருவாகம்

13ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியரின் ஆட்சியே மேலோங்கி இருந்தது. இப்பாண்டிய மன்னர்கள் பல்லவர் ஆட்சியைக் காட்டிலும் திருந்திய நிருவாக முறையினைப் பின்பற்றினர். இப்பாண்டியப் பேரரசு அயல்நாடுகளுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தது. மேலும் உள்நாட்டு வாணிபமும் பெருகி நாடு வளம் பெற்றது. தரிசு நிலங்கள் திருத்தப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டன. இதனால் நாட்டின் உற்பத்தி பெருகியது. இந்நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் பொருட்டு ஏரிகள் பல வெட்டப்பட்டன. நாடு பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் கண்டது. அரசின் வருவாய் அதிகரித்தது. பாண்டியப் பேரரசர்கள் சமயப் பற்றும், கலை ஆர்வமும் கொண்டமையால் கோயில்களைக் கட்டிப் பாண்டிய நாட்டைக் கலைக்கூடமாக்கினர்.

சுமார் கி.பி. 1310 வரை பாண்டியர் ஆட்சி புரிந்தனர். பொதுமக்கள் நலனைக் காக்கும் நோக்குடன் நிருவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நல்லாட்சி நாட்டில் நிலவ வேண்டுமென அரசர்கள் எண்ணினர். கிராம அளவில் உள்ளூர் மக்கள் நிருவாகத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களது அரசாங்கம் மக்கள் நலம் நாடும் அரசாங்கமாக விளங்கியது.

பாண்டிய மன்னர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.

2.1.1 அலுவலர்கள்

அரசருக்கு நிருவாகம் பற்றிய ஆலோசனை வழங்குவதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அமைச்சர் அல்லது மந்திரி என அழைக்கப்பட்டனர். அமைச்சர்களின் தலைவர் ஏக மந்திரி என வழங்கப்பட்டார்.

படையின் தலைவர் சேனாதிபதி என அழைக்கப்பட்டார். கலிங்கராயன், மல்லவராயன், பல்லவராயன் முதலிய பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நிருவாக நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கு எழுத்தர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.

எழுத்து மண்டபத்தில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வந்தது. வேறுபட்ட அலுவலகங்களும் அங்கு இயங்கி வந்தன. சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்குக் காவிதி, ஏனாதி ஆகிய பட்டங்கள் அளிக்கப்பட்டன. அறநெறிகள் பற்றிய ஆலோசனை வழங்குவதற்குத் தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.

பிற்காலப் பாண்டியர் காலத்தில் பாண்டிய நாடு தற்போது உள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைக் கொண்டிருந்தது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பாண்டியப் பேரரசு தமிழகம் முழுவதும் மட்டுமின்றித் தமிழகத்துக்கு வடக்கே உள்ள நெல்லூரையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

பாண்டியப் பேரரசு முழுவதையும் நடுவண் அரசு நேரடியாக ஆட்சி செய்ய முடியாத காரணத்தால் அது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல கூற்றங்களாகவும், கூற்றம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்டலங்கள் அல்லது மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் இவர்களது செயல்கள் பற்றி அறிவதற்குச் சரியான சான்றுகள் இல்லை.

2.1.2 உள்ளாட்சி நிருவாகம்

மாறன் சடையன் என்பவன் வெளியிட்ட கல்வெட்டு ஒன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மண்ணூர் என்னுமிடத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு உள்ளாட்சியை நடத்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த மகாசபை பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. கிராமத்தை நிருவாகம் செய்வதற்கெனக் கிராமசபை அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமசபை உறுப்பினர்கள் வாரியங்களாகப் (குழு) பிரிந்து செயல்பட்டனர். வாரிய உறுப்பினர்களது தகுதிகள் பற்றிய விளக்கத்தை இக்கல்வெட்டால் அறியலாம். வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்துடையவர்களும், வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களும், நன்னடத்தை உடையவர்களும் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபை, மக்கள் சபை என அழைக்கப்பட்டது. சபைக் கூட்டம் பற்றிய செய்தியினை முரசு கொட்டி அறிவித்தனர். கோயில் மண்டபத்தில் அல்லது மரத்தின் அடியில் அல்லது ஒரு பொது இடத்தில் மக்கள் சபை நடைபெற்றது.

2.1.3 படை

தமிழ் அரசர்கள் தொன்றுதொட்டுப் பெற்றிருந்த நால்வகைப் படையைப் பாண்டியரும் பெற்றிருந்தனர். அவை காலாட்படை, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை என்பனவாகும். படைத்தலைவர் சேனாதிபதி என்று அழைக்கப்பட்டார். அவர் படைக்குத் தலைமை தாங்கினார். படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குப் பயிற்சிப் பள்ளி இயங்கி வந்ததாகக் கருதப்படுகின்றது. போரைத் தொழிலாகக் கொண்டிருந்த கள்ளரும், மறவரும் படையில் மிகுதியாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். போரில் விழுப்புண்பட்டு இறந்தோருக்கு நடுகல் நடப்பட்டது.

2.1.4 வரி

படையைப் பராமரிப்பதற்கும், பொதுப்பணிகள் மேற்கொள்ளவும், நிருவாகத்தை நடத்துவதற்கும் வருவாய் இன்றியமையாததாகும். இதனை உணர்ந்த பாண்டியப் பேரரசர்கள் வருவாயைப் பெருக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அரசின் வருவாயைக் கண்காணிப்பதற்குப் புரவுவரி திணைக்களம் என்னும் ஒரு துறை அமைக்கப்பட்டிருந்தது. வரியைக் குறிப்பிடுவதற்கு இறை, பாட்டம், கடமை முதலிய பல்வேறு சொற்களைப் பயன்படுத்தினர். அரசின் வருவாயில் பெரும்பகுதி நிலவரி மூலமாகக் கிடைக்கப்பெற்றது. அரசு ஈட்டிய வருவாயில் ஒரு பெரும்பகுதி முத்துக் குளித்தல் வாயிலாகக் கிடைக்கப்பெற்றது. துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் வசூலிக்கப்பட்டன. வாணிகர்களும், பல்வேறு தொழில்கள் செய்தோரும் தொழில்வரி கட்டினர்.

நிலங்களை அளப்பதற்குச் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் என்னும் அளவைகளைப் பயன்படுத்தியதாக அறிகிறோம். இத்துடன் குழி, மா, வேலி என்னும் வேறு நில அளவைகளும் நடைமுறையில் இருந்தன. நீர்ப்பாசனவரி தனியாக வசூலிக்கப்பட்டது. இதற்கு வாய்க்கால் பாட்டம் என்று பெயர். அரசரின் முடிசூட்டு விழாவின்போது வரித்தள்ளுபடி செய்யும் வழக்கம் உண்டு. சில பண்டிகைகளின்போதும் வரி வசூலிக்கப்பட்டது. சிவன் கோயில், விஷ்ணு கோயில், பிராமணர்கள் பெற்றிருந்த நிலங்கள், மடங்கள் பெற்றிருந்த நிலங்கள் ஆகியவை வரிவிலக்குப் பெற்றன.

2.1.5 நீதி

சங்க காலப் பாண்டியர் சிறப்பான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் பெற்றிருந்தனர். பிற்காலப் பாண்டியரின் நீதி நிர்வாகம் பற்றி அறிந்துகொள்வதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. பெரும்பாலான வழக்குகளைக் கிராம சபைகளே தீர்த்து வைத்தன. கிராம சபைகளில் தீர்க்க முடியாமல் நெடுங்காலம் தொடர்ந்த வழக்குகளை அரசருடைய நீதிமன்றம் தீர்த்து வைத்தது. பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.