5.2 மாநில அரசு முறை

மத்திய அரசையும், பாளையப்பட்டுகளையும் இணைக்க மாநில அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களையே ஆளுநர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். இவர்களும் அதிக அதிகாரம் உடையவர்களாக விளங்கியுள்ளனர். இவர்களுள் சிலர் மன்னரை விடவும் அதிக அதிகாரம் உடையவர்களாக இருந்துள்ளனர் என்பது கி.பி.1644இல் எழுதப்பட்ட ஏசு கழகத் தொண்டர்களின் கடிதம் மூலம் தெரிய வருகிறது.

5.2.1 சிற்றூர் ஆட்சி

மதுரை, தஞ்சை போன்ற பெருநாடுகள் மாநிலங்களாகவும், அம்மாநிலங்கள் நாடுகளாகவும் அந்நாடுகள் சிற்றூர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. நாடு என்பது இராச்சியம், தேசம், மண்டலம், ராஷ்டிரம் எனவும் கூறப்பட்டது. மறவர் நாட்டிலுள்ள தொகுதிகளுக்கு மாகாணங்கள் என்றும், கள்ளர் நாட்டிலுள்ள தொகுதிகளுக்கு நாடுகள் என்றும் பெயர்கள் வழங்கியதாகச் சொல்வதும் உண்டு. நாடுகளைச் சீமைகள் என்றும் வழங்கியுள்ளனர். சிற்றூர்களுக்கு மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குளம், குறிச்சி, பட்டி எனவும் பெயர்கள் வழங்கின. சான்று: திருமங்கலம், அம்பாசமுத்திரம், கள்ளிக்குடி, கீரனூர், சமயபுரம், பெரியகுளம், கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி.

ஒவ்வொரு சிற்றூரிலும் பல வகைப்பட்ட அலுவலர் இருந்தனர். நாயக்கர் ஆட்சியில் சிற்றூர்களில் வரிவாங்கிய அலுவலர்களுக்கு மணியக்காரர் என்பது பெயர். இவர்களுக்கு உதவியாகக் கணக்கர் உண்டு. இக்கணக்கரின் உதவியைக் கொண்டு, மணியக்காரர்கள் வசூலித்த வரிப்பணத்தைத் தம் மாகாண அதிகாரிகளிடம் கொண்டுபோய்ச் செலுத்துவார்கள். மாகாண அதிகாரிகள் அதை மறுபடியும் கணக்குப் பார்த்துப் பிரதானியிடம் இருசால் செய்வார்கள் (இருசால் – ஒப்படைப்பு). இவ்வலுவலர்களின் வேலை பாரம்பரியமானது. ஊர்க்காவல் வேலை செய்யும் அலுவலர்க்குத் தலையாரி என்று பெயர். நாயக்கர் ஆட்சியில் சிற்றூர்கள் தனியுரிமை உடையனவாயிருந்தன. ஒவ்வொரு சிற்றூரிலும் இரண்டு நீதிபதிகள் இருந்தனர்.