2.2 சமுதாய நிலை

பிற்காலப் பாண்டியர் காலச் சமுதாயம் சாதியின் அடிப்படையில் அமைந்திருந்தது. சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்தது. கல்வி வளர்ச்சியும் நல்ல நிலையில் இருந்தது.

2.2.1 சாதிப் பாகுபாடு

சமுதாயத்தில் சாதிப்பிரிவுகளும் பாகுபாடும் காணப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் தச்சர், உவச்சர், கணக்கர், மருத்துவர், நாவிதர் போன்ற சாதிப்பிரிவுகள் இருந்தன. வேளாளர்கள் புத்திரர் என்றும் நாட்டு மக்கள் என்றும் இருவேறு பெயர்களால் அழைக்கப்பட்டனர். வேளாண் தொழிலைச் செய்து வந்த மக்களும் இருந்தனர். மேலும் அடிமை முறை நடைமுறையில் இருந்தது. வைசிய குலத்தைச் சார்ந்தவர்கள் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் நகரத்தார் என்றும் செட்டி என்றும் வழங்கப்பட்டனர். கோனார், பிள்ளை முதலிய சாதிப் பிரிவினரும் இருந்தனர்.

சமுதாயத்தில் வலங்கை என்றும் இடங்கை என்றும் இருபிரிவினர் இருந்தனர். இவ்விரு பிரிவினரிலும் சுமார் 98 கிளைப்பிரிவினர் இருந்ததாக அறியமுடிகிறது.

வறட்சியான பகுதியில் குடியிருப்புகள் இல்லை. வறட்சியான பகுதிகளில் மக்கள் குடியேறினால் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. அக்காலத்தில் இராமநாதபுரம் போன்ற வளமற்ற இடங்களும் இருந்தன.

2.2.2 பெண்கள் நிலை

சமுதாயத்தில் பெண்கள் உயர்நிலையில் இருந்தனர். ஆண்களும் பெண்களும் சரிசமமாகக் கருதப்பட்டனர். பிற்காலப் பாண்டியர் காலத்தில் நியாயத்தார் என்னும் அவை ஒன்று இருந்தது. இவ்வவையில் பெண் ஒருவர் உறுப்பினராகச் செயல்பட்டார். அதே சமயத்தில் பெண்கள் கூலியாட்களாகவும் பணி செய்து வந்தனர். பாய்முடைதல், நெசவு ஆகியன அவர்கள் செய்த முக்கியத் தொழில்களாகும். இடையர் மகளிர் தயிர், மோர், வெண்ணெய் முதலியவற்றை விற்று வந்தனர். உழவுத் தொழில் செய்தோரின் பெண்கள் நாற்று நட்டு வந்தனர். மீனவப் பெண்கள் மீன் விற்றனர். நாட்டியப் பெண்கள் கோயில்களில் நடனமாடினார்கள்.

இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பெண்கள் கோயில்களில் தங்கி இருந்து நடனமாடுவதிலும், இசை இசைப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் ஏழைப் பெண்களும் இருந்தனர். செல்வந்தப் பெண்களும் இருந்தனர். இவர்களது பணி கோயில்களைச் சுத்தம் செய்வதாகும்.

கணவன் இறந்த பின்னர் அவனது ஈமத்தீயில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் நிலவியது. உடன்கட்டை ஏறிய பெண்களைப் பற்றிச் சமுதாயம் உயர்வாக எண்ணியது என்று மார்க்கோ போலோ வியந்து கூறுகிறார்.

2.2.3 கல்வி வளர்ச்சி

தமிழ் நாட்டில் கல்வி போதிப்பதற்கென்று கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன. கல்வியில் மேம்பட்டிருந்த அந்தணர் ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கல்வி போதித்தனர். அவ்வாசிரியர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. மடங்களிலும், கோயில்களிலும் நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன. சிதம்பரத்தில் 13ஆம் நூற்றாண்டில் ஒரு நூலகம் இயங்கி வந்தது என்பர். இதனைச் சுவாமித்தேவர் என்பவர் தொடங்கி வைத்தார்; பல்லவ தரையன் என்பவர் கண்காணித்து வந்தார். மதுரையிலுள்ள திருமாலிருஞ்சோலையில் அமைந்திருந்த பல்கலைக்கழகம் மருத்துவக் கல்வி புகட்டியது. சேரன்மாதேவியில் ஒரு நூலகம் இயங்கி வந்தததற்குச் சான்றுகள் உள்ளன என்பர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
13ஆம் நூற்றாண்டில் யாரது ஆட்சி மேலோங்கி இருந்தது?
2.
படையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
3.
வாரிய உறுப்பினர்கள் எம்முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
4.
நிலங்களை அளப்பதற்குப் பயன்படுத்திய கோல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
5.
13ஆம் நூற்றாண்டில் இருந்த ஏதேனும் இரு சாதிப்பிரிவுகளைக் கூறுக.
6.
நகரத்தார் என்பவர் யார்?
7.
உடன்கட்டை ஏறும் வழக்கம் பிற்காலப் பாண்டியர் காலத்தில் இருந்ததா?
8.
சிதம்பரத்தில் நூலகத்தைத் தொடங்கி வைத்தவர் யார்?