5.3 நீதி முறை

நாட்டில் ஆட்சியாளரே தலைமை நீதிபதியாக இருந்தார். ஆனால், அவரே எல்லா வழக்குகளையும் கேட்டு ஆராய்ந்து தீர்ப்புக் கூறவில்லை. இது கூடுமானதாகவும் இருக்க முடியாது. ஆதலால் தலைநகரில் வழக்கு மன்றம் இருந்தது. அங்கு வழக்குகளை விசாரிக்க நடுவர்கள் இருந்தார்கள். பிரதானியே நீதித்துறையைக் கவனித்து வந்தார். அவரே நீதிபதியாக இருப்பதும் உண்டு.

சிற்றூரிலும் வழக்கு மன்றம் இருந்தது. ஒவ்வொரு சிற்றூரிலும் அங்கு வாழும் பொது மக்களால் நன்கு மதிக்கப்பட்ட இருவர் நடுவர்களாக இருந்தனர். அரசர்கள் சாத்திர வல்லுநர்களோடு கலந்து பேசித் தீர்ப்பு வழங்கினர். இதற்காக வேதம் உணர்ந்த பார்ப்பனர்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

பெரும்பாலும் அரசர்கள் கோயில் வழக்குகளையும், யாருக்குக் கோயிலில் முதல் மரியாதை யாருக்கு இரண்டாம் மரியாதை, யார் யார் எந்தெந்த வாகனத்தில் செல்லலாம், யார் யார் பூணூல் அணியலாம் என்பன போன்ற வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளனர். மங்கம்மாள் சௌராஷ்டிரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளாள். ஆட்சி, ஆவணம், சாட்சி இம்மூன்றையும் நோக்கியே தீர்ப்புக் கூறப்பட்டது.

வழக்குகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார் மூலம் முடிவு செய்யப்பட்டன. வழக்குகளுக்காக மக்களுக்கு வீண்செலவு ஏற்பட்டதில்லை; காலமும் வீணானதில்லை. பெரும்பாலும் குறுகிய காலத்தில் மிகுந்த செலவின்றி வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்புகள் கூறப்பட்டன.

நாயக்கர் காலத்தில் களவுக்குக் கை, கால் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. கி.பி. 1616 ஆம் ஆண்டு நெய்வாசல் சாசனத்தின்படி, நெய்வாசலில் இருந்த கோயிலில் புகுந்து கடவுளின் நகைகளைத் திருடிய ஒருவனது கைகளுள் ஒன்று வெட்டப்பட்டு, அவனுக்கு இருந்த நிலமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இவ்வாறு நாயக்கர்கள் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதித்து, நீதியை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
நாயக்க மன்னர்கள் எந்த இனத்தவர்?
2.
நாயக்கர் அரசு அதிகாரத்தைப் பரவலாக்க எம்முறையைப் புகுத்தியது?
3.
நாயக்கர் அரசில் அரசருக்கு அடுத்து அதிகாரம் உள்ளவராக இருந்தவர் யார்?
4.
அரசாங்க வரவு செலவு கணக்கைப் பார்ப்பது யாருடைய வேலை?
5.
நாயக்க மன்னர்கள் எந்தச் சமயத்தை சார்ந்திருந்தனர்?
6.
மறவர் நாட்டிலுள்ள தொகுதிகளுக்கு என்ன பெயர்?
7.
மணியக்காரர் என்பவர் யார்?
8.
ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை நீதிபதிகள் இருந்தனர்?