5.1 மைய அரசு முறை அரசர்களின் வரலாறு மட்டுமே முழுமையான நாட்டு வரலாறு ஆகிவிடாது. அதனோடு அரசியல் முறைகளையும், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலைகளையும், பொருளாதார சமய நடவடிக்கைகளையும், இலக்கியப் பணிகளையும், கலையார்வத்தையும் எடுத்துக் காட்டுவதும் வேண்டும். இவ்விரண்டும் அமைந்த வரலாறே முழுமையான வரலாறு ஆகும். பொதுவாக, நாயக்கர் தெலுங்கராய் இருந்த போதிலும் பண்டைத் தமிழ் அரசர் பாதையிலேயே அரசாட்சி புரிந்தனர் எனலாம். அமைதிக்கால ஆட்சியும், போர்க்காலப் படையாட்சியும் கலந்ததொரு வல்லாட்சியே நாயக்கர் கைக்கொண்ட ஆட்சி முறையாகும். முகமதியப் படையெடுப்பு முதல் பல்வேறு படையெடுப்புகளைச் சமாளிக்க வேண்டிய தேவை இருந்ததால் நாயக்கர் இத்தகைய ஆட்சி முறையை மேற்கொண்டனர் என்று கூறலாம். மத்திய அரசாக விளங்கிய நாயக்கர் அரசு, அதிகாரம் முழுவதையும் தன்னிடத்திலேயே வைத்துக் கொள்ளாமல், அதிகாரத்தைப் பரவலாக்கப் பாளையப்பட்டு முறையைப் புகுத்தியது. இதன் மூலம் ஸ்தல ஆட்சி முறைக்கு வழி வகுக்கப்பட்டிருந்தது. அந்தப் பாளையப்பட்டுகளுக்கு நீதி வழங்குவதற்கும், வரி வாங்குவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் பாரம்பரிய முறையில்தான் மத்திய அரசாங்க அமைப்பு இருந்து வந்தது. பட்டத்திற்கு உரியவர் சிறுவயதினராக இருந்தால் அவருடைய நெருங்கிய உறவினர் அவரது சார்பில் ஆட்சி புரிவதுண்டு. இதற்குச் சான்று மதுரை நாயக்கர் விசய ரங்க சொக்கநாதர் குழந்தையாக இருந்த காரணத்தால் அவரது பாட்டியான மங்கம்மாள் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தாள். மகன் இல்லையென்றால் மகன்மை (சுவீகாரம்) செய்து கொண்டு அவன் சார்பில் ஆட்சி செய்வது உண்டு. இதற்குச் சான்றாக மீனாட்சி அரசியைக் கூறலாம். நாயக்கர்கள் அமைச்சர் குழுவின் உதவியோடு ஆட்சி செய்தார்கள். ஆயினும் அமைச்சர் குழுவுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக ஆட்சியாளருக்கு எல்லையற்ற அதிகாரம் இருந்தது. நாயக்கர்கள் விசயநகரப் பேரரசிற்கு அடங்கியிருந்த காலத்திலும் நாணயங்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்குச் சான்று : தஞ்சை நாயக்கராகிய செவ்வப்ப நாயக்கர் அவரது ஆட்சியில் நாணயங்களை வெளியிட்டார். தளவாய் என்னும் பதவி உயர் பதவியாகக் கருதப்பட்டது. அமைதிக்கால ஆட்சிப் பொறுப்பும், போர்க்காலப் படையாட்சிப் பொறுப்பும் இணைந்த ஒரு பதவியாகும் இது. உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும், வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குவதும் தளவாயின் பணியாக இருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசருக்கு அடுத்து அதிகாரமுள்ளவராக இருந்தவர் தளவாய் எனலாம். (தளவாய் = படைத்தலைவனைக் குறிக்க நாயக்கர் காலத்தில் வழங்கிய பெயர்.) தளவாய்க்கு அடுத்த முக்கியமான பதவி பிரதானி என்பதாகும். இப்பதவி இக்கால நிதியமைச்சர் பதவியாகும். அரசாங்க வரவு செலவுக் கணக்கைப் பார்ப்பதே பிரதானியின் வேலை, எனினும் உள்நாட்டு ஆட்சியில் இவருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. சாதாரண அமைச்சரைக் காட்டிலும் மேம்பட்டவர் பிரதானி. பிரதானிக்கு அடுத்த பெரும் பதவி வகித்தவர் இராயசம் ஆவார். இவர் அரசாங்கச் செயலாளர்; நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த முக்கியமான அமைச்சர். இவருக்கும் மிகுந்த அதிகாரம் இருந்தது. மேலே கூறிய மூன்று பதவிகளே மதுரை நாயக்கர் ஆட்சிக் குழுவில் அதிகாரமும், செல்வாக்கும் மிகுந்தனவாகும். இவற்றைத் தவிர மற்ற முக்கியமான அலுவலர்கள் அரசாங்கக் கணக்கர், தானாபதி ஆகிய இருவரும் ஆவர். இவர்களுள் முன்னவர் அரசாங்கக் கணக்குத் துறைத்தலைவர்; பின்னவர் அரசர் சார்பில் வெளிநாட்டு வேந்தர்களின் விவகாரங்களைக் கவனிப்பவர். மேலும் திருமந்திர ஓலை நாயகம் என்ற ஓர் அலுவலரும் இருந்தார். வேந்தன் வாய்மொழியாக இட்ட ஆணைகளை ஓலையில் எழுதி அனுப்புபவரே திருமந்திர ஓலை நாயகம் ஆவார். அனைத்து அதிகாரங்களும் பொருந்திய நிலை இருந்தாலும், பொதுவாக மக்களின் கருத்துக்கு மதிப்பளித்தே நாயக்கர் ஆட்சி நடந்தது எனலாம். பெரும்பாலான நாயக்க மன்னர்கள் சமயப் பொறை உடையவர்களாகவே விளங்கியுள்ளனர். அவர்கள் வைணவ சமயத்தினைச் சார்ந்திருந்தபோதிலும், சைவ சமயக் கோயில்களையும் புறக்கணிக்கவில்லை. முகமதிய, கிறித்தவ சமயங்களையும் ஒதுக்கிவிடவில்லை. எல்லாச் சமயங்களுக்கும் உதவி செய்தனர். |