3.1 இசுலாமியரின் படையெடுப்பு
காரணங்கள்
இசுலாமியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுப்பதற்குப்
பல காரணங்கள் உண்டு. இசுலாமியர்கள் பொதுவாகத் தங்களது மதத்தை எங்கும் பரப்ப
வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததும், தமிழகத்தில் ஆண்டு வந்த மன்னர்களிடையே
ஒற்றுமையின்மை காணப்பட்டதும், அதோடு பாண்டிய நாட்டு அரசாட்சிக்கு வாரிசு
உரிமைப் போர் நடைபெற்றதும், தமிழகத்தில் ஏராளமான செல்வங்கள் குவிந்திருந்ததும்
இசுலாமியர் படையெடுப்புக்குக் காரணங்கள் ஆகும்.
3.1.1 இசுலாமிய மதத்தைப்
பரப்புதல்
இசுலாமியருக்குத் தங்கள் மதத்தை எங்கும் பரப்பவேண்டும்
என்ற உணர்வு பொதுவாக உண்டு. எனவே வட இந்தியாவில் ஆட்சி செய்துவந்த இசுலாமிய
அரசர்கள் தென் இந்தியாவில் நுழைந்து தங்களது இசுலாமிய மதத்தைப் பரப்ப எண்ணினர்.
அதன்பொருட்டுத் தென் இந்தியாவின் மீது படையெடுப்பதைத் தங்கள் புனிதக் கடமையாக
எண்ணிப் போர் தொடுத்தனர். அலாவுதீன் கில்ஜி என்ற கில்ஜி வம்சத்தைச்
சேர்ந்த மன்னன் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அங்கு இசுலாமிய சமயத்தைப் பரப்ப
எண்ணினான். அதற்கான படையெடுப்பு மாலிக்காபூர் தலைமையில் நடைபெற்றது.
இதனிடையில் வீரபாண்டியன் படையில் இருந்த சுமார் 20000 இசுலாமியப் போர் வீரர்கள்
மாலிக்காபூர் பக்கம் சென்று சேர்ந்து விட்டனர். இதற்கு மதமே காரணமாகும் என்பர்.
மேலும் மாலிக்காபூர் இராமேஸ்வரத்திலுள்ள செல்வங்களைக் கொள்ளையடித்து விட்டு
அங்கு ஒரு மசூதியைக் கட்டினான்.
3.1.2 பாண்டிய நாட்டில் வாரிசு உரிமைப் போர்
மாறவர்மன் குலசேகர
பாண்டியனுக்குச் சடையவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் என்னும் இரு
புதல்வர்கள் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன்;
வீரபாண்டியன் காமக்கிழத்தியின் மகன். குலசேகரபாண்டியன் முறைப்படி பட்டம் சூடுவதற்கு
உரிய சுந்தரபாண்டியனைப்
புறக்கணித்துவிட்டு, வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான்.
தனக்கு உரிமை இருந்தும்
நாடாளும் உரிமையைத்
தனக்கு அளிக்காமல்,
தனது சகோதரனுக்கு
அளித்ததைக் கண்டு சுந்தரபாண்டியன் கோபமுற்றான். பின்பு கி.பி. 1310இல்
சுந்தரபாண்டியன் தனது தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையில் முடிசூட்டிக் கொண்டான்.
இதனால்
இரு சகோதரர்களுக்கு
இடையே போர் மூண்டது.
இதில் சுந்தரபாண்டியன்
தோல்வியுற்று ஓடிவிட்டான்.
பிறகு அலாவுதீன்
கில்ஜியின் போர்ப்படைத்
தளபதியான
மாலிக்காபூரின் உதவியைச் சுந்தரபாண்டியன் நாடினான். மாலிக்காபூர் படை
உதவியுடன் வந்து
சுந்தரபாண்டியன் போரிட்டதால் வீரபாண்டியன் அஞ்சி ஓடிவிட்டான்.
மாலிக்காபூர் மதுரையைத்
தாக்கிச்
செல்வங்களைச்
சூறையாடினான். இந்த வாரிசு உரிமைப் போரினால் இரு சகோதரர்களும் வெவ்வேறு மனப்பான்மை
கொண்டிருந்த காரணத்தால் டெல்லியிலிருந்து வந்த மாலிக்காபூர் பாண்டிய நாட்டில்
எளிதாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
3.1.3 செல்வங்களைத் திரட்டுதல்
பாண்டிய நாட்டு மக்கள்
தொன்றுதொட்டு வாணிபத்தில் ஈடுபட்டும், பல்வகையான தொழில்களைச்
செய்தும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உழைத்தனர். இதனால் பாண்டிய நாடும்
சரி, சேர, சோழ நாடுகளாக இருந்தாலும் சரி
அவை
எல்லா நாடுகளும் செல்வச்
செழிப்பில் இருந்தன. இதனை அறிந்து கொண்ட அலாவுதீன் கில்ஜி தனது தளபதி மாலிக்காபூர்
உதவியுடன் எங்கெல்லாம் செல்வங்கள்
காணப்படுகின்றனவோ
அங்கெல்லாம் சூறையாடிப்
பெருஞ்செல்வத்தினைத்
திரட்டலானான்.
மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக் கண்ணனூர்க் கொப்பம்
சென்றான். அங்கிருந்த பெருஞ்செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டான். அச்சமயத்தில்
தில்லைக் கோயில் செல்வங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கிருந்த பொன்னையும்
மணியையும் கைப்பற்றினான். பின்பு அக்கோயிலைத் தீக்கு இரையாக்கினான். இச்செய்தியை
தரீக்-இ-அலைய் (Tarikh-i-Alai) என்னும் நூலில் அமீர்குஸ்ரு என்பவர்
குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் மாலிக்காபூர் தில்லையிலிருந்து மதுரை செல்லும்
வழியில் திருவரங்கம் கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தான். மதுரைக்குள் புகுந்து
அங்குள்ள சொக்கநாதர் கோயில் செல்வங்களைக் கைப்பற்றினான். பின்பு இராமேஸ்வரம்
சென்று கோயிலிலுள்ள பொன்னாலான ஆபரணங்களையும், சிலைகளையும், யானைகளையும் கைப்பற்றினான்.
கடைசியில் மாலிக்காபூர் 512 யானைகள், 5000 குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள
ஆபரணங்கள், விலை மதிப்பற்ற வைரங்கள், முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை
எடுத்துக் கொண்டு டெல்லிக்குத் திரும்பினான்.
|