4.0 பாட முன்னுரை

நாயக்க மன்னர்களின் வரலாறு விசயநகரப் பேரரசுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பது பற்றி இப்பாடத்தில் காண இருக்கிறோம். இந்த நாயக்க மன்னர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் முதலில் ஆளுநர்களாக ஆட்சி புரிந்து வந்து, பின்பு தனியாட்சியினை மேற்கொண்டனர் என்பதனைத் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்நாயக்க மன்னர்கள் போர்களில் ஈடுபட்டு வெற்றி கொண்டனர் என்றும், திருமலை நாயக்கர், மங்கம்மாள் ஆகியோர் சிறந்த நாயக்க மன்னர்களாக விளங்கினர் என்றும் இப்பாடத்தின்கண் காண இருக்கிறோம். திருமணத்திற்குப் பெண் கொடுக்க மறுத்ததால் போர் மூண்டது என்பது பற்றிய செய்தியையும் இப்பாடத்தின் மூலம் புரிந்து கொள்ள இருக்கிறோம்.

நாயக்க மன்னர்கள் பல சீர்திருத்தங்களைத் தாங்கள் ஆண்ட நிலப்பரப்பில் செய்து வந்தனர். கட்டடக்கலைப் பிரியர்களாக வாழ்ந்தார்கள். கோயில்களுக்கு அறப்பணிகளைச் செய்து வந்தனர். பாளையப்பட்டு முறை போன்றவைகளைப் புகுத்தினர். இவை பற்றிய செய்திகளையெல்லாம் இப்பாடத்தில் விரிவாகக் காண இருக்கிறோம்.