5.5 சமுதாய வாழ்க்கை நாயக்கர்களின் வருகைக்கு முன்னர்த் தமிழகம் பெரும் குழப்ப நிலையில் ஆழ்ந்து கிடந்தது. எனவே நாயக்கர் ஆட்சியின் முதல் பலன் நாட்டில் ஏற்பட்ட அமைதியே ஆகும். நாயக்கர்கள் பாளையப்பட்டு முறை மூலம் ஆட்சியைச் செம்மையாக நடத்தினர். எனவே மக்களிடையே அமைதி நிலவ நாயக்கர் ஆட்சி பயன்பட்டது. பல்வேறு சாதிகள் இவர்கள் காலத்தில் இருந்தன. பார்ப்பனர்கள் சமுதாயத்தில் மதிப்புடையவர்களாக இருந்தனர். சாதிகளுள் ஒரு பிரிவு மற்றொன்றோடு கலக்காமல் பார்த்துக் கொண்டனர். கம்மாளர்களுக்குள் இருந்த ஐந்து பிரிவுகள் ஒன்றுக்கொன்று கலந்து விடுதல் கூடாது என்று 1623 ஆம் ஆண்டுச் சாசனம் கூறுகிறது. சௌராஷ்டிரர்களுக்குப் பார்ப்பனர்களைப் போலப் பூணூல் அணிந்து கொள்ள உரிமை வழங்கப்பட்டது. இடங்கைச் சாதிகள், வலங்கைச் சாதிகள் என்ற பிரிவுகளும் நாட்டில் இருந்தன. ஆடவர்கள் பெண்கள் பலரை மணந்து கொண்டனர். இப்பழக்கம் அரசர்களிடத்தும், பெருங்குடி மக்களிடத்தும் இருந்தது. திருமலை மன்னருக்கு 200 மனைவிமார்கள் இருந்தனர். திருமலை மன்னர் இறந்தபோது அத்தனை மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினர். கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியர் இருந்தனர். பொதுவாகப் பெண்கள் கல்வி கற்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. கல்விச் செல்வம் பெற்றவர்களாய் இல்லாவிட்டாலும், கேள்விச் செல்வத்தால் அறிவு பெற்றிருந்தார்கள். பெண்கள் மானமுள்ளவர்களாக வாழ்ந்தார்கள். உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. சில பெண்கள் இசை, நாட்டியம் போன்றவைகளில் தேர்ந்து விளங்கினர். ஒரு பெண் ஆணைப் போல் போர் புரியும் ஆற்றல் பெற்று, போர்த்தொழிலை மேற்கொண்டு சம்பளம் பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இதனை ஆண்டிரி பிரியர்ஸ் என்பவர் 1666இல் எழுதிய கடிதம் மூலம் அறிய முடிகிறது. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் இருந்தது. உறவினர் இறந்து விட்டால் பெண்கள் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. பிணங்களை ஆடம்பரமாக எடுக்கும் வழக்கம் இருந்தது. மந்திரத் தாயத்துகளை அணிந்து கொள்ளும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகிறது. சமரச நோக்கு ஆட்சியாளரிடம் இருந்தது. எனவே பெரிய அளவில் சமயப் பூசல் இல்லை எனலாம். எல்லாக் கோயில்களுக்கும் ஆட்சியாளர்களின் சார்பில் திருப்பணி செய்யப்பட்டது. திருமலை நாயக்கர் மதுரைக் கோயில்களில் திருவிளையாடல் விழா நடத்தவும், வேறு விழாக்கள் நிகழ்த்தவும் பல கிராமங்களை விட்டுக் கொடுத்தார். நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் வடகலை, தென்கலை என்ற இரு வைணவ இயக்கங்கள் பரவிக் கொண்டிருந்தன. இவ்விரண்டு இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டும் இருந்தன. வேதாந்த தேசிகர் வடகலை வைணவத்தையும், மணவாள மாமுனிகள் தென்கலை வைணவத்தையும் தலைமை தாங்கிப் பரப்பினர். முத்திநெறிக்கு வடமொழி வேதங்களை வழியாகக் கொண்டவர்கள் வடகலை வைணவர்கள். தென்மொழி எனப்படும் தமிழில் ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை முத்தி நெறிக்கு அடிப்படையாகக் கொண்டவர்கள் தென்கலை வைணவர்கள் வேறுபாடு காட்டும் நிலையில் வடகலை வைணவர்கள் பாதம் இல்லாத திருநாமத்தையும், தென்கலை வைணவர்கள் பாதமுள்ள திருநாமத்தையும் நெற்றியில் அணிந்து கொண்டனர். கிறித்தவ சமயம் வளர்ச்சியடையலாயிற்று, பௌத்தம், சமணம் மங்கத் தொடங்கின. மதுரைவீரன் வழிபாடு பரவலாக இருந்தது. மதுரை நாட்டில் எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்துவந்த கள்ளர்களைக் கருவறுத்துப் பொதுமக்களுக்கு நன்மை புரிந்தான் மதுரைவீரன். ஆதலால் பொதுமக்கள் இவனைத் தெய்வமாகவே வணங்கினார்கள். மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு முன்புறத்தில் மதுரைவீரனுக்குச் சிறுகோயில் இருப்பதை இன்றும் காணலாம். மேலும் நாயக்கர் காலத்தில் சக்தி வழிபாடு என்ற வழிபாடு தோன்றியதாகத் தெரிகிறது. திருமலை நாயக்கர் மதுரையில் சித்திரைத் திருவிழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி செய்தார். அடுத்து நவராத்திரி விழாவை மதுரையில் ஒன்பது நாட்கள் பெருஞ்சிறப்போடு நடத்தினார். திருமலை நாயக்கர் தமது பிறந்த நாளான பூச நாளைக் கொண்டாடும் பொருட்டுத் தைப்பூச நாளன்று மதுரையில் தெப்பத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரைமாநகரில் இன்றும் சித்திரைத் திருவிழா வைகையாற்றிலும், தெப்பத்திருவிழா வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திலும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
|